ஞாயிறு, 15 மே, 2011

அதிமுகவால் லாபமடைந்த விஜயகாந்த்: வைகோவை 'நம்பி' ஏமாந்த திமுக!

சென்னை: சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அரசியல் அரங்கில் பல விசித்திரங்களை ஏற்படுத்தியுள்ளன.

இதுவரை இல்லாத அளவுக்கு அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு, அது அமைத்த கூட்டணி மட்டும் காரணமில்லை, மக்கள் மனதுக்குள் திமுகவுக்கு எதிராக கடும் அதிருப்தியும், கோபமும் உழன்று கொண்டு இருந்ததே முக்கியக் காரணம் என்பது அதில் ஒன்று.

இந்தத் தேர்தலில் ஜெயலலிதா புத்திசாலித்தனமாக செய்த காரியம், விஜயகாந்த்துடன் அமைத்த கூட்டணிதான். இருப்பினும் இந்த கூட்டு மட்டுமே அதிமுகவுக்கு பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்து விட்டது என்று கூற முடியாத நிலை.

உண்மையில் அதிமுகவுடன் சேர்ந்ததால் விஜயகாந்த்துக்குத்தான் பெரும் லாபமும், பயனும் கிடைத்துள்ளது. அதாவது அதிமுகவை விட தேமுதிகதான் அதிக பலனைப் பெற்றுள்ளது.

கடந்த தேர்தலில் ஒரு சீட்டில் மட்டுமே வென்றது தேமுதிக. இந்த முறையும் அது தனித்துப் போட்டியிடிருந்தால் அதிமுக வாக்குகளைப் பிரித்திருக்கும் வழக்கம் போல. ஆனால் வழக்கம் போல விஜயகாந்த் மட்டுமே ஜெயித்திருப்பார், இந்த சந்துக்குள் புகுந்து திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும்.

இதைத் தடுத்து நிறுத்தியதே ஜெயலலிதாவின் புத்திசாலித்தனம். 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக இன்று 29 தொகுதிகளில் வென்றிருப்பது அக்கட்சிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு வந்திருந்தால் கட்சி ஒரு கட்டத்தில் காணாமல் போயிருக்கும். ஆனால் அதிமுகவுடன் சேர்ந்ததால் பெரும் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக தேமுதிகவினர் கருதுகிறார்கள். கிட்டத்தட்ட தேமுதிகவுக்கு உயிர் கொடுத்துப் பிழைக்க வைத்திருக்கிறார் ஜெயலலிதா என்பதே உண்மை.

சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுக்குக் கிடைத்துள்ள வாக்குகள் 31 லட்சமாகும். கடந்த 2009 லோக்சபா தேர்தலில், தமிழகம் முழுவதும் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 27.65 லட்சமாகும்.

லோக்சபா தேர்தலில் தேமுதிகவுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் 8.33 சதவீதமாகும். தற்போதைய சட்டசபைத் தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்துள்ள வாக்கு சதவீதம் 10 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதிமுகவுடன் சேர்ந்ததால் வந்த ஆதாயம் இது. இந்த அபார வெற்றியின் மூலம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது. முரசு சின்னம் அக்கட்சிக்கு நிரந்தரமாகியுள்ளது.

ஏமாற்றத்தைக் கொடுத்த வைகோ

இப்படி அதிமுகவை நம்பி விஜயகாந்த் பெரும் பலன் பெற்றுள்ள அதே நேரத்தில், வைகோவை நம்பிய திமுக பெரும் தோல்வியைச் சந்தித்து சுருண்டு போயுள்ளது.

அதிமுக கூட்டணியில் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்தவர் வைகோ. எத்தனையோ விமர்சனங்கள் வந்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் ஜெயலலிதாவுக்கு உறுதியாக ஆதரவு அளித்து வந்தவர். ஆனால் இந்தத் தேர்தலில் அவருக்கு மிகவும் குறைவான சீட்களே தர முடியும் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டதால் அதிருப்தி அடைந்த வைகோ, கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறினார், தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்தார்.

இதனால் திமுக தரப்பு உற்சாகமடைந்தது. வைகோவின் வெளியேற்றத்தால் அதிமுக பலவீனமடையும், மதிமுக வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்று அவர்கள் கணக்குப் போட்டனர்.

இதையடுத்து ஆங்காங்கு மதிமுகவினரை வளைக்க ஆரம்பித்தனர் திமுகவினர். அவர்களை பண ரீதியாகவும், பிற ரீதியாகவும் தங்கள் பக்கம் திருப்பினர். இதனால் மதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே திமுகவுக்கே கிடைக்கும். இதன் மூலம் அதிமுகவை தடுமாற வைக்கலாம் என்பது திமுகவினரின் கணக்கு.

ஆனால் நடந்தது வேறு. மதிமுகவின் வாக்கு வங்கி அதிமுகவுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களின் வாக்குகள் திமுகவுக்கு எந்தப் பலனையும் தரவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

ஆக, வைகோவையும்,மதிமுகவையும் நம்பி சற்று தெம்புடன் இருந்த திமுகவுக்கு அது கைவிட்டு விட்டது பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. எனவே வைகோவின் வெளியேற்றத்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும், பிரச்சினையும், சிறு சலனமோ கூட ஏற்படவில்லை என்பது அதிமுகவினரை நிம்மதிக்குள்ளாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: