வியாழன், 23 பிப்ரவரி, 2012

Jeya Cho மாட்டுக்கறி-நக்கீரன்: பார்ப்பனக் கும்பலின் தீண்டாமை வெறி!


மாமி-மாட்டுக்கறி-நக்கீரன்-1மாட்டுக்கறி களங்கத்திற்காக குமுறுபவர்கள், எம்.ஜி.ஆர். இறந்தவுடன் உடன்கட்டை ஏறப்போவதாகச் சொல்லி தனக்குத்தானே களங்கம் கற்பித்துக் கொண்டார் செல்வி ஜெயலலிதா, அந்தக் ‘களங்கத்தை’ எந்த நீதிமன்றத்தில் கழுவுவார்கள்?








ஜெயலலிதாவை அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர். நியமித்த போது கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், பொன்னையன் ஆகியோர், ஜெயலலிதா பார்ப்பனர் என்பதைச் சுட்டிக்காட்டி, அதனை ஆட்சேபித்தார்களாம். “மாட்டுக்கறி சாப்பிடுகிற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க?”என்று எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பதிலளித்தாராம். இப்படி ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து தனக்கு நெருங்கியவர்களிடம் சமீபத்தில் ஜெ. பேசிக்கொண்டிருந்ததாக ஒரு செய்தியை நக்கீரன் வெளியிட்டது.

உடனே அம்மாவின் விசுவாசிகள் கும்பல் கும்பலாக வந்து, போலீசின் பாதுகாப்போடு நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கிவிட்டுச் சென்றார்கள்.  அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் நக்கீரன் அலுவலத்துக்கு அருகே அமைந்துள்ள ஜாம்பஜார் போலீசு நிலையத்தையே கண்ட்ரோல் ரூமாக மாற்றிக் கொண்டு, அங்கிருந்தபடி மேற்படி போரை  வழிநடத்தியதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. இந்தப் போரில் உயிர்ச்சேதம் இல்லையே தவிர, மற்றபடி தினகரன் அலுவலகத் தாக்குதலுக்கும் இதற்கும் ‘கொள்கைரீதியாக’ வேறுபாடு ஏதும் இல்லை.
அம்மாவின் படம் தாங்கிய அட்டையுடன் பத்திரிகையைக் கொளுத்துவது அம்மாவை அவமதிப்பதாக ஆகிவிடும் என்பதால், அம்மாவைப் பிய்த்துக் குப்பையில் வீசி விட்டு, உள்பக்கங்களை மட்டும் கொளுத்தினார்கள் உடன்பிறப்புகள். இதழை விற்கக்கூடாதென பெட்டிக்கடைக்காரர்கள் மிரட்டப்பட்டனர்.  ஏவல்துறை நக்கீரன் அலுவலகத்திற்குள் புகுந்து தேடுதல் வேட்டை நடத்தியது. நக்கீரன் அலுவலகத்துக்கு மட்டும் மின்சாரத்தை நிறுத்துவது ஜனநாயக உரிமையைப் பறிப்பதாக இருக்கும் என்பதால், அந்த வட்டாரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் துணை ஆசிரியர் காமராஜுக்கு எதிராகத் தமிழகத்தின் பல பகுதிகளில் அம்மாவின் விசுவாசிகளால் பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் புகார்கள் பதியப்பட்டன.
கிசுகிசு செய்திகளை நக்கீரன் மட்டுமின்றி, ஜு.வி., ரிப்போர்ட்டர், தினமணி, தினமலர், தினகரன் முதல் உலக உத்தமர் சோ வரை அனைவரும்தான் பிரசுரிக்கின்றனர். கிசுகிசுக்கள் மட்டுமின்றி, போயஸ் தோட்டம், கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி முதல் வெள்ளை மாளிகை வரையில் எங்கே என்ன பேசிக்கொண்டாலும், அவை அடுத்த வார தமிழ் பத்திரிகையில் எழுதப்பட்டு விடுகின்றன. ஜெ  சசி மோதல் போயசுத் தோட்டத்துக்குள்ளே எப்படி நடந்தது, யார் என்ன வசனம் பேசினார்கள் என்பது குறித்து, பல “ஸ்கிரிப்டுகள்” நக்கீரன், ஜூ.வி., ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல பத்திரிகைகளிலும் வெளிவந்தன. “நான் பேசியது உனக்கெப்படி தெரியும்?” என்று அப்போதெல்லாம் அம்மா கோர்ட்டுக்குப் போகவில்லை.
மாமி-மாட்டுக்கறி-நக்கீரன்-1‘‘நக்கீரன் இதழ் ஜெயாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எந்தச் செய்தி வெளியிட்டாலும், அவரின் கருத்தையும் கேட்ட பிறகுதான் வெளியிட வேண்டும் என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும்பொழுது, அதனை மீறி நக்கீரன் இதழ் இந்த மாட்டுக்கறி செய்தியை வெளியிட்டிருப்பது நீதிமன்றத்தையே  அவமதிப்பதாக இருந்ததால், தமிழக அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.  மேற்படி கட்டுரையின் மூலம் அவமதிக்கப்பட்டிருப்பது நீதிமன்றம்தான் என்பதைப் புரட்சித்தலைவி தெளிவுபடுத்திய பின்னரும், “ஆத்தாளுக்கு விளக்கு போட்டு, வருத்தத்தை அம்மாவிடம் தெரிவிக்குமாறு” நக்கீரனுக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். நக்கீரன் வருத்தமும் தெரிவித்து விட்டது.
இருப்பினும் அவமதிப்பை எற்படுத்திய இதழ் கடைகளிலிருந்து அநேகமாகப் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதால், எதற்காக இந்தத் தண்டனை என்பதை வாசகர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டது பற்றிச் செய்தி வெளியிட்ட இந்து நாளேடு, ஏன் தாக்கப்பட்டது என்பதை விளக்குமுகமாக, நக்கீரனின் மாட்டுக்கறி கதையை வெளியிட்டிருந்தது. மாட்டுக்கறி மேட்டரை ஆங்கிலத்தில் கிளப்புவது, பாரதிய ஜனதா ஆதரவுடன் தான் பிரதமராகும் வாய்ப்பைக் கெடுப்பதற்குத்தான் என்பது புரட்சித்தலைவிக்குத் தெரியாதா என்ன? அதனால்தான் நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக நக்கீரன் மீது வழக்கு போட்ட ஜெ., தன்னை அவமதித்து விட்டதாக இந்து ஆசிரியர் என்.ராம் மீது நீதிமன்றத்தில் கிரிமினல் புகார் கொடுத்துள்ளார். என்.ராம் மீது நில அபகரிப்பு புகார், கோபால் மீது கொலை மிரட்டல் புகார் என்று சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் அளவு வழக்குகள் சேர்ந்து கொண்டிருக்கின்றன. நாம் விசயத்துக்கு வருவோம்.
நக்கீரன் குறிப்பிட்டுள்ள சம்பவத்தில் தொடர்புடைய எம்.ஜி.ஆர்., எஸ்.டி. சோமசுந்தரம், கே.ஏ. கிருஷ்ணசாமி ஆகிய மூவர் மட்டுமின்றி, சம்மந்தப்பட்ட (அல்லது படாத) மாடும் உயிரோடு இல்லை என்பதால், அவர்கள் கருத்தை அறிய முடியவில்லை. உயிரோடு இருக்கும் பொன்னையன், தொடர்ந்து உயிரோடு இருக்க விரும்புவதால்,  புரட்சித்தலைவர் அப்படி சொல்லவே இல்லை என்றும் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும், புரட்சித்தலைவிக்கு சமைக்கவே தெரியாது என்பதால், புரட்சித்தலைவர் அப்படிச் சொல்லியிருக்கவே முடியாது என்றும் அம்மாவுக்கு சமைக்கத் தெரியும் என்று கூறியிருப்பதே  அபாண்டமானதொரு அவதூறு என்ற கோணத்திலும் இதனைத் தெளிவுபடுத் தியிருக்கிறார். நடுநிலையாளர்களான சோ ராமஸ்வாமி, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் போன்றோர், “ஜெயாவின் புகழுக்கும், நற்பெயருக்கும், செல்வாக்கிற்கும் களங்கம் விளைவிக்கும்” நோக்கில்தான் நக்கீரன் இச்செய்தியினை வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்டுக் கண்டித்துள்ளனர்.
மாமி-மாட்டுக்கறி-நக்கீரன்-3அவ்வளவு பயங்கரமான அவதூறு அந்த செய்தியில் என்ன இருக்கிறது? ‘மாமி’ என்ற சொல்லை யாரும் அவதூறாகக் கருத வாய்ப்பில்லை.‘நான் ஒரு பாப்பாத்திதான்’ என்று சட்டமன்றத்தில் கம்பீரமாக அறிவித்துக்கொண்டவர் அம்மா. எஞ்சியிருப்பது மாட்டுக்கறி மட்டும்தான். ஜெயா மாட்டுக் கறி உண்ணும் பழக்கமுடையவர் என்பது மட்டுமின்றி, எம்.ஜி.ஆருக்கு மாட்டுக் கறி சமைத்தும் போட்டதாக நக்கீரன் கூறியுள்ளது.  அவாள் இவாள் எல்லாம் கூச்சலிடுவதும், குமுறுவதும்  இதற்காகத்தான்.

மாட்டுக் கறியை மிகக் கேவலமான உணவாகவும் அதனை உண்போரை  குறிப்பாக, தாழ்த்தப்பட்டோரையும், முசுலீம்களையும்  தீண்டத்தகாதவர்களாகவும் கருதும் பார்ப்பன  ஆதிக்க சாதி மனோபாவத்திலிருந்துதான் நக்கீரன் வெளியிட்டுள்ள செய்தியைக் கண்டு பார்ப்பனக் கும்பல் குதிக்கிறது. இப்பிரச்சினையில் பார்ப்பனக் கும்பல் வெளிப்படுத்தும் சாதி வெறியும், தீண்டாமை வெறியும்தான் அநாகரிகமானது, கண்டிக்கத்தக்கது. நியாயமாக, மாட்டுக் கறி குறித்த தீண்டாமை மனோபாவத்தை வெளிப்படுத்தியிருக்கும் இப்பார்ப்பனக் கும்பலின் மீதுதான் வன்கொடுமை சட்டம் பாய்ந்திருக்க வேண்டும்.  ஆனால், மாட்டுக் கறி உண்பது கேவலமானது என்ற பார்ப்பன  ஆதிக்க சாதி மனோபாவம் நீதிமன்றம் வரை புரையோடியிருக்கிறதே! நீதிமன்றத்தின் மீது யார் வன்கொடுமை வழக்கு தொடுப்பது?
எனவே, பிரச்சினையை வேறு கோணத்திலிருந்துதான் அணுக வேண்டும் போலும்! வேதத்துக்கு இணையான தொன்மை வாய்ந்ததும், வேதங்களால் விதந்து போற்றப்பட்டதும், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் இனியதும், யாக்ஞவல்கியர் முதலான உபநிடத கால முனிவர்களால் விரும்பிச் சுவைக்கப்பட்ட புனித உணவுமான மாட்டிறைச்சியை இழிவுபடுத்தியதன் மூலம், வேதஇதிகாசங்களை இழிவுபடுத்தி, தங்கள் மனதைப் புண்படுத்தியதற்காகவும் துக்ளக், தினமணி போன்ற பத்திரிகைகள் மீது ‘ஹிந்துக்கள்’ வழக்கு தொடுக்கலாம். மாட்டுக் கறியின் புனிதத் தன்மையை நிறுவுவதற்கான அசைக்க முடியாத வேத சாத்திர ஆதாரங்களைப் பேராசிரியர் ஜா எழுதிய பசுவின் புனிதம் நூலிலிருந்து அவர்கள் திரட்டிக் கொள்ளலாம்.
மாட்டுக் கறி சமைத்தார், சுவைத்தார் என்பன போன்ற புனிதமற்ற அவதூறுகள் மூலம் ஜெயலலிதாவின் புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் கற்பித்து விட்டதாகக் குமுறும் ஹிந்து தர்மத்தின் காவலர்கள், எம்.ஜி.ஆர். இறந்தவுடன் தானும் உடன்கட்டை ஏறப்போவதாகச் சொல்லி, தனக்குத்தானே களங்கம் கற்பித்துக் கொண்டாரே செல்வி ஜெயலலிதா, அந்தக் ‘களங்கத்தை’ எந்த நீதிமன்றத்தில் கழுவுவார்கள்? “திருவளர்ச்செல்வியோ நான் தேடிய தலைவியோ என்ற பாட்டின் மூலம் என்னை அடையாளம் காட்டினார் புரட்சித் தலைவர்” என்று சில மாதங்களுக்கு முன் சட்டமன்றத்தில் ஜெயலலிதா பாட்டுப் பாட, அதனை மேசையைத் தட்டி வரவேற்றார்களே ரத்தத்தின் ரத்தங்கள், அந்த மானக்கேட்டுக்கு எந்தக் கோவாலு மீது கேஸ் போடுவது?
திருவளர்ச்செல்வியின் தனிப்பட்ட வாழ்க்கை புரட்சித்தலைவியின் பொதுவாழ்க்கையைப் பிரசவிக்கிறது. மறுகணமே புரட்சித்தலைவியின் பொதுவாழ்க்கை,  “அன்புத்தோழி, வளர்ப்புமகன், கொடநாடு எஸ்டேட்..” என்று தனிப்பட்ட வாழ்க்கையைக் கருத்தரிக்கிறது. பிறகு தோழிகளுக்கிடையில் வெடித்த தனிப்பட்ட முரண்பாடுகள், தமிழகத்தில் ஒரு ‘அரசியல் புயலை’ உருவாக்குகின்றன. பொதுவாழ்க்கையிலிருந்து ஊழலை ஓட ஓட விரட்டுகிறார் புரட்சித்தலைவி. தனிவாழ்வும் பொதுவாழ்வும் தண்டவாளம் போலப் பிரிந்தும் பிணைந்தும் தோற்றம் காட்டும் இவ்வுலகில் இவற்றைப் பிரித்தறிவது எப்படி?
கொ.ப.செ. என்பது பொதுவாழ்க்கை, மாட்டுக்கறி தனிப்பட்ட வாழ்க்கையா? ஜெயேந்திரனின் துறவறம் பொதுவாழ்க்கை, அன்னாரின் ராசலீலைகள் தனிப்பட்ட வாழ்க்கை என்பது போலவா? எது நற்பெயர்,எது களங்கம்? எது சட்டமன்ற மேசை, எது நக்கீரன்? எது ஜீவாத்மா, எது பரமாத்மா? எது மாயை, எது உண்மை? சோ ராமஸ்வாமி அய்யர்தான் விளக்கமளிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: