வெள்ளி, 23 மார்ச், 2012

நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடாமல் 10.6 லட்சம் கோடி இழப்பு

புதுடெல்லி : நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடாமல் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அரசுக்கு ரூ.10.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் புகார் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் கணக்குகளை சரிபார்க்கும் கணக்கு தணிக்கை துறை, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு குறித்து வரைவு அறிக்கை தாயாரித்துள்ளது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக் கல் செய்யப்படவில்லை. அதற்கு முன்பே நேற்று பத்திரிகைகளில் அறிக்கை விவரங்கள் வெளியானது.
அதில், ‘2004 முதல் 2009ம் ஆண்டு வரையான காலத்தில் நிலக்கரி சுரங்கங்களை ஏலத்துக்கு விடாமல் தனியார் மற்றும் பொதுத்துறையை சேர்ந்த 100 நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இன்றைய சந்தை நிலவரப்படி அரசுக்கு ரூ.10.67 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏலம் மூலம் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்திருந்தால் அரசுக்கு லாபம் கிடைத் திருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஏல அடிப்படையில் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ய திட்டக் கமிஷன், செலவுகள் துறை, சுரங்கத்துறை அமைச்சகம் ஆகியவை ஆதரவு தெரிவித்தும் மத்திய மின்துறை அமைச்சகமும் சட்டீஸ்கர், ராஜஸ்தான், மேற்கு வங்க மாநில அரசுகளும் இதை ஏற்கவில்லை என்றும் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஸ்பெக்ட்ரம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அரிய இயற்கை வளங்களை ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்வதே சிறந்த வழி என்று கூறப்பட்டதையும் வரைவு அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

ஏற்கனவே, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை துறை கூறியது. இந்நிலையில், சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வரைவு அறிக்கையில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. மக்களவை நேற்று காலை கூடியதும் பா.ஜ. உறுப்பினர்கள் சுரங்க முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை வேண் டும் என்று கோரி அவை யின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். ‘இது வரைவு அறிக்கைதான் இறுதியான அறிக்கை அல்ல’ என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கமளித்தார். அமளி நீடித்ததால், பகல் 12 வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதே பிரச்னை காரணமாக மாநிலங்களவையும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கணக்கு தணிக்கை அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். இதை பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதில், ‘நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக அறிக்கையை கணக்கு தணிக்கை துறை இன்னும் தயாரிக்கவே இல்லை. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகம் பிப்ரவரி 9ம் தேதி, மார்ச் 3ம் தேதிகளில் அளித்த விளக்கத்தை தொடர்ந்து எங்கள் கருத்தை மாற்றிக் கொண்டோம். அறிக்கை தயாரிப்பதற்கு முன்பே ரூ.10.67 லட்சம் கோடி இழப்பு என்று ஊடகங்களில் வெளியான செய்திகள் மிகைப்படுத்தி திசை திருப்பப்பட்டவை. தணிக்கை அறிக்கை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், அதுபற்றிய விவரங்கள் கசிவது மிகவும் வருந்தத்தக்கது’ என்று கூறப்பட்டுள்ளது.

பிரதமர் கேள்வி

நிலக்கரி சுரங்க முறைகேடு குறித்து பிரதமரிடம் கேட்டபோது, ‘‘அறிக்கையே இன்னும் தயாரிக்கவில்லை என்று கணக்கு தணிக்கை அதிகாரி எனக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அறிக்கையே இல்லாதபோது, அது பற்றி விளக்கம் அளிக்க என்ன இருக்கிறது?’’ என்று கேட்டார்.

கருத்துகள் இல்லை: