New Delhi, India: The Supreme Court on Tuesday issued notice to Tamil Nadu Chief Minister Jayalalithaa on an appeal filed by the CBI against a Madras High Court judgment, which set aside the 333,000 U.S. dollars gift case against her on the ground of inordinate and unexplained delay at the investigation and trial stages.
சரியாக 20 வருடங்களுக்குமுன் இதே மாதம் (1992 பிப்ரவரி) அப்போதும் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் தமிழகம் எங்கும் அ.தி.மு.க.-வினரால் கொண்டாடப்பட்டது. அமைச்சர்களும், கட்சி முக்கியஸ்தர்களும் ஜெயலலிதாவுக்கு விலையுயர்ந்த பிறந்தநாள் பரிசு கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அன்று அமைச்சர்களை நேரடியாக அழைத்து ‘விலையுயர்ந்த பரிசு’ சமாச்சாரத்தை சொன்ன நபர், தற்போது அ.தி.மு.க.-வில் இல்லை. சசிகலா குடும்பத்தினரில் ஒருவராக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
உத்தரவிட்ட நபர் கூறிய விலையுயர்ந்த பரிசு, திருவள்ளுவர் சிலையோ, தஞ்சாவூர் தட்டோ அல்ல… பேங்க் டி.டி. (டிமான்ட் டிராஃப்ட்)!
பிப்ரவரி 24-ம் தேதி காலையிலேயே, பிறந்தநாள் பரிசுகளுடன் வி.ஐ.பி.கள் ஆஜராகி விட்டனர். மொத்தம் 89 பேங்க் டிராஃப்ட்டுகள் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் பரிசுகளாக கிடைத்தன. 21 வெவ்வேறு பேங்குகளில், 57 நபர்களின் பெயர்களில் எடுக்கப்பட்ட 89 டிராஃப்டுகளின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபா! (20 வருடங்களுக்குமுன் மிகப்பெரிய தொகை அது)
அப்போதைய அமைச்சர்களில் அம்மாவுக்கு அதிக அன்புப் பரிசு கொடுப்பது யார் என்ற போட்டியே ஏற்பட்டதில், முதல் இரு இடங்களையும் தட்டிச் சென்றவர்கள், செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு (இவர் அறந்தாங்கி திருநாவுக்கரசர் அல்ல) ஆகிய இருவருமே! ஒருவர் 30 லட்சத்துக்கும், மற்றொருவர் 27.5 லட்சத்துக்கும் டி.டி. எடுத்துக் கொடுத்து, போட்டியில் வெற்றி பெற்றிருந்தனர்.
ஆனால், இவர்கள் இருவரால் கொடுக்கப்பட்ட டி.டி.க்களைவிட பெறுமதி வாய்ந்த டி.டி. ஒன்றும் அந்த 89 பரிசுகளில் இருந்தது. நியூயார்க், அமெரிக்காவில் எடுக்கப்பட்டிருந்த அந்த ஓவர்ஸீஸ் ட்ராஃப்ட்டின் மதிப்பு 3 லட்சம் அமெரிக்க டாலர்கள்.
அ.தி.மு.க. ஆட்சி போய், தி.மு.க. ஆட்சி வந்தபோது, இந்த மெகா பிறந்தநாள், விசாரணைக்கு உள்ளானது.
கிடைத்த பரிசுகளில் வெளிநாட்டுப் பணமும் இருப்பதை கண்டுகொண்ட தி.மு.க. முதல்வர் கருணாநிதி ஒரு முடிவு எடுத்தார். இப்படியான விவகாரங்களில் நல்ல அனுபவசாலியான அவர், வெளிநாட்டுப் பண வரவு இருப்பதால், மத்திய அரசு இதில் புகுந்து விளையாட முடியும் என்பதைப் புரிந்து கொண்டு, வழக்கு சி.பி.ஐ.-யின் கைகளுக்கு போகும்படி செய்துவிட்டார்.
சி.பி.ஐ. ஆரம்பத்தில் சிஸ்டமேட்டிக்காக விசாரிக்கத் தொடங்கியது.
பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த டி.டி.க்கள் முழுவதையும் ஜெயலலிதா தனது சொந்த வங்கிக் கணக்கில் (கனரா வங்கி, மைலாப்பூர் கிளை) வைப்பில் இட்டிருந்தார். அங்கேயிருந்த பதிவுகளில் இருந்து விசாரிக்கத் தொடங்கியபோது, பரிசு கொடுக்க டி.டி. எடுத்த 57 நபர்களில் 12 பெயர்கள் போலியானவை என்று தெரியவந்தது. டி.டி. எடுக்கப்பட்டபோது கொடுக்கப்பட்ட அட்ரஸ்களில் அந்தப் பெயர்களில் யாருமில்லை.
சரியான அட்ரஸ்கள், மற்றும் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்த வேறு சிலர், தமக்கும், அந்த டி.டி.க்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று நிரூபித்தார்கள். அந்த நபர்களில் ஒருவர், தமது வாழ்க்கையில் முழுசான 1000 ரூபாவை கண்டதே இல்லை. இந்த லட்சணத்தில் அவரது பெயரில் 2.5 லட்சம் ரூபாவுக்கு டி.டி. எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து வந்த பேங்க் டிராஃப்ட்டின் ரிஷிமூலம் அறிய முனைந்தது சி.பி.ஐ.
ஜெயலலிதாவால் மைலாப்பூர் கனரா வங்கியில் டிப்பாசிட் செய்யப்பட்ட அந்த டிராஃப்ட், அங்கிருந்து கிளியரன்ஸ் செய்யப்படுவதற்காக கலிபோர்னியாவிலுள்ள யூனியன் பேங்குக்கு அனுப்பப்பட்டது. (கனரா வங்கியின் அமெரிக்க கிளியரன்ஸ் ஏஜன்ட், யூனியன் பேங்க் என்பதால்) அங்கிருந்து நியூயார்க் பேங்கர்ஸ் ட்ரஸ்ட் கம்பனிக்கு அனுப்பப்பட்டு, கிளியர் செய்யப்பட்டு, மைலாப்பூருக்கு பணம் வந்து சேர்ந்திருந்தது.
இந்த டிராஃப்ட் தொடர்பான மேலதிக விபரங்களை சி.பி.ஐ. பெறுவதற்கு முடியவில்லை. இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு சரியான பதில்கள் அமெரிக்காவில் இருந்து வரவில்லை.
அதையடுத்து, சி.பி.ஐ. அமெரிக்காவுக்கு யாரையாவது அனுப்பி விபரங்களைப் பெற முடிவு செய்தது.
சி.பி.ஐ.-யின் சென்னை அலுவலகத்தில் அப்போது ஜாயின்ட் டைரக்டர் பதவியில் இருந்தவர் டி.முகர்ஜி. அவர் சி.பி.ஐ. சார்பில் அமெரிக்கா சென்றார். அங்கே நேரில் சென்று விசாரித்தபோது, 3 லட்சம் டாலருக்கான டிராஃப்டை ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்க எடுத்த நபரின் பெயர் கே.டி.பி.மேனன் என்று தெரியவந்தது.
இந்தத் தகவல் கிடைத்தும், அதனால் சி.பி.ஐ.-க்கு எந்தப் பலனும் இல்லை. காரணம், ஜெயலலிதாவுக்கு பணம் அனுப்பிய ஆண்டே கே.டி.பி.மேனன் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
இதனால், அமெரிக்க டாலர் டிராஃப்ட் விவகாரத்தை மேலும் கிளறுவதில் பலன் இல்லை என்று விட்டுவிட்டது சி.பி.ஐ. (லோக்கல் பரிசுகளை தொடர்ந்தும் விசாரித்துக் கொண்டு இருந்தார்கள்) ஒரு கட்டத்தில் அனைவருக்கும் ஆர்வம் குன்றி, இப்படியொரு கேஸ் இருப்பதே மறந்துவிட்டது.
2000-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் இந்த கேஸை தூசுதட்டி எடுத்து, புதிய கோணம் ஒன்றில் விசாரிக்கத் தொடங்கினார்.
இறந்துபோன மேனன், அ.தி.மு.க. அரசில் ஏதோ காரியம் செய்வதற்காக பணம் கொடுத்திருந்தார். அந்த காரியம் கைகூடும் முன் இறந்து போனார் என்பதே சி.பி.ஐ.-யின் பழைய தியரியாக இருந்தது. 2000-ம் ஆண்டு இந்த கேஸை தூசு தட்டி எடுத்த சி.பி.ஐ. அதிகாரி, புதிய கோணமாக, மேனன் ஒருவேளை தமது சொந்த காரியத்துக்கு அல்லாமல், வேறு யாருக்காகவோ இந்த டிராஃப்டை எடுத்திருக்கலாம் அல்லவா என்று யோசித்தார்.
அதையடுத்து, தன்னிடமிருந்த சொந்தப் பணத்தை ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்தாரா என்று பார்க்க விரும்பிய அதிகாரி மீண்டும் அமெரிக்க பேங்க் ட்ரான்ஸாக்ஷன்களை கிளறத் தொடங்கினார். அங்கே அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
நியூயார்க் பேங்கர்ஸ் ட்ரஸ்ட் கம்பனியில் கிளியர் செய்யப்பட்ட டிராஃப்ட்டுக்கான பணம், ஜெர்சியிலுள்ள (சானல் ஐலன்ட்ஸ்) ANZ கிரீன்ட்லேஸ் பேங்க்கில் உள்ள மேனனின் கணக்கில் இருந்து ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், அந்தக் கணக்கு, இந்த டிராஃப்ட் எடுப்பதற்காக என்றே ஸ்பெஷலாக திறக்கப்பட்டிருந்தது. அதில் வேறு எந்த கொடுக்கல் வாங்கல்களும் கிடையாது.
இந்தப் புதிய கணக்குக்கு 3 லட்சம் டாலர் எப்படி வந்தது என்று பார்த்தால், அதே வங்கியிலுள்ள மற்றொரு கணக்கில் இருந்து வந்திருந்தது. அதுவும் மேனனின் கணக்குதான். மேனனின் இந்த இரண்டாவது கணக்குக்கு வேறு ஒரு ‘புதிய நபரின்’ கணக்கில் இருந்து வந்த பணமே, இரண்டாவது கணக்கில் இருந்து, புதிய கணக்குக்கு போய், ஜெயலலிதாவுக்கு டிராஃப்ட்டாக மாறியிருந்தது.இந்த ‘புதிய நபரின்’ பெயர் என்னவென்று விசாரித்தபோது, எம்.ஏ.எம்.ராமசாமி என்றது கிரீன்ட்லேஸ் பேங்க்!
சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமியின் பெயர் சுற்றிக்கொண்டு இப்படி வந்து சேர்ந்தது.
அந்த அக்கவுன்டின் உரிமையாளரின் பெயர் எம்.ஏ.எம்.ராமசாமி என்ற போதிலும், அவர்தான் சென்னை தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி என்பதை சட்டபூர்வமாக சி.பி.ஐ.-யால் அப்போது நிரூபிக்க முடியாது போனது. காரணம் ராமசாமியின் அடையாளம் எதையும் கிரீன்ட்லேஸ் பேங்க் கொடுக்கவில்லை. சென்னை தொழிலதிபர் ராமசாமி, தமக்கு ஜெர்சியிலுள்ள ANZ கிரீன்ட்லேஸ் பேங்க்கில் அக்கவுன்டே கிடையாது என்று கூறி விட்டார்.
வழக்கு அத்துடன் மீண்டும் முடங்கிக் கொண்டது.
இப்போது, சி.பி.ஐ. மீண்டும் அதே வழக்கை தூசு தட்டி எடுப்பது எதற்காக? 2000-ம் ஆண்டில் நிரூபிக்க முடியாத தொடர்பை, இப்போது எப்படி நிரூபிக்க முடியும்?
அதற்கு ஒரு சான்ஸ் இருப்பது உண்மை.
இந்த விவகாரம் எல்லாம் நடந்தது அமெரிக்கா மீதான அல்-காய்தா தாக்குதல் (செப்.11, 2001) நடப்பதற்கு முன்பு என்பரத கவனியுங்கள். செப்.11 தாக்குதலின்பின், தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் போகும் பாதைகளை அடைக்க அமெரிக்க அரசு, வெளிநாட்டு பண ட்ரான்ஸ்க்ஷன்களில் பல ரெகுலேட்டரி மேட்டர்களை கொண்டுவந்திருக்கிறது.
முன்பு போல பேங்குகள் மறுக்க முடியாதபடி இறுக்கமான சட்ட விதிமுறைகள் தற்போது உள்ளன. இந்த விதிமுறைகள், 2001-க்கு முன்பு நடைபெற்ற பணப் பரிமாற்றங்களுக்கும் பொருந்தும்.
அப்படியொரு வழியில் சில தகவல்கள் பெற்ற தெம்பில்தான், சி.பி.ஐ. இந்த வழக்கை மீண்டு் உயிர்பெற வைக்க போராடியது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். அவர்கள் கூறுவதன்படி, “சி.பி.ஐ.-யின் கைகளில் புதிதாக ஒரு ட்ரம்ப் கார்டு உள்ளது”
2000-ம் ஆண்டில் இல்லாத அந்த ட்ரம்பை, அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குமுன் மேஜையில் போடுவார்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக