ஞாயிறு, 18 மார்ச், 2012

அமைதியாக முடிந்தது சங்கரன்கோயில் இடைத் தேர்தல் - 78 சதவீத வாக்குப் பதிவு!

By Poll
சங்கரன்கோயில் இடைத்தேர்தல் மிக அமைதியாக நடந்து முடிந்தது. தோராயமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிடுகிறார்கள்.
காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.வேட்பாளர்களும் தங்கள் வாக்குகளை செலுத்தினர். அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி, காலையிலேயே தனது வாக்கைப் பதிவு செய்தார். தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமார், தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமார் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 8 வேட்பாளர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைக்குமார், பா.ஜ.க. வேட்பாளர் முருகன், சமாஜ்வாடி கட்சி சார்பில் சயேட் சையாக போட்டியிடும் நாகேஸ்வரராவ், காந்திய சிந்தனையாளர் மன்றம் சார்பில் போட்டியிடும் ஆறுமுகம், இந்திய ஜனநாயக குடியரசு கட்சி கணேசன் ஆகிய 5 வேட்பாளர்களுக்கும் சங்கரன்கோவில் தொகுதியில் ஓட்டு இல்லை.

158 புகார்கள்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை 158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பார்வையாளர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.

கலிங்கப்பட்டி பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியை பார்வையிட அவர் போது, அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்று கூறப்படுகிறதே என நிருபர்கள் ‌கேட்டதற்கு, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்றார்.

மாலை 5 மணிக்குப் பிறகு வாக்களிக்க க்யூவில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒட்டுமொத்தமாக இந்தத் தொகுதியில் 78 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தொகுதியின் எந்தப் பகுதியிலும் சிறு சச்சரவு, கலாட்டா இல்லாமல் படு அமைதியாக நடந்து முடிந்தது தேர்தல்.

வாக்கு எண்ணிக்கை வரும் 21-ம் தேதி புதன்கிழமை நடக்கிறது.

கருத்துகள் இல்லை: