சனி, 25 பிப்ரவரி, 2012

நிதிஷ்குமார்: என்கவுன்ட்டர் மூலம் கொல்வது சரி அல்ல

சென்னையில் நடந்த வங்கி கொள்ளையில் 5 பேருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருக்கலாம். அதைவிடுத்து என்கவுன்ட்டர் மூலம் கொல்வது சரி அல்ல என்று பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்த வங்கி கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் சந்திரிகா ரே, ஹரிஷ்குமார், வினய் பிரசாத், வினோத்குமார் ஆகிய 4 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அபய்குமார் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவன் என்றும் தகவலை தெரிவித்த போலீசார், 5 பேரின் முகவரிகளையும் வெளியிட்டனர். இதுபற்றி பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமாரிடம் செய்தியாளர்கள் (24.02.2012) கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:
சென்னையில் போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் வங்கி கொள்ளையர்கள் 5 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 4 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் கிடைத்து உள்ளது. இதுபற்றி தமிழக அரசுடன் நான் பேசினேன். கொல்லப்பட்டவர்களில் ஒரு நபர் பீகாரில் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. எனவே கொல்லப்பட்டவர்களின் அடையாளம் பற்றி விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டு உள்ளேன்.
வங்கி கொள்ளையில் 5 பேருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருக்கலாம். அதைவிடுத்து என்கவுன்ட்டர் மூலம் கொல்வது சரி அல்ல. அதுபற்றி விசாரித்து விவரங்களை அறியுமாறு மாநில போலீஸ் டி.ஜி.பி.யையும், உள்துறை செயலாளரையும் கேட்டுக் கொண்டு உள்ளேன். இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.
இந்த பிரச்சினையில் பீகார் மாநில அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்று கேட்டதற்கு; "முதலில் நடந்த உண்மை என்ன என்பது பற்றி அவர்கள் கண்டு அறியட்டும். அதன்பிறகு பார்க்கலாம்'' என்று நிதிஷ்குமார் பதில் அளித்தார்.
துப்பாக்கி சண்டையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானது பற்றிய விவரங்களை விசாரித்து அறிவதற்காக அந்த மாநில டி.ஜி.பி. மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் சென்னை வர இருப்பதாகவும் பேட்டியின் போது நிதிஷ்குமார் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: