திங்கள், 20 பிப்ரவரி, 2012

2ஜி' வழக்கு தீர்ப்பை ஓய்வு பெறும் நாளில் வெளியிட்டது ஏன்?நீதிபதி கங்குலி

புதுடில்லி:"2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், 122 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்த தீர்ப்பை நான் வெளியிடாமல் இருந்திருந்தால், இந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்கு, மேலும் காலதாமதமாகியிருக்கும்' என, நீதிபதி கங்குலி கூறினார்.
சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியும், பணி ஓய்வு பெறும் நாளில், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், 122 உரிமங்களை ரத்து செய்தது தொடர்பான தீர்ப்பை அளித்தவருமான ஏ.கே.கங்குலி, தனியார் "டிவி' சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த வழக்கின் தீர்ப்பு முன்னதாக ஒத்தி வைக்கப்பட்டதற்கு, நான் காரணம் இல்லை.
உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது மற்றும் ராஜா மீது வழக்கு தொடர அனுமதி அளித்தது ஆகிய இரண்டு தீர்ப்புகளுமே, மூத்த நீதிபதி ஜி.எஸ்.சிங்வியால் தான் ஒத்தி வைக்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மிகவும் நெருக்கடியான சூழலில் பணியாற்றுகின்றனர். இந்த நெருக்கடி தான், தீர்ப்புகள் தாமதமாவதற்கு காரணமாக உள்ளது. தீர்ப்பு தாமதமாவதற்கு வேறு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. என் பதவிக் காலத்தில் ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்பை, ஓய்வு பெறுவதற்கு முன் அறிவித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். கடந்த 2ம் தேதி தான், நான் ஓய்வு பெறும் தேதி என்பது முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதில் மாற்றம் செய்ய முடியாது. எனவே, அதற்குள் "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பை அளித்தேன். இந்த தீர்ப்பை நான் ஒத்தி வைத்திருந்தால், தீர்ப்பு வெளியாவதற்கு மேலும் கால தாமதமாகியிருக்கும். இதனால், மேலும் கால விரயமாகி இருக்கும்.

இந்த வழக்கில், ஏற்கனவே பல முறை விசாரணை நடத்தியாகி விட்டது. 30 விசாரணை நாட்கள், இதற்காக செலவிடப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற சூழலில் தீர்ப்பு வெளியாவதில், மேலும் கால தாமதமாகியிருந்தால், மக்களின் விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த வழக்கில், தன் தரப்பு பதிலை தெரிவிப்பதற்கு, முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு போதிய அவகாசம் அளிக்கப்பட்டது.இவ்வாறு கங்குலி கூறினார்.

கருத்துகள் இல்லை: