நமக்கு நல்ல பழக்கமான வசனம் இது. ஆனால் இன்றைய சூழலை அப்படியே பிரதிபலிக்கிற வார்த்தைகளும் கூட!
பொருளாதார அடிப்படையில் உலகின் மிகப் பெரிய நான்கு வல்லரசுகளுள் ஒன்று என்ற பெயர் இந்தியாவுக்கு. வல்லரசு நாடுகள் அங்கம் வகிக்கும் அத்தனை அமைப்பிலும் இந்தியாவுக்கும் இடம் தரப்பட்டுள்ளது.
ஆனால் இதெல்லாம் போலியானது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடல் முழுக்க நோயும் அழுக்கும் கொண்ட ஒருவனுக்கு பள பள கோட்டு சூட்டு மாட்டியது மாதிரிதான் இந்தியாவின் இன்றைய நிலை உள்ளது என்பதை பொருளாதார ரீதியான புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
2011-2012 ஆம் ஆண்டுக்கான இந்தியப் பொருளாதாரத்தின் ஆய்வறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் படி, இந்தியாவில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ 76933 (1527 டாலர்) மட்டுமே.
இந்தியாவின் கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் இந்தத் தொகை சற்று உயர்ந்துள்ளது என்றாலும், நடப்பு விலைவாசியோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவானதாகும்.
ஜி 20 அமைப்பில் உள்ள நாடுகளில் மிகக் குறைந்த தனி நபர் வருவாய் கொண்ட நாடு என்ற ‘அந்தஸ்து’ இந்தியாவுக்கு மட்டும்தான். உலகின் பெரிய பொருளாதார நாடு என்ற பெயர் இருந்தும், தனிநபர் வாழ்க்கைத் தரம் உயரவே இல்லையே என்பது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் தனி நபர் வருவாயில் 117வது இடத்திலிருந்த இந்தியா, இப்போது 94வது இடத்தைப் பெற்றுள்ளது.
1990-ல் சீனா 127வது இடத்திலிருந்தது. இப்போது அந்நாடு 74 வது இடத்தைப் பெற்றுள்ளது.
அதே நேரம், நாட்டின் மொத்த உற்பத்தி – ஜிடிபி- என்று பார்த்தால், உலகின் மற்ற நாடுகளைவிட நல்ல வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது. 1980 முதல் 2010 வரை உலக ஜிடிபி 3.3 சதவீதம் அதிகரித்ததென்றால், இந்தியாவின் ஜிடிபி 6.2 சதவீத உயர்வு கண்டுள்ளது. உலக உற்பத்தி வீதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக வளர்ச்சி.
சற்று நிதானித்து நோக்கினால் இது எந்த அளவு போலியான வளர்ச்சி என்பது புரிய வரும். நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி அடைந்திருந்தாலும், அந்த நாட்டின் குடிமகன்கள் நிலைமை படுபாதாளத்திலிருந்தால் என்ன அர்த்தம்?
நாட்டின் வளர்ச்சி அதன் மக்களுக்கல்ல… வேறு யாரோ சிலருக்குதான் அந்த வளர்ச்சி பயன்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள ரொம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை.
இந்த நாட்டில் எல்லாம் இருக்கிறது. ஆனால் அது எல்லோருக்கும் இல்லை.
மின்சாரம் இருக்கிறது… ஆனால் அது வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு மட்டுமே தங்கு தடையின்றி கிடைக்கும்.
நாடெங்கும் பள பள பல ட்ராக் சாலைகள். ஆனால் மக்களுக்காக போடப்பட்டவை அல்ல. அவை வெளிநாட்டு முதலாளிகளின் ஆணையின் பேரில் போடப்பட்டவை. அவர்களின் தொழிற்சாலைப் பணிகள் தடையின்றி நடக்க இவை தேவை. பயன்படுத்த மக்களிடம் காலவரையறையின்றி பணம் பிடுங்க அரசுக்கு இன்னும் ஒரு வழி அது. அவ்வளவுதான்.
தண்ணீர் அபரிமிதமாய் இருக்கிறது. ஆனால் ஏழை குடிக்க பாதுகாப்பான நீரில்லை… மக்கள் காலகாலமாக பயன்படுத்திய நீர்நிலைகளிலிருந்து பன்னாட்டுக் கம்பெனிகளின் குளிர்பானத் தயாரிப்பு, கண்ணாடி உற்பத்தி, கார் உற்பத்தி, மினரல் வாட்டர், கெமிக்கல் உற்பத்தி போன்றவற்றுக்காக மட்டுமே பகாசுர குழாய்கள் மூலம் உறிஞ்சிக்கொள்ள நேரடி அனுமதி தரப்பட்டுள்ளது.
விவசாயத் தொழில் பெருமளவு முடக்கப்பட்டுவிட்டது. இப்போது விவசாயம் என்பது பன்னாட்டு சில்லறை நிறுவனங்களின் விற்பனையைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் ஒப்பந்த சமாச்சாரம் மட்டுமே.
ஆக நாட்டின் மொத்த உற்பத்தி நன்றாகவே இருக்கிறது. நாட்டு மக்கள்தான் நன்றாக இல்லை. இதுதான் போலி வளர்ச்சி என்பது.
இதைவிட முக்கியம் அரசின் புதிய அபாரமான கண்டுபிடிப்பொன்று…
நாட்டின் பணவீக்கம் ஒருகட்டுப்பாட்டுக்குள் வராமல் ஒரு மாதம் உச்சத்துக்குப் போவதும், அடுத்த மாதம் படுபாதாளத்தில் வீழ்வதுமாக உள்ளது. இதனை எப்படி சரிகட்டப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, பொருளாதார ஆய்வறிக்கை தரும் பதில், “அந்நிய முதலீடுகள் இன்னும் அதிகமாக சில்லறை வணிகத்தில் ஊக்குவிப்பதன் மூலம் சரிகட்டிவிடுவோம்,” என்பதுதான்.
ஆக, உள்ளூர் தொழில்கள், சில்லறை வணிக அளவில் கூட நன்றாக இருக்கக் கூடாது. அவற்றையும் அழித்து பன்னாட்டு நிறுவனங்களை வளர விட்டால்தான் நாடு வளம்பெறும் என்பது அரசின் கொள்கை.
அடுத்த ஆண்டு ஆய்வறிக்கையை பிரணாப் முகர்ஜி கூட படிக்கத் தேவையில்லை.. நாமே சொல்லிவிடலாம் அதன் லட்சணம் எப்படி இருக்கும் என்று!
- டாக்டர் எஸ் ஷங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக