ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அலுவலர்கள்
வரும் பொழுது ஜாதிபற்றிய விவரங்களை (உள் ஜாதி உட்பட) சொல்லத் தயங்க
வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள
அறிக்கை வருமாறு:
இந்தியா முழுமையும் ஜாதிவாரி
கணக்கெடுப்புத் தொடங்கப்பட்டு விட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப் போடு
இந்தத் தகவலும் சேகரிக்கப்பட வேண்டும் என்று சமூக நீதியாளர்கள்
தரப்பிலிருந்து குரல் ஓங்கியது.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஜாதி ஒழிய வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவை என்று ஓங்கி ஒலித்தனர்.
ஜாதி இருக்க வேண்டும் - அதனை ஒழிக்கவே
கூடாது என்று காலம் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் உயர் ஜாதி ஆதிக்க
சக்திகளோ இத்தகைய கணக்கெடுப்புக் கூடாது என்று வரிந்து கட்டினர்.
இதிலிருந்து இதற்குள் புதைந்திருக்கும் மர்மம் என்ன என்பது சிந்திக்கத்தக்கதாகும்.
ஜாதி ஒழிக்கப்படவில்லையே!
ஜாதி ஒன்றும் சட்டப்படி ஒழிக்கப்படவில்லை.
மத ரீதியாகவும், சாஸ்திரங்கள் அடிப்படையிலும் ஜாதி, இந்து சமூக அமைப்பில்
கெட்டியாக பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டமும் தீண்டாமை
ஒழிப்புப் பற்றிப் பேசுகிறதே தவிர, அதற்கு மூல வித்தான ஜாதி ஒழிக என்று
எந்த இடத்திலும் கூறப்படவில்லை.
இன்னும் சொல்லப்போனால் அரசு பதிவேடுகளில்
சூத்திரன் என்று இருந்தது; அதனை ஒழிப்பதற்குப் பாடுபட்டது - குரல்
கொடுத்தது திராவிடர் இயக்கமே.
1901ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கூட சூத்திரர்கள் என்ற விவரம் தரப்பட்டு இருந்தது.
1927இல் சென்னையில் கூடிய பார்ப்பனர்
அல்லாத இளைஞர்களின் முதல் மாநில மாநாட்டில் ஜே.எஸ். கண்ணப்பர், அரசு
பதிவேடுகளிலிருந்து சூத்திரன் என்ற சொல் நீக்கப்பட வேண்டும் என்ற
தீர்மானத்தை முன் வைத்தார்.
சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்பது உட்பட ஏழு பொருள்களைக் கொண்டது (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415).
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்து நடத்தினார் தந்தை பெரியார் (26.11.1957).
ஆனாலும் இன்றளவுக்கும் ஜாதி பாதுகாப்போடு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கத்தான் செய் கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்து நடத்தினார் தந்தை பெரியார் (26.11.1957).
ஆனாலும் இன்றளவுக்கும் ஜாதி பாதுகாப்போடு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கத்தான் செய் கிறது.
அரசுக்குத் தேவை புள்ளி விவரங்கள்....
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18
இடங்களில் ஜாதி (Caste) என்ற சொல் இடம் பெற்றுள்ளது! இந்த ஜாதி
முறையால்தான் பெரும்பாலான மக்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகள்
மறுக்கப்பட்டன. சமூகத்தில் பிறவியின் அடிப்படையிலேயே ஏற்றத் தாழ்வு - நிலை
நிறுத்தப்பட்டது. பிறப்பில் என்ன ஜாதியோ - அதுதான் சுடுகாடுவரை என்ற நிலை
இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஜாதியின் காரணமாக பல வகை
களிலும் பாதிக்கப்பட்டவர்கள் உரிமை மறுக்கப்பட்டவர் களைப் பற்றிய புள்ளி
விவரங்களை சேகரிப்பதன் மூலம் அத்தகையவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளை
அளிக்க முடியும், அரசின் நல்வாழ்வுத் திட்டங்கள் இத்தகையவர்களுக்கும்
போய்ச் சேர சரியான புள்ளி விவரம் தேவைப்படுகிறது.
நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு பற்றிய
வழக்குகள் வரும்போது நீதிமன்றம் கேட்கும் முதல் கேள்வி - எந்தப் புள்ளி
விவரத்தின் அடிப்படையில் (Criteria) இத்தனை சதவிகிதம் என்ற வினாவைத்தான்
முன் வைக்கின்றது. அதற்காகவும் இந்தப் புள்ளி விவரம் தேவைப்படுகிறது.
ஓர் அரசுக்கு குடிமக்களின் சமூக, கல்வி,
பொருளா தாரம், வேலை வாய்ப்பு நிலை எந்த அளவில் இருக்கிறது என்பதற்கு
அடிப்படைப் புள்ளி விவரங்கள் அவசியம் தேவைப்படுகின்றன.
ஜாதியை ஒழிக்க ஜாதி விவரம் தேவை!
ஜாதி ஒழிக்கப்பட வேண்டுமானால் கல்வி, வேலை
வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட - கீழ்ஜாதியாக ஆக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கு
நூறு படித்தாக வேண்டும்; (சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு
என்று அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பது மிக முக்கியம்).
அதற்கு ஜாதி பற்றிய புள்ளி விவரம் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் ஜாதியை ஒழிக்க - இந்த
ஜாதிவாரிக் கணக்கெடுப்புத் தேவை. கல்வி வளர்ந் தால்தான் ஜாதி ஒழிய
முடியும். மேலெழுந்தவாரியாகப் பார்த்து ஜாதி விவரத்தை சொல்லத் தயங்க
வேண்டாம் என்று ஜாதி ஒழிப்பு இயக்கம் என்ற முறையில் தெரிவித்துக்
கொள்கிறோம்.
ஜாதி வாரிக் கணக்கெடுப்பில் ஒரு முக்கிய
அம்சம் விடுபட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜாதியில் உள் ஜாதி பற்றிய
விவரம் கேட்கப்படுவதில்லை என்பதுதான் அந்தக் குற்றச் சாற்று. ஜாதிவாரிக்
கணக்கெடுப்பு என்று தொடங்கப்பட்ட பிறகு - அதில் ஏன் இந்த விடுபடல்?
உள் ஜாதி
முதலியார் என்றால் அதில் இடஒதுக்கீடு
பெறாத சைவ முதலியார்களும் உண்டு. இடஒதுக்கீடு பெறும் செங்குந்த
முதலியார்களும் உண்டு. இதில் வெறும் முதலியார் என்றால் புள்ளி விவரம்
சேகரிப்பதன் நோக்கமே அடிபட்டுப் போகிறதே! அதில் எது B.C யோ அதைக்
குறிப்பிட்டுப் பதிவு செய்ய வற்புறுத்திடல் வேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததியர்களுக்கு
உள் ஒதுக்கீடு தமிழ்நாட்டில் உள்ளது. இந்த நிலையில் பொதுவாக
தாழ்த்தப்பட்டவர் என்று சொன்னால் அது எப்படி சரியாகும்?
இத்தகைய தவறுகள் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
இந்தியாவில் திராவிடர் கழகம் உள்ளிட்ட
சமூகநீதி சிந்தனையாளர்களின் அழுத்தமான வலியுறுத்தலின் காரணமாகத்தான் இந்த
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு சம்மதித்தது என்பதையும்
இந்நேரத்தில் நினைவூட்டுகிறோம்.
இந்த வாய்ப்பை வீணாக்கி, விழலுக்கிறைத்த நீராக்கி விடக் கூடாது!
கி.வீரமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக