சனி, 24 மார்ச், 2012

சென்னை பார்ப்பனர்களே. தமிழை கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி

மெரினா படம் சென்னையை சரியாகதானே காட்டியது?
-சிவகாமியின் செல்வன், திருத்துறைப்பூண்டி
சென்னையை சரியாக காட்டவில்லை. ஆனால், மோசமாகவும் காட்டவில்லை. மற்றபடி தமிழ் சினிமா சென்னையை, சென்னை மக்களை சென்னை மொழியை. இழிவானதாக இழிவானவர்களாக தொடர்ந்து சித்திரித்துக் கொண்டு வந்திருக்கிறது.
குறிப்பாக சென்னை மொழியை மிக கேவலமாக அவமானபடுத்திக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் பேசுவது போன்று செயற்கையான, சென்னை தமிழை சென்னையில் நீங்கள் எங்குமே பார்க்க முடியாது.
சென்னை தமிழை இப்படி கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தியதற்கான முழு காரணமும் சென்னை வாழ் பார்ப்பனர்களே.
சென்னையின் பூர்வீக குடிகளான தாழ்த்தப்பட்ட . வன்னிய, மீனவ மக்களை பார்ப்பனர்களின் நாடகங்களில் ரவுடிகளாக சித்திரித்து, அந்த கதாபாத்திரத்தை பார்ப்பனரே ஏற்று, இழிவான உச்சரிப்புகள், செய்கைகள் மூலம் சென்னை மக்களையும் இனிய சென்னை மக்கள் மொழியையும் கொச்சைப்படுத்தினார்கள்.
அதில் சோ போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஜாம்பஜார் ஜக்கு போன்ற வேடங்களில் அவர் பேசிய மொழி இந்த உலகத்தி்ல் எங்கேயும் யாராலும் பேசப்படாத மொழி.
நாடகத்தின் தொடர்ச்சியாக சினிமாவுக்கு வந்த பார்ப்பனர்கள், சென்னை சேரி மக்களுக்கு எதிரான கருத்தோடும், கதாபாத்திரத்தோடுமே வந்தார்கள். மதுரை மற்றும் கோவை பகுதிகளில் இருநது சினிமாவிற்கு வந்த இளைஞர்களும்கூட. சென்னை மொழியை குறித்து பார்ப்பனர்கள் கற்றுத் தந்த கண்ணோட்டத்தோட படம் எடுத்தார்கள்.
உண்மையில் சென்னை தமிழ் என்பது, சென்னையில் மட்டும் பேசப்படுகிற மொழியல்ல; அது வடஆற்காடு, திருவண்ணாமலை. விழுப்புரம் மாவட்டத்து பேச்சு மொழி. மிக அதிகமாக வட ஆற்காடு மாவட்ட மொழி.
கஸ்மாலம், நாஷ்ட்டா போன்ற சொற்கள் எல்லாம் உருது சொற்கள். வட ஆற்காடு மாவட்டத்தில் உருது பேசுகிற இஸ்லாமியர்கள் அதிகம். தாழ்த்தப்பட்ட மக்களும். உருது இஸ்லாமியர்களும் நெருங்கி வாழ்கிற பகுதிகளில் உருது வார்த்தைகள் கலந்து பேசுகிற தமிழே சென்னை தமிழாக அறியப்படுகிறது.
சரியாக சொன்னால், சென்னை தமிழ் என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமான ஒற்றுமையின் அடையாளம். அதற்கு சாட்சியாக சென்னை, வேலூர், ஆற்காடு, திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற நகரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளின் மத்தியில் இஸ்லாமியர்களின் பச்சை கொடி பறப்பதை பார்க்கலாம். இருவரும் கலந்தே வாழ்கிறார்கள்.
சினிமாவில், சென்னை தமிழை ஒரளவுக் சரியாக பயன்படுத்திய ஒரே தமிழ்த் திரைப்படம், வெங்கட் பிரபுவின் சென்னை 28.
சென்னை மக்களின் வாழ்க்கை குறித்து சரியான அரசியல் பார்வையோடு திரைப்படம் எடுக்கக் கூடிய வாய்ப்பு இன்றைய இயக்குநர்களில் இயக்குநர் எஸ். பி. ஜனநாதனுக்கு இருப்பதாக உணர்கிறேன். அதற்கான அறிகுறிகள் அவரின் ‘ஈ’ படத்தில் இருந்தது.
‘சென்னையில் குறிப்பாக மீனவ மக்களோடு வளர்ந்தவன்.  சென்னையை குறித்து சிறப்பான படம் எடுப்பது தனது லட்சியம்’ என்றும் என்னிடம் தெலைபேசியில் பேராண்மை படம் விமர்சனம் தொடர்பாக பேசும்போது இயக்குநர் எஸ் பி ஜனநாதன் குறிப்பிட்டிருக்கிறார்.
ரேடியோவில் ஒலிபரப்பான பேட்டி என்று நினைக்கிறேன், ஒருமுறை எழுத்தாளர் சிவசங்கரி “ச்சீ என்ன தமிழ் இதெல்லாம்..? கஸ்மாலம், நாஸ்ட்டா, கயித, குந்து’ என்று அலுத்துக்கொண்டார். இப்படி சிவங்கரி மட்டுமல்ல; தாடி வைச்சிக்கிட்டு தன்னை எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்கிற திருப்பூர் கண்ணனோ, கோபாலனோ பெயர் நினைவில்லை அவர் உட்பட ஒட்டுமொத்த பார்ப்பனர்களின் நிலையும் இதுவாகத்தான் இருக்கிறது.
‘ஸ்நானம், ஜலம், பேஷா, நன்னா, நேக்கு, நோக்கு, உக்காத்தி வைச்சி’ இதெல்லாம் உங்களுக்கு தமிழா தெரியும்போது, ‘கஸ்மாலம், நாஸ்ட்டா, பேமானி, கயித, குந்து’ இதெல்லாம்தான் எங்களுக்கு சிறப்பான தமிழ், இதுதான் எங்களின் செம்மொழி தமிழ்.
சமஸ்கிருதம் கலந்து பேசினால், உயர்வான தமிழ். மணிபிரவாள நடை.
உருது கலந்து பேசினால் மட்டமான தமிழ், இழிவான நடையா?
இது வெறுமனே மொழி பிரச்சினையல்ல. ஆயிரம் ஆண்டுகால அரசியலே இதுதான்.

கருத்துகள் இல்லை: