திங்கள், 19 மார்ச், 2012

வீரப்பனுடன் இருந்து கடத்தியவரும் கடத்தப்பட்டவரும் சந்தித்தவேளையில்

உயிரோடு இருந்து அதிரடி அட்டகாசங்கள் செய்த போதும் சரி, சுட்டுக் கொல்லப்பட்டு இத்தனை ஆண்டுகளான பிறகும் சரி... செய்திகளுக்குப் பஞ்சம் வைக்காத மனிதர் வீரப்பன்.
இந்த செய்திகள், வீரப்பன் கதைகள் பலரை இன்னும் வாழ வைப்பதைப் பார்க்க முடிகிறது.
வீரப்பனின் கதை இப்போது தமிழ் - கன்னடத்தில் பிரமாண்ட சினிமாவாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் ராஜீவ் கொலையை மையமாக வைத்து குப்பி என்ற அருமையான படத்தைத் தந்த ஏஎம்ஆர் ரமேஷ்.
கிஷோர் வீரப்பனாகவும், அர்ஜூன் போலீஸ் அதிகாரி விஜயகுமாராகவும் நடித்துள்ள படம் இது. முழுக்க முழுக்க வீரப்பன் வாழ்ந்த, அதிரடி சாகஸங்கள் செய்த, தாக்குதல் நடத்திய, சுட்டுக் கொல்லப்பட்ட இடங்களிலேயே நேரில் போய் இந்தப் படப்பிடிப்பை முடித்துள்ளனர். வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக விஜயலட்சுமி, வீரப்பன் தந்தையாக யோகி தேவராஜ் என தேர்ந்த நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் முக்கிய காட்சியாக வருவது டாக்டர் ராஜ்குமார் கடத்தல்தான்.

இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் நடிகர் அர்ஜூன் பங்கேற்றுப் பேசுகையில், "ஒரு ரியல் ஹீரோவை பற்றிய படத்தில், ரீல் ஹீரோவான நான் நடிக்கிறேன். படத்தில் எனக்கு போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடம். உயிருடன் இருக்கும் ஒருவரின் கதாபாத்திரத்தில் நடிப்பது, சவாலான விஷயம். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் பயந்தேன்.

'வனயுத்தம்' படத்தில் நடிக்கும்படி ஏ.எம்.ஆர்.ரமேஷ் என்னிடம் வந்து கேட்டபோது, நான் தயங்கினேன். வீரப்பன் கதை எல்லோருக்கும் தெரியுமே...இவர் எப்படி எடுக்கப்போகிறார்? என்று சந்தேகப்பட்டேன். ஆனால், படத்தின் `ஸ்கிரிப்ட்'டை படித்துப் பார்த்ததும் எனக்கு நம்பிக்கை வந்தது.

யார் மீது தப்பு? என்று `ஸ்கிரிப்ட்'டில் சொல்லவில்லை. ரமேஷ் இந்த 'ஸ்கிரிப்ட்'டுக்காக 12 வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கிறார். அவருடைய உழைப்பு படத்தில் தெரியும். இந்தப்படத்துக்காக சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாட்டுக்குப் போய் பாடல்களை எடுக்கவில்லை. எல்லாமே அடந்த காட்டில்தான்.

என்னை பொறுத்தவரை இது, எனக்கு ஒரு 'ஸ்பெஷல்' ஆன படம். நான் நேசிக்கும், எனக்கு பிடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்,'' என்றார்.

படத்தின் உண்மையான ஹீரோவான வீரப்பன் கிஷோர் அடக்கமாகப் பேசினார். நடிப்பும் படமும் பேசட்டும் என்றார். நல்ல பாலிசி!

இயக்குநர் ரமேஷ் பேசுகையில், "இந்தப் படத்தை எடுக்க என் வீட்டை விற்றேன். இந்த வீட்டுக்கு வாஸ்து சரியில்ல. நாம வேற வீடு வாங்கிக்கலாம் என்று கூறித்தான் விற்றேன். அந்தப் பணத்தில்தான் இந்தப் படம் எடுக்கிறேன். இதற்கெல்லாம் அமைதியாக தலையாட்டிக் கொண்டு அனுமதித்த என் மனைவிக்கு முதல் நன்றி சொல்ல வேண்டும்.

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நாளிலிருந்தே எனது ஆராய்ச்சியைத் தொடங்கினேன். ஒவ்வொரு ஜெயிலாக ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி வீரப்பன் விஷயத்தில் கைதானவர்களை பேட்டியெடுத்தேன். 250 பேரை இப்படி சந்தித்தேன். அதுமட்டுமல்ல, போலீஸ் அதிகாரி விஜயகுமாரிடமும் நிறைய தகவல்களைப் பெற்றேன்.

இரு தரப்பிலும் நடந்த உண்மை சம்பவங்களைதான் அப்படியே பதிவு செய்திருக்கிறேன். இது யாருக்கும் ஆதரவான படமும் இல்லை. எதிரான படமும் இல்லை. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு துளியும் இல்லை," என்றார்.

கன்னடத்தில் இந்தப் படத்துக்கு தலைப்பு அட்டஹாஸா!

படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்...

வீரப்பனுடன் சேர்ந்து கன்னட சூப்பர் ஸ்டார் மறைந்த ராஜ்குமாரை கடத்தியவர்களில் ஒருவரான முகில் என்பவரையும், ராஜ்குமாருடன் சேர்ந்து கடத்தப்பட்ட நாகப்பாவையும் தேடிப்பிடித்து இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இருவரும் படப்பிடிப்பில் சந்தித்தபோது பழைய நினைவுகளில் மூழ்கி விட்டார்களாம்!

அது உண்மையிலே செம சீனாக இருந்திருக்கும்ல!

கருத்துகள் இல்லை: