சனி, 28 ஏப்ரல், 2012

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவை சம்பந்தப்படுத்துவது

Nithyanandaமீனாட்சி அம்மன் கோயிலை மதுரை ஆதீனத்துக்குள் கொண்டு வருவார் நித்யானந்தா! - மதுரை ஆதீனம்

மதுரை: இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள நித்தியானந்தா, மதுரை மீனாட்சியம்மன் கோயிலை மதுரை ஆதீன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார், என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக நித்யானந்தாவை நேற்று பெங்களூரில் நடந்த விழாவில், மதுரை ஆதீனம் பட்டம் சூட்டினார்.
பல்வேறு குற்றச்சாட்டுகள், வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் பெங்களூரில் தங்கி உள்ள மதுரை ஆதீனம் அளித்துள்ள பேட்டி:
கேள்வி: மதுரையின் இளைய ஆதீனமாக திடீரென நித்யானந்தாவை நியமித்தது ஏன்?
பதில்: இப்போதும் நாம்தான் தலைமை பொறுப்பில் இருக்கிறோம். நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டுள்ளது. அவர் எனது கட்டளையின்படி பணிகளை கவனிப்பார்.
கே: இனி நித்யானந்தா மதுரையிலேயே தங்கி ஆன்மீக பணியில் ஈடுபடுவாரா?
ப: நித்யானந்தாவுக்கு உலக அளவில் தியான பீடங்கள் உள்ளன. பெங்களூரில் தலைமை தியான பீடம் அமைந்துள்ளது. அந்த பணிகளையும் அவர் கவனிக்க வேண்டும். எனவே மதுரைக்கு அடிக்கடி வந்து ஆன்மீக பணிகளை கவனிப்பார்.
கே: மீனாட்சி அம்மன் கோவிலை, மதுரை ஆதீனத்திற்குள் கொண்டு வருவேன் என்று நித்யானந்தா கூறி இருக்கிறாரே?
ப: மீனாட்சி அம்மன் கோவில் கடந்த 1865-ம் ஆண்டு வரை மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. எனவேதான் மீனாட்சி அம்மன் கோவிலை மீண்டும் ஆதீன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்று அவர் கூறி இருக்கிறார். அவர் மதுரை சன்னிதானத்திற்கு மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டுக்கொடுப்பார். அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடுதான்.
கே: இதுவரை நீங்கள் இந்த முயற்சியில் ஈடுபட வில்லையே ஏன்?

ப: எனக்கு நிறைய ஆன்மீக பணிகள் இருந்த காரணத்தால் அதுபற்றி சிந்திக்கவில்லை. ஆனால் சிவபெருமானின் அருள் பெற்ற நித்யானந்தாவால் இது முடியும் என்று நினைக்கிறேன்.
கே: நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்குவது ஏற்புடையதா?

ப: நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவை சம்பந்தப்படுத்துவது அறியாமையினாலும், பொறாமையினாலும், புரிந்து கொள்ளுதல் இல்லாததாலும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகளில் எள்ளளவும் உண்மை இல்லை. அவரது நடவடிக்கைகளை பலதடவை கவனித்த பின்னர்தான் இந்த பொறுப்பிற்கு அவர் தகுதியானவர் என்று முடிவு செய்தேன்.

கே:
மதுரையில் நித்யானந்தாவுக்கு விழா எடுக்கப்படுமா?

ப: இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நானும், நித்யானந்தாவும் மதுரை வருகிறோம். நாளை மதுரை ஆதீனத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறோம்.

ஜூன் மாதம் 5-ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தங்க சிம்மாசனம், தங்க செங்கோல் ஆகியவற்றை நித்யானந்தா எனக்கு வழங்குகிறார். அப்போது இளைய ஆதீனமான நித்யானந்தாவுக்கு கவுரவம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: