சனி, 25 பிப்ரவரி, 2012

வீரப்பன் சதாம் உசேன் கடாபி என்கவுண்டர் மனோபாவம்


எந்தவொரு கிரிக்கெட் பந்து வீச்சாளரும் பொறாமைப்படும் வகையில் காவல் துறை தனது என்கவுண்டர் திறமைகளை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வளர்தெடுத்து வருகிறது. இந்தப் புள்ளிவிவரத்தைப் பாருங்கள். 2008ம் ஆண்டு 5 முறை குண்டு வீசி ஆறு விக்கெட் எடுத்திருக்கிறார்கள். 2009ல் இரண்டுக்கு இரண்டு என்னும் செட் கணக்கில் கணக்கு முடிக்கப்பட்டுள்ளது. 2010ல் நல்ல முன்னேற்றம். ஐந்து வாய்ப்புகள், ஏழு விக்கெட். 2011ல் மேட்ச் நடைபெறவில்லை. 2012 அமர்க்களமாக ஆரம்பித்திருக்கிறது. இரு மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில், ஒரே நாளில், ஐந்து விக்கெட்டுகள்.
‘சென்னை மக்கள் பலரும் இதனை சரியான நடவடிக்கை என்று வரவேற்றுள்ளனர்.’ கொள்ளையர்கள் என்கவுண்டர்: மக்கள் பாராட்டு, மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் என்று தலைப்புச் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.   தமிழகத்தின் மிகப் பெரிய என்கவுண்டர் இதுவே என்று கண்டறிந்து கொட்டை எழுத்தில் கொண்டாடியிருக்கிறார்கள். அதே சமயம், வங்கிக் கொள்ளையர் ஐவரையும் ‘மக்கள் பாதுகாப்புக்காகவும், தங்களது சுய பாதுகாப்புக்காகவுமே சுட நேரிட்டதாக’  சொல்லும் காவல்துறையின் வாதங்களில் உள்ள ஓட்டைகளும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் செய்திகளையும் அலசல்களையும் மென்று புசித்தபடி தன் வழியில்  சென்றுகொண்டிருக்கிறது படித்தவர்கள் அடங்கிய பெரும்கூட்டம். பிடித்திருக்கலாம், கொன்றிருக்கவேண்டியதில்லை என்னும் அதிகபட்ச முணுமுணுப்புடன் விவாதம் முடித்துக்கொள்ளப்பட்டுவிட்டது. மேலதிகம் விவாதம் தொடராததற்குக் காரணம், கொல்லப்பட்டவர்கள் கொள்ளையர்கள் என்று நமக்கு நாமே கற்பித்துக்கொள்ளும் தர்க்க நியாயம்.
இந்த தர்க்கத்தை வைத்துதான் அப்சல் குருவைத் தூக்கில் போடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். இந்தத் தர்க்கத்தை வைத்துதான் தீவிரவாதம் பற்றியும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் சில கற்பிதங்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். எது சரி, எது தவறு என்று முடிவு செய்கிறோம். எதற்கு கேள்வி எழுப்பவேண்டும், எதை அமைதியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தீர்மானிக்கிறோம்.
செப்டெம்பர் 2011 பரமக்குடி சம்பவத்தை எப்படிப் பார்க்கிறோம்?  பட்டவர்த்தனமாகக் காவல் துறையினர் நடத்திய படுகொலை என்றா அல்லது ‘கலவரத்தை அடக்க போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்றா? காஷ்மிர் பிரச்னையை எப்படி பார்க்கிறோம்? வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் பேராட்டங்களை? பெருகிவரும் விவசாயிகள் தற்கொலையை? பெருகிவரும் விலைவாசியை? அதிகரித்துவரும் ஏழை-பணக்காரன் இடைவெளியை? ஒவ்வொன்றிலும் இரு தரப்புகளின் வாதங்கள் நமக்குக் கிடைக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஒரு தரப்பை ஏற்று, இன்னொன்றை நிராகரிக்கிறோம். எந்த அடிப்படையில்? சரி, தவறுகளுக்கான நம் அளவுகோல் என்ன?
சற்றே கண்களைத் திறந்து பார்த்தால் நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்தக் கேள்விகளைக் கடந்தே நாம் வந்திருக்கிறோம் என்பது தெரியவரும். பெரும்பாலான கேள்விகளுக்கு நாம் பதிலே அளிப்பதில்லை என்பதும் தெரியவரும். பதில் தெரியவில்லை என்பதைவிட தெரிந்துகொள்ள விருப்பமில்லை என்பதே உண்மை.
இந்தப் பின்னணியில் என்கவுண்டருக்குத் திரும்புவோம். குஜராத் 2002 கலவரத்தின்போது இப்படித்தான் பல என்கவுண்டர்கள் நடத்தப்பட்டன. மோடியைக் கொல்ல வந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். விசாரணையின்போது, சோராபுதின், இஷ்ரத் ஜெகன் கொலை வழக்குகளுக்கும் அவர்கள்மீதான குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது. நேர்மையான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் கிட்டத்தட்ட காவல் துறையினரின் அத்தனை என்கவுண்டர்களும் தடுமாற ஆரம்பித்துவிடும். வீரப்பனைத் தேடுகிறோம் என்னும் போர்வையில் நிகழ்த்தப்பட்ட அராஜகங்களை மறக்கமுடியுமா? வாச்சாத்தியில் நடைபெற்ற அத்துமீறல்களை மன்னிக்கமுடியுமா? சாதிக் கலவரம் என்று முத்திரை குத்தி தமிழகத்தின் தென் மாநிலங்களில் இன்று வரை தொடரும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்திவிடமுடியுமா?
சர்வதேச அளவில் இந்த விவாதத்தை நகர்த்திச் சென்றால் ஓர் உண்மை புலப்படும். ஜனநாயக நாடு என்று நாம் அழைக்கும் அனைத்து நாடுகளும் Police-state ஆகத்தான் மாறியிருக்கின்றன. அரசு என்பது ஓர் ஒடுக்குமுறை கருவியாகவே நீடிக்கிறது. அது வன்முறையைப் பிரயோகித்தே ஆட்சி நடத்துகிறது. வீரப்பன் கொல்லப்பட்டதையும் சதாம் உசேன் கொல்லப்பட்டதையும் கடாபி கொல்லப்பட்டதையும் எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்ந்தால் பல ஒற்றுமைகளைக் காணமுடியும். காவல் துறைக்கும் ராணுவத்துக்கும் வரம்பற்ற அதிகாரத்தை வழங்கினால் மட்டுமே ஓர் அரசால் நிலைத்திருக்கமுடியும் என்பதுதான் இன்றைய யதார்த்தம். அமெரிக்காவுக்கு மட்டுமல்ல ‘காந்தியின் இந்தியாவுக்கும்’ இதுதான் அடிப்படை.
0
மருதன்

கருத்துகள் இல்லை: