புதன், 25 ஏப்ரல், 2012

ஜனாதிபதி தேர்தல்: கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா!

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து கூட்டணி கட்சியான திமுகவின் தலைவர் கருணாநிதியுடன் பேச காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிறப்பு தூதுவரை அனுப்பியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் கூட இல்லை. இந்நிலையில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதில் அனைத்து அரசியல் கட்சிகளும் முனைப்பாக உள்ளன. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் தீவிரமாக உள்ளது. மேலும் இது தொடர்பாக கூட்டணி கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திமுகவின் தலைவர் கருணாநிதியை சந்தித்து பேச காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிறப்பு தூதுவரை அனுப்பி பேச்சு நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. வந்து போனது யார் என்ற விவரம் தெரியவில்லை.

2ஜி விவகாரத்தில் ராசா-கனிமொழி கைதுகளுக்குப் பிறகு கருணாநிதியை காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பது அறவே நின்று போய்விட்டது. குறிப்பாக சென்னை வரும்போதெல்லாம் கருணாநிதியை சந்திக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அந்த சந்திப்புகளை எல்லாம் தவிர்த்து பல காலமாகிவிட்டது. அதே போல பிரதமர் அலுவலகத்துறை இணையமைச்சர் நாராயணசாமி முன்பு அடிக்கடி கருணாநிதியை சந்தித்து தலைவரே என்று அன்பொழுகுவார். ஆனால், அவரையும் இப்போது கருணாநிதியுடன் பார்க்க முடியவில்லை.

இந் நிலையில் கருணாநிதிக்கு சோனியா தூதரை அனுப்பியது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியை வேட்பாளாராக்க காங்கிரஸ் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே ஹமீது அன்சாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அதிமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அப்துல் கலாம் இல்லாவிட்டால் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மக்களவை சபாநாயகருமான நஜ்மா ஹெப்துல்லாவை நிறுத்த வேண்டும் என ஜெயலலிதா கூறி வருவதாகத் தெரிகிறது.

இவர்கள் தவிர ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அரசியல் தலைவர் அல்லாத ஒருவர் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால், கலாம்- நஜ்மா ஹெப்துல்லா இருவருமே சோனியாவுக்கு சரிப்பட்டு வராதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: