ஞாயிறு, 18 மார்ச், 2012

இசைத் தட்டுகளைத் தேடித் தேடிச் சேகரிக்கிறார் நந்தனம் சேகர்

காளிதாஸ்’ முதல் ’ரிக்‌ஷாக்காரன்’ வரை!

ஓர் இசைப் பயணம்
'மூன்றாம் ஆப்பிள் யுகத்தில் வாழ்ந்தாலும் பழைய (எல்.பி. அதாவது நீண்ட நேரம் இசைப்பது) இசைத் தட்டுகளைத் தேடித் தேடிச் சேகரிக்கிறார் நந்தனம் சேகர். இவர் தி.நகர் ரெங்கநாதன் தெருவில் உள்ள கடை ஒன்றில் இவற்றைச் சேகரித்துவைத்து இருக்கிறார்’ என்று வாய்ஸ் ஸ்நாப்பில் தகவல் சொன்னார் தி.நகர் இளங்கோவன்.
நந்தனம் சேகரைச் சந்தித்தோம்.
'சொந்த ஊர், சிவகங்கை பக்கம் உள்ள சின்ன உசிலம்பட்டி. சின்ன வயசுலஇருந்தே இசை, இசைக் கலைஞர்கள் மீது எனக்கு ஈடுபாடு அதிகம். அந்தக் காலத்துல யார் வீட்டுலயாவது கிராமபோன் இருந்துச்சுனா ராஜ மரியாதை. கிராமபோன்ல பாட்டுப் போட்டுட்டா அதைக் கேட்க ஊரே ஒண்ணுகூடிடும்.
எங்கத் தாத்தா, பர்மாவில் வேலை பார்த்தார். அப்ப அங்க அவர் சேகரிச்சு வெச்சிருந்த இசைத் தட்டுகளையும் கிராம போன்களையும் இங்க எடுத்து வந்தார். ஆனா, அதைப் பாதுகாப்பதுல எங்க அப்பாவுக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. இசைத்தட்டுகளோடவே வளர்ந்ததாலோ
என்னவோ இதைச் சேகரிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் இருந்துச்சு.என்னோட 20 வயசுல இதைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். 45 வருஷமா அலைஞ்சு திரிஞ்சு பல்லாயிரக்கணக்கான இசைத் தட்டுகளைச் சேகரிச்சுவெச்சு இருக்கேன்.
1890-ல் அறிமுகம் ஆன இசைத் தட்டுகள், 1899-ம் ஆண்டுதான் இந்தியாவுக்கு வரத் தொடங்கினதா சொல்றாங்க. 1900-ல் இருந்து 1930 வரை இசைத் தட்டுகளில் பாடல்கள் மட்டுமே இருந்தது. அதுவும் ஒரு பக்கத்துக்கு ஒரே ஒரு பாட்டு மட்டும்தான் ¢இருக்கும். கொல்கத்தா, மும்பை மாதிரி நகரங்கள்ல பதிவுசெய்து இங்க கொண்டுவந்து விற்பாங்க.
தமிழின் முதல் பேசும் படம், 1931-ல் வெளியான 'காளிதாஸ்’. அதில் ஹீரோ தெலுங்குக்காரர். ஹீரோயின் ராஜலட்சுமி. படம் முழுக்க ஹீரோ தெலுங்கிலும் ஹீரோயின் தமிழிலும் பேசி நடிச்சு இருப்பாங்க. இந்தப் படத்துக்குத்தான் முதல்முதலில் இசைத் தட்டு வெளிவந்தது. இந்த இசைத் தட்டு இன்னைக்கு யார்கிட்டேயும் இல்லை. அதே போல் பின்னணி இசையுடன் வெளியான முதல் படம் 'சிந்தாமணி’ 1937-ல் வந்துச்சு. இந்தப் படப்பிடிப்பில் தியாகராஜ பாகவதருக்கும் அசோத்தம்மாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, பாகவதருடன் பாடமாட் டேன்னு அசோத்தம்மா மறுத்துட்டாங்க. வேறு வழி இல்லாமல் பாகவதருக்குப் பதிலா ராஜ கோபால் சர்மாங்கிறவரைப் பாட வெச்சாங் களாம். இதுதான் தமிழுக்குப் பின்னணிப் பாடகர்கள் அறிமுகமான கதை.
இந்தத் தகவல் எல்லாம் இசைத் தட்டுகளைத் தேடி அலைஞ்சப்ப கிடைச்சதுதான். எங்கே இசைத் தட்டு இருக்குனு தெரிஞ்சாலும் செல வைப் பற்றிக் கவலைப்படாமக் கிளம்பிடுவேன். இதுக்காகவே 1980-ல் இருந்து ஏழெட்டு வருஷம் மலேசியா, சிங்கப்பூர்னு சுற்றித் திரிஞ்சிருக்கேன். 'நம்ம இசையைத் தேடி எவ்வளவு தூரத்துல இருந்து வந்திருக்கீங்க’னு இரக்கப்பட்டு இசைத் தட்டுகளை இலவசமாக் கொடுத்தவங்களும் இருக்காங்க. ஒரு தடவை என் மனைவிக்கு மதுரை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை. அப்ப தேனி பக்கம் இசைத் தட்டுகள் இருப்பதாக் கேள்விப்பட்டு உடனே கிளம்பிட்டேன். அது தேனியில் உள்ள ஒரு குக்கிராமம். எங்க வீட்ல இருந்து எவ்வளவோ முயற்சி பண்ணியும்
என்னைத் தொடர்புகொள்ளவே முடியலை. 'மனைவிக்கு உடம்புக்கு முடியாதப்பக் கூட இசைத் தட்டு வாங்க போகணுமா?’னு எல்லாரும் திட்டினாங்க.
'லைலா மஜ்னு’, 'தேவதாஸ்’, 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’, 'காத்தவராயன்’, 'மாயா பஜார்’, 'ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்’னு தமிழில் இசைத் தட்டுகள் வந்த 90 சதவிகிதப் படங்களுக்கு மேல சேகரிச்சுவெச்சு இருக்கேன். 1971-ல் எம்.ஜி.ஆர். நடிச்சு வெளிவந்த 'ரிக்ஷாக்காரன்’ தான் கடைசியாத் தமிழில் வெளிவந்த இசைத் தட்டு. அந்தத் திரைப்படம் வரை சேகரிச்சு வெச்சிருக்கேன். ஜெயலலிதா மேடம் ஒரு சில திரைப்படங்கள்ல பாடினது பலருக்கும் தெரியும். அவங்க பாடல்கள் இருக்கிற இசைத் தட்டுகளைக் கூட சேகரிச்சுவெச்சிருக்கேன்.
டி.எம்.எஸ்., பி.சுசீலா, கே.வி.மகாதேவன், பி.பி.எஸ். மாதிரியான ஜாம்பவான்களின் முழுப் பாடல் தொகுப்பையும் சேகரிச்சுவெச்சு இருக்கிறதைப் பெருமையாக் கருதுறேன். இதைக் கேள்விப்பட்டு டி.எம்.எஸ். என்னை நேர்ல அழைச்சுப் பாராட்டினார். இந்த இசைத் தட்டு பொக்கிஷமா இருந்தாலும் இதில் உள்ள பாடல்களை சி.டி-யா மாத்திட்டு வர்றேன். அதுவும் எந்த இசைத் தட்டில் எந்தப் பாட்டு இருக்குனு கண்டுபிடிக்கிறதுதான் கஷ்டமான வேலை. ஆனால், என் காலத்துக்குப் பிறகுஇந்தப் பொக்கிஷங்களை யார் பாதுகாப்பாங்கன்னு நினைக்கிறப்பதான் மனசு கஷ்டமாயிடுது!'' என்கிறார்.
நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன் 
thanks vikatan +lavanya london

கருத்துகள் இல்லை: