புதன், 22 பிப்ரவரி, 2012

கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பன-’மேல்’சாதிக் கும்பல்!


    “கோயில் சொத்துகளை எல்லாம் நாத்திகம் பேசும் திராவிடக் கட்சியினர் விழுங்கி வருகின்றனர். இந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அறநிலையத்துறையிடம் இருந்து கோயில்களை பிடுங்கி, சுதந்திரமான ஆன்மீகவாதிகள் அடங்கிய வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என்று இந்து முன்னணி கோரி வருகிறது.
    மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும்  இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர்  அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாடகை கொடுக்காத ப்ராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன். கதர் அணிந்த காக்கி டவுசர் பேர்வழியும்,  காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் பாரதிய வித்யா பவன். இதன் முக்கியத் தூண்களில் ஒருவர் ராஜாஜி. கல்வியைப் பரப்புவது என்ற பெயரில் பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதத்தையும் பரப்பி வரும் இந்த ஆர்.எஸ்.எஸ். பினாமி நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 இலட்ச ரூபாய்.
    அடுத்தது, மயிலாப்பூர் கிளப். ஜனவரி,1, 1903 அன்று தொடங்கப்பட்ட பெருந்தனக்காரர்களின் தனி உடைமை கிளப்பான இது,  3 அய்யர், 3 அய்யங்கார் மற்றும் ஒரு முதலியாரை உரிமையாளர்களாகக் கொண்டது. தற்போதைய இதன் தலைவர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார். கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளுக்கு மேட்டுக்குடிக் குலக்கொழுந்துகளைத் தயார்படுத்தும் பயிற்சித் திடல், உறுப்பினர்களுக்குச் சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்தியதென் இந்திய உணவு விடுதிகள் மற்றும் 24 மணி நேர பார் போன்ற வசதிகள், சாஸ்திரி ஹால் என பல கிரவுண்டு கோயில் நிலத்தைக் குத்தகைக்கு வளைத்துப் போட்டிருக்கும் இந்த ஆன்மீக மெய்யன்பர்கள் கபாலிக்கு வைத்திருக்கும் குத்தகை பாக்கி 3.57 கோடி ரூபாய்.
    ‘தேசியத் தலைவர்’ எனப் ’பெத்த பேர்’ வாங்கிய தெலுங்கு பார்ப்பனரான நாகேஸ்வர ராவினால் ஆரம்பிக்கப்பட்டு, ஊருக்கெல்லாம் தலைவலி தைலம் தரும் அமிருதாஞ்சன்  நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் குத்தகைப் பாக்கி ரூ.6 கோடியே 45 இலட்சம்.
    கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் போனதாக மெச்சிக் கொள்ளப்படுவது பி.எஸ். ஹைஸ்கூல் என்று அழைக்கப்படும்  பெண்ணாத்தூர் சுப்பிரமணிய அய்யர் மேல்நிலைப் பள்ளி. கோயிலுக்குச் சொந்தமான 76 கிரவுண்ட் நிலத்தை 1928-இல் குத்தகைக்கு எடுத்தது. பின்னர் குத்தகை ஒப்பந்தம் 1979-இல் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஒரு கிரவுண்ட் நிலத்தின் சந்தை விலை ரூ.5 கோடிக்கும் மேலாகும். பல பிரபல உயரதிகாரிகளை உருவாக்கியதாகப் பீற்றிக்கொள்ளும் இந்தப்பள்ளி, 76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாக ரூ. 1250 ஐ மட்டும் ஒரே ஒருமுறை தந்துவிட்டு, கபாலீசுவரரைக் கோர்ட்டுக்கு இழுத்து வாய்தாவுக்கு அலைய விட்டுக் கொண்டிருக்கிறது.
    மயிலாப்பூரில் காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலீசுவரருக்குச் சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார். இன்று அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல். 1901- இல் 99 வருடக் குத்தகையாக எடுத்த அய்யங்கார், இதனை உள்குத்தகைக்கு விட்டு, அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப்பட்டு, 35 பேர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்படியே போகிறது பட்டியல். முதலை வாயில் சிக்கிய இந்தச் சொத்துகளை ஒவ்வொன்றாக மீட்பதற்கு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பாரம்பரியமிக்க பெரிய மனிதர்களின் கிளப் என்று கூறப்படும் மயிலாப்பூர் கிளப்பின் வாசலில், “இது கபாலீசுவரர் கோயில் சொத்து” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறது இந்து அறநிலையத்துறை. அய்யர், அய்யங்கார்வாள்கள் இதையெல்லாம் பார்த்துக் கூச்சப்பட்டு சொத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்களா என்ன?
    அற்ப வாடகை, குத்தகை பாக்கியைக்கூடக் கொடுக்காமல், அறநிலையத்துறையை இவர்கள் கோர்ட்டுக்கு இழுப்பதன் நோக்கமே கோயில் சொத்தை விழுங்குவதுதான். ‘வாரியம் அமைத்து விழுங்கவேண்டும்’ என்பது இந்து முன்னணியின் கோரிக்கை. விழுங்கியவர்களை வைத்து வாரியம் அமைக்கலாம் என்பது பாரதிய வித்யா பவனின் கருத்து போலும். படுத்திக்கினு போத்திக்கலாம். போத்திக்கினும் படுத்துக்கலாம் என்ற கதைதான்.
    கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பன மேல் சாதிக் கும்பல்
    சிதம்பரம் நடராசர் கோயில் விசயத்தில் நடந்தது என்ன? கோயில் சொத்துகளை கொள்ளையிடும் தீட்சிதர்களை வெளியேற்றிக் கோயிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வைத்தன மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் மக்கள் கலை இலக்கியக் கழகமும். நடராசன் சொத்துகளை நடராச தீட்சிதர் என்று கையெழுத்துப் போட்டு விற்றிருப்பதற்கான சான்றுகளும், நகைத் திருட்டு தொடர்பாக தீட்சிதர்கள் மீது உள்ள கிரிமினல் வழக்குகளின் விவரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் விளைவாக சென்னை உயர் நீதிமன்றம்,கோயிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைத்துவிட்டது.
    தீட்சிதர்களாகிய தங்களில் ஒருவர்தான் நடராசப் பெருமான் என்றும், எனவே கோயிலும் அதன் சொத்துகளும் தங்கள் ஆன்மீக உரிமை என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்கள் தீட்சிதர்கள். சு.சாமியும் இந்து முன்னணிக் கும்பலும் தீட்சிதர்களுக்கு ஆதரவு. சிதம்பரம் கோயிலுக்கு எத்தனை ஆயிரம் ஏக்கர் நிலம், எத்தனை மனைகள், கட்டிடங்கள் இருந்தன, தீட்சிதர்கள் தின்றது போக இன்று மிச்சம் என்ன இருக்கிறது, எங்கே இருக்கிறது என்ற உண்மைகளைக் கண்டுபிடிப்பது, ஸ்விஸ் வங்கி கருப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதை விடக் கடினமானது.
    கோயில், மடங்களின் பேரில் இருந்த சொத்துகளை பார்ப்பன, ஆதிக்க சாதிக் கும்பல் தின்று கொழுத்ததை முடிவுக்குக் கொண்டுவர சர். டி.சதாசிவ அய்யர், பனகல் ராஜா ஆகியவர்கள் முயன்று 1927ஆம் வருடத்தில் இந்துமத தர்மபரிபாலன சட்டத்தை நிறைவேற்றினார்கள். அச்சட்டப்படி தர்மகர்த்தாக்கள் அடங்கிய வாரியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, கோயில் சொத்துகள் நிர்வகிக்கப்பட்டன. இச்சட்டம் நிறைவேறுவதை சத்தியமூர்த்தி அய்யர் முதல் எம்.கே.டி. ஆச்சாரி வரை அனைத்துப் பார்ப்பனிய சக்திகளும் கடுமையாக எதிர்த்தனர். 1951-இல் அன்றைய தமிழக முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்து சமய அறநிலையத் துறை எனும் அரசுத்துறையை உருவாக்கும் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதற்காக அவரை சுதேசமித்திரன் போன்ற பார்ப்பனப் பத்திரிகைகள், ’வெளியே ஒரு கருப்புச்சட்டை ராமசாமி (பெரியார்),  உள்ளே ஒரு கதர்ச்சட்டை ராமசாமி’ என திட்டித் தீர்த்தன.
    “1951க்கு முன்பு தர்மகர்த்தாக்கள் வேண்டுமென்றே நிலத் தீர்வையையோ அல்லது போர்டாருக்குச் செலுத்தவேண்டிய தொகையையோ செலுத்தாது வைத்து, கோவில் நிலங்களை ஏலத்துக்குக் கொண்டுவந்து தாங்களே தட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள்.” என்றும் “தஞ்சாவூர் ஜில்லாவில் வேதாரண்ய ஈஸ்வரர் தேவஸ்தானத்துக்கு 16,000 ஏக்கர் நிலம் கொண்ட 45 கிராமங்கள் சொந்தமாக இருக்கின்றன. இருந்தும்கூட, இதன் வருஷ வருமானம் இன்று ரூ.75,000 என்றுதான் காட்டப்படுகிறது. வட ஆற்காடு  ஜில்லாவில்  ஒரு கோவிலின் தர்ம சொத்துக்கள் பூராவுமே ஒரு ஜாகீரின் சொந்த சொத்தாக மாறிவிட்டது. தஞ்சாவூர் ஸ்வர்க்கபுரம் மடத்தில் சுமார் ரூ.15,000 ரொக்கம் கையாடல் செய்யப்பட்டு, 26 ஏக்கர் நிலம் பராதீனம் ஆகியிருக்கிறது. திருச்செங்கோட்டிலும் வேதாரண்யத்திலும் நகைகள் காணாமல் போயுள்ளன” என்றும் குறிப்பிட்டு, இந்து அறநிலையத் துறையின் தேவையை அன்று ஓமந்தூரார் வலியுறுத்தியுள்ளார்.
    இன்று அறநிலையத்துறை இருக்கிறது. சொத்துகள்தான் இல்லை. மிகவும் அரிதாக சில அதிகாரிகள் இப்படிக் களவு போன கோயில் சொத்துகளின் பட்டியலை வெளியிடுகிறார்கள். ஒரு கபாலீசுவரர் கோயில் சொத்து விவகாரம் அரைகுறையாக வெளியே வந்திருக்கும்போதே, கொள்ளையின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் என்று தெரிகிறது. பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தில் 1951-இல் இருந்த பெரிய மடங்கள் 184. பெரிய கோவில்கள் 12,232. இவற்றிற்கு சுமார் 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தன. பிரிக்கப்பட்ட பின் இவை 6 லட்சம் ஏக்கர்களாகின. அந்த நிலங்கள் மற்றும் சொத்துகள் யாரிடம் இருக்கின்றன என்ற விவரத்தை அறநிலையத்துறை வெளியிட வேண்டும். அந்த சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு மக்களின் உடைமையாக்கப்பட வேண்டும். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெருநகரங்களில் விழுங்கப்பட்டுள்ள கோயில் சொத்துக்கள் பல ஆயிரம் ஏக்கர் இருக்கும். அந்தக் கோயில் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவற்றில் வீடற்ற ஏழைகளைக் குடியேற்ற வேண்டும்.
    தமது மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை  அனைத்தையும் தீர்த்துக் கொள்ளவும், ஊர் சொத்தைக் கொள்ளையடிக்கவும், கடவுளின் பெயரைக் கவசமாகப் பயன்படுத்திய கயவர்களின் வாரிசுதான் இந்து முன்னணி முதலான அமைப்புகள். “மயிலாப்பூர் கிளப்பையும் பாரதிய வித்யா பவனையும் இடித்துவிட்டு, கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை மீட்போம்” என்று ஒருவேளை அறநிலையத்துறை அறிவித்தால், இந்து முன்னணியினர் இரவோடு இரவாக கபாலி கோயிலையே இடித்து விட்டு, அதைச் ‘சர்ச்சைக்குரிய இடம்’ ஆக்கி விடுவார்கள். கபாலிக்குக் கோயில் சொந்தம் என்று நிரூபித்த பின்னர்தானே, கோயிலுக்கு கிளப் சொந்தம் என்று பேசவே முடியும்

    கருத்துகள் இல்லை: