தஞ்சை போலீஸை வெலவெலக்க வைத்த ரங்கா!
நடராஜன் விவகாரத்தில் சென்னையில் இருந்து ‘சிக்னல்’ வந்துவிட்டதா என்ற குழப்பம் திடீரென ஏற்பட்டுள்ளது. காரணம், நடராஜன்மீது புகார் கொடுத்த ஒருவர் திடீரென, “நடராஜன் மீது தவறு ஏதுமில்லை என்று இப்போதுதான் புரிந்து கொண்டேன். எனது பழைய மனுவை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்” என்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துவிட்டு போயிருக்கிறார். இவருக்கு இந்தி திடீர் ஜானோதயம், சும்மா வந்திருக்க முடியாதே ?
முதல்வர் ஜெயலலிதாவின் ‘மீண்டும் தோழி’ சசிகலாவின் கணவர் நடாஜன் மீது பதிவு செய்யப்பட்ட 6-வது வழக்கு இது. ஏற்கனவே 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடராஜனுக்கு 3 வழக்குகளில் ஜாமீன் கிடைத்திருந்தது. இரு வழக்குகளில் ஜாமீன் கிடைக்காத நிலையில் அவர் சிறையில் இருந்தபோது இந்த 6-வது வழக்கு போடப்பட்டிருந்தது.
6-வது வழக்கில் நடராஜனுக்கு எதிராக புகார் கொடுத்திருந்தவர், தஞ்சை அன்பு நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார ஆட்சி அலுவலர் ரங்கராஜன்.
இவருக்கு என்ன சிக்கல்?
தனக்கு சொந்தமான 22 சென்ட் நிலத்தை அபகரித்து, அப்பகுதியில் இருந்த மூங்கில் மற்றும் தென்னை மரங்களை பொக்லைன் எந்திரத்தை வைத்து சேதப்படுத்தியதாக நடராஜன் மற்றும் அவரது சகோதரர் சுவாமிநாதன் மீது இந்த ரங்கராஜன் புகார் கொடுத்திருந்தார். அவரின் புகாரின் அடிப்படையில், நடராஜன் மற்றும் சுவாமிநாதன் மீது நிலஅபகரிப்பு, கொலை மிரட்டல், பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நடராஜன், இதற்காகவும் ஒருமுறை கைது செய்யப்பட்டார். இதுதான் பின்னணி.
இன்று இந்த ரங்கராஜன், திடீரென தஞ்சை கோர்ட்டில், புதிய மனு ஒன்றுடன் வந்து இறங்கினார்.
“நடராஜன் மற்றும் அவரது சகோதரர் சுவாமிநாதன் ஆகியோர் மீது தவறுதலாக வழக்கு தொடர்ந்து விட்டேன்; அந்த வழக்கில் குறிப்பிட்டபடி நிலஅபகரிப்பு ஏதும் நடக்கவில்லை. சம்பந்தப்பட்ட நிலத்தை சுவாமிநாதன் விலைக்கு வாங்கி, முறைப்படி பதிவு செய்திருப்பதாக தற்போது விசாரித்து தெரிந்த கொண்டேன். எனவே நான் அவர்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுகிறேன்” என்கிறது அவரது புதிய மனு!
இப்படியான வழக்குகளில் திடீர் ஞானோதயம் ஏற்படுகிறது என்றால், அதற்கு அர்த்தமே வேறு. அதுதான் ‘சிக்னல் வந்துவிட்டதோ’ என்ற சந்தேகம் வந்திருக்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக