புதன், 21 மார்ச், 2012

இந்தியாவில் டீசல் எஞ்சின் தயாரிக்க ஹோண்டா கார் நிறுவனம் முடிவு

பட்ஜெட்டால் தள்ளிப்போட்டிருந்த டீசல் எஞ்சின் திட்டத்தை தூசி தட்ட ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் டீசல் எஞ்சின் தயாரிப்பு ஆலையை கட்ட திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம் இங்கிருந்து ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளது.
டீசல் கார் இல்லாதது ஹோண்டா கார் நிறுவனத்துக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, டீசல் கார்களை களமிறக்க ஹோண்டா முடிவு செய்தது. ஆனால், இங்கேயே காருக்கான டீசல் எஞ்சினை தயாரித்தால் செலவு குறையும் என்பதால் அந்த திட்டத்தை கையிலெடுத்தது. மத்திய பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்ற அச்சத்தால், தனது திட்டத்தை கிடப்பில் போட்டிருந்தது. இந்த நிலையில், பட்ஜெட்டில் டீசல் கார் மீது குறிப்பிட்ட வரி எதுவும் விதிக்கப்படாததால், டீசல் காருக்கு தொடர்ந்து கிராக்கி இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மீண்டும் டீசல் எஞ்சின் தயாரிப்பு ஆலை திட்டத்தை ஹோண்டா கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு தேவை தவிர டீசல் எஞ்சினை இங்கிருந்து தயாரித்து வெளிநாடுகளில் உள்ள தனது கார் ஆலைகளுக்கு அனுப்பவும் ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்றுமதி உட்பட ஆண்டுக்கு ஒரு லட்சம் சிறிய கார்களுக்கான டீசல் எஞ்சின்களை தயாரிக்க ஹோண்டா திட்டம் போட்டுள்ளது. இதற்காக, இந்தியாவில் புதிய டீசல் எஞ்சின் ஆலையை கட்ட அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: