வியாழன், 19 மே, 2011

Infosys Narayanamoorthi இன்போசிஸ் நாராயணமூர்த்தி விலகுகிறார்

"இன்போசிஸ் நிறுவனத்துக்கும், எனக்கும் இடையிலான உறவு, திருமணம் முடிந்து, தாய் வீட்டை பிரிந்து செல்லும் பெண்ணை வழியனுப்புவது போன்றது' என்று இதன் நிறுவனரும், தலைவருமான என்.ஆர்.நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்போசிஸ் நிறுவன தலைவர் பொறுப்பிலிருந்து இதன் நிறுவனர் நாராயணமூர்த்தி விலகுகிறார். இவருக்கு பதில், தலைவர் பொறுப்பை, வரும் ஆகஸ்ட் 21ம் தேதி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண்மை இயக்குனருமான கே.வி.காமத் ஏற்கிறார்.

இந்நிலையில், 2010 - 2011ம் ஆண்டுக்கான, நிறுவனத்தின் அறிக்கையில் வெளியாகியுள்ள பங்குதாரர்களுக்கான கடிதத்தில் நாராயணமூர்த்தி கூறியிருப்பதாவது: இன்போசிஸ் நிறுவனத்துக்கும், எனக்கும் இடையிலான உறவு, திருமணம் முடிந்து, தாய் வீட்டை விட்டு மணமகன் வீட்டிற்கு செல்லும் பெண் போன்றது. பெண்ணுக்கு தேவைப்படும் போது உதவ, பெற்றோர் தயாராக இருப்பர். புதிய சூழலை, புதிய பரபரப்பு வாழ்க்கையை துவங்குவதை பார்த்து பெற்றோர் சந்தோஷப்படுவர். ஆனால், என் மகள், மகனிடம் நான் அவர்களை அதிகமாக நேசித்ததாகக் கூறியபோது, அதை அவர்கள் நம்பத் தயாரில்லை. எதை அதிகம் நேசித்தேன் என்று அவர்கள் ஒரு முடிவு செய்திருந்தனர். அந்தளவிற்கு, தினமும் 16 மணி நேரம் வீதம், நிறுவனத்திற்கு 30 ஆண்டு காலம் உழைத்துள்ளேன். ஆண்டில் 330 நாட்கள், வேலை காரணமாக குடும்பத்தை விட்டு விலகி இருந்துள்ளேன். இன்போசிசில் இருந்து நான் பிரிக்க முடியாதவன் என்று என்னுடன் பணியாற்றியவர்கள் கூறியுள்ளனர். நிறுவனத்தின் முக்கிய முடிவுகள் எடுப்பதில் நான் தான் முதல் நபர். இவ்வாறு நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: