ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

ஜெயலலிதாவை காப்பாற்றிய சசிகலா! கோர்ட்டில் நடந்தது என்ன?

சசிகலா விவகாரத்தில் கிளைமாக்ஸ் தொடங்கி விட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் தடவையாக கோர்ட்டில் வாய்திறந்து வாக்குமூலம் கொடுத்த சசிகலா, “சொத்துக் குவிப்பு விவகாரங்களில் ஜெயலலிதாவுக்கு எந்தப் பங்குமில்லை” என்று கண்ணீர் மல்க, வாக்குமூலம் கொடுத்தே விட்டார்.
பெங்களூரூ நீதிமன்றத்தில் இன்றும் ஆஜராவதைத் தடுக்க சசிகலா தரப்பில் இருந்து முயற்சிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், கோர்ட் பிடிவாதமாக மறுத்து விட்டதால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் இன்று கோர்ட் படியேறினர். சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி, கேள்விகளுக்கு பதில் சொல்வது சசிகலாவுக்கு இதுவே முதல் தடவை.
விசாரணை இன்றோடு முடிந்து விடவில்லை. சசிகலாவுக்கான கேள்விகளின் ஆரம்பமே இன்றுதான். இவர்களின் பல சொத்துக்கள் தொடர்பான ஒரு பட்டியலே இந்த வழக்கில் இணைக்கப்பட்டு உள்ளது.
அதில் உள்ளவற்றை ஒவ்வொன்றாக எடுத்து, அந்தச் சொத்துக்கள் எப்படி வந்தன என்ற கேள்விகளுக்கு சசிகலாவும் மற்றையவர்களும் பதில் கூற வேண்டும்.
அந்த வரிசையில் இன்று, முதலில் எடுக்கப்பட்ட சொத்து, ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம்.
ஜெயா பப்ளிகேஷன்ஸ் தொடர்பான கேள்விகள் இன்று சசிகலாவிடம் கேட்கப்பட்டபோது, அந்த நிறுவனத்தில் தாமும், ஜெயலலிதாவும் பங்குதாரர்கள் என்பதை சசிகலா ஒப்புக் கொண்டார். “நாம் இருவரும் பங்குதாரர்கள் என்பது உண்மைதான் என்ற போதிலும், நிறுவனத்தை நடத்தியது நான்தான்” என்றும் தெரிவித்தார் அவர்.
“ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டது யார்?”
“நான்தான்” என்பது அவரது பதில்.
“பங்குதாரர் என்ற முறையில் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் என்ன?”
“எதுவுமில்லை. அவர் ஜெயா பப்ளிகேஷன்ஸில் எந்தவித அக்கறையும் காண்பிக்கவில்லை”
“நிர்வாகத்தில் அவரது தலையீடு அத்தனை சதவீதம் இருந்தது என்று சொல்லுங்கள்”
“நிர்வாகத்தில் அவர் தலையிட்டதில்லை”
“ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் யாரால் வாங்கப்பட்டவை?
“என்னால். நான்தான் சொத்துக்களை வாங்கினேன்”
“சொத்துக்கள் வாங்கப்பட்ட விபரங்கள் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டதா?”
“இல்லை”
“சரியாகச் சொல்லுங்கள். ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் வாங்கப்பட்ட விபரங்கள் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்படவில்லையா?”
“இல்லை.. சொத்துக்கள் வாங்கப்பட்ட எந்த விபரமும் அவருக்கு தெரியாது.”
“அப்படியானால், ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் வாங்கப்பட்டதற்கு யார் பொறுப்பு ஏற்பது?”
“பங்குதாரர் என்ற முறையில் நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார் சசிகலா.
பதில்களை தெரிவிக்கும்போது சசிகலா மிகவும் சோர்வாக காணப்பட்டார். பதில் கூறும்போது அவ்வப்போது கண்ணீர்விட்டு, கண்களைத் துடைத்துக் கொண்டார். சில கேள்விகளுக்கு அவரை நேரடியாக பதில் கொடுத்தார். சில கேள்விகளுக்கு தனது கையில் இருந்த கடதாசி குறிப்புகளைப் பார்த்து பதில் கொடுத்தார்.
விசாரணை தொடங்கி முதலாவது கேள்வி கேட்கப்பட்ட உடனேயே, சசிகலாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகிறது. முதலாவது கேள்விக்கு பதில் கூற சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். அதன்பின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் வந்தது.
மதிய உணவு இடைவேளைக்கு முன்னரும் பின்னருமாக சுமார் 40 கேள்விகளுக்கு பதில் கொடுத்திருக்கிறார்.
ஜெயா பப்ளிகேஷன்ஸ் தொடர்பான கேள்விகள் முடிந்தபின், வேறு சில அசையாச் சொத்துக்கள் தொடர்பான கேள்விகள் தொடர்ந்து வந்தன. சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் நிலம் வாங்கியது தொடர்பான கேள்விகளும் இருந்தன. திருவல்லிக்கேணி மற்றும் தி.நகரில் வாங்கப்பட்ட நிலங்களுக்கு பணம் எப்படி வந்தது என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.
சசிகலா தன்னிடமுள்ள குறிப்புகளைப் பார்த்து, மொத்தம் 5 நிறுவனங்களை நடத்திய விதத்தில் வந்த பணத்திலேயே அந்த நிலங்கள் வாங்கப்பட்டன என்று தெரிவித்தார். இந்த 5 நிறுவனங்களில், அ.தி.மு.க.-வின் அதிகாரபூர்வ பத்திரிகையை வெளியிடும் நமது எம்.ஜி.ஆர். நிறுவனமும் அடங்குகிறது. மற்றைய 4 நிறுவனங்களும்: சசி எண்டர்பிரைசஸ், ஆஞ்சநேயர் பில்டர்ஸ், ஜெயா பப்ளிகேஷன்ஸ். ஜெயா ரியல் எஸ்டேட்.
“சொத்துக்கள் வாங்கும் அளவில் இந்த நிறுவனங்கள் லாபத்தில் இயங்கினவா?” என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, “எப்போதும் லாபத்தில் இயங்கின என்று கூறமுடியாது. நஷ்டம் ஏற்பட்ட காலங்களும் உள்ளன” என்று சசிகலாவால் பதில் கொடுக்கப்பட்டது.
இந்தச் சொத்துக்கள் வாங்கப்பட்ட காலத்தில் (முந்தைய அ.தி.மு.க. ஆட்சி), நகரின் முக்கிய இடங்களில் உள்ள சொத்துக்களின் உரிமையாளர்களை மிரட்டி சொத்துக்கள் பிடுங்கப்பட்டன என்ற சில குற்றச்சாட்டுகளும் உள்ளன. அவை தொடர்பாக விரிவான கேள்விகள் ஏதும் இன்று வரவில்லை. அடுத்து வரும் நாட்களில் அவை கேட்கப்படலாம்.
தி.நகரில் வாங்கப்பட்ட நிலம் தொடர்பான முதல் கேள்வி ஒன்றில் உப கேள்வியாக, மிரட்டல் தொடர்பான ஒரு கேள்வி மட்டும் மேலோட்டமாக இன்று கேட்கப்பட்டது.
“சென்னை தி.நகரில் உங்களுக்கு பிடித்தமான நிலம் ஒன்றை வாங்குவதற்காக, சுதாகரன் நில உரிமையாளரை மிரட்டி, நிலத்தை அபகரித்து கொடுத்தாரா?” என்ற கேள்விக்கு சசிகலா, “அப்படி எதுவும் எனக்கு தெரியாது” என்று பதில் கொடுத்தார்.
கோர்ட் முடிவடையும் நேரம் வந்துவிட்ட காரணத்தால் கேள்வி கேட்பது இடை நிறுத்தப்பட்டு, மேற்கொண்டு கேள்விகளுக்காக வரும் வெள்ளிக்கிழமை (24-ம் தேதி) ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சொன்னதற்கு சசிகலா சரி என்று தலை அசைத்தார்.

-பெங்களூருவிலிருந்து ஷீமா தத்தின் குறிப்புகளுடன், ரிஷி.

கருத்துகள் இல்லை: