திங்கள், 20 பிப்ரவரி, 2012

இருளர் பெண்கள் கற்பழிக்கப்படவேயில்லை: ஐகோர்ட்டில் டிஜிபி பதில் மனு

மெய்யாலுமா????
சென்னை: இருளர் இனப்பெண்கள் 4 பேரை போலீசார் இரவு நேரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்றது மட்டும் தான் உண்மை. ஆனால் அவர்களை கற்பழிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஜிபி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருளர் இனத்தைச் சேர்ந்த 4 பெண்களை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று காட்டுக்குள் வைத்து கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீசிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழ்ககு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் உள்துறை செயலாளரும், போலீஸ் டி.ஜி.பி.யும் பதில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

பாலியல் குற்றச்சாட்டு கூறிய 4 இருளர் இனப்பெண்களிடமும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அந்த பெண்கள் கற்பழிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. அந்த பெண்கள் பலாத்காரமும் செய்யப்படவில்லை என்பது சோதனைகள் மூலம் உறுதியாகி உள்ளது. என்றாலும் 4 இருளர் இனப்பெண்களை இரவு நேரத்தில் விசாரணைக்காக காவல் நிலையத்தில் வைத்திருந்தது சட்டவிரோதமாகும். இதற்காக 7 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் போலீஸ்காரர்கள் யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற உள்நோக்கம் எதுவும் எங்களுக்கு இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை தொடர்ந்து மனுதாரரின் வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் கூறுகையில், இந்த விவகாரத்தில் அரசு கூறியதையே மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசாரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்றார்.

போலீசார் ஏன் கைது செய்யப்படவில்லை என்று நீதிபதி இக்பால் கேட்டதற்கு, விசாரணை நடந்து வருவதாக அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம் தெரிவி்ததார். இந்த பதிலால் திருப்தியடையாத நீதிபதி, 4 இருளர் இனப் பெண்களை சட்டவிரேதமாக இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் வைத்திருந்ததை ஒத்துக் கொள்கிறீர்களா? கற்பழிப்பு சம்பவம் நடந்ததா, இல்லையா என்று கேட்டார்.

போலீசாரை காப்பற்ற நினைக்கவில்லை. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னால் என்ன தான் செய்வது என்று கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை 2 வாரம் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: