ஞாயிறு, 15 மே, 2011

ஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி

டெல்லி: தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை 'டீ பார்ட்டிக்கு' அழைத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இந்த அழைப்பை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டுள்ளார். இதன்மூலம் திமுகவை காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே விரட்ட முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்திரா காந்தி-எம்ஜிஆர் உருவாக்கிய நீண்ட கால கூட்டணி காங்கிரஸ்-அதிமுக இடையிலான கூட்டணியாகும். பின்னர் ராஜிவ் காந்தி பிரதமராகி, ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளரான பின்னரும் இக் கூட்டணி நீடித்தது.

ஆனால், சோனியா காந்தி காங்கிரஸ் தலைவரான பின்னர் ஜெயலலிதா அவரையும் காங்கிரசையும் ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் மிக வலுவான அந்தக் கூட்டணி உடைந்தது.

இதையடுத்து காங்கிரஸ் கூட்டணியில் திமுக இடம் பிடித்தது. 2004 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இந்தக் கூட்டணி 40க்கு 40 இடங்களைப் பிடித்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர திமுக காரணமாக அமைந்தது. அடுத்து 2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இக் கூட்டணி வென்று திமுக ஆட்சியைப் பிடித்தது.

2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க ஜெயலலிதா தீவிரமாக முயன்றார். ஆனால், ஜெயலலிதாவுடன் பேசுவதைக் கூட சோனியா தவிர்த்துவிட்டதால் அந்தக் கூட்டணி உருவாகவில்லை.

இந் நிலையில் திமுகவை ஒழித்துக் கட்டுவது என்ற வேலையை காங்கிரசின் அடுத்த தலைமுறைத் தலைவரான ராகுல் காந்தி ஆரம்பித்தார். திமுகவுக்கு எல்லா வகையிலும் நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்தார். அவருக்கு பேருதவியாக வந்து சேர்ந்தது ஸ்பெக்ட்ரம் விவகாரம்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் தேசிய அளவில் காங்கிரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது திமுக. இதனால் திமுகவை கூட்டணியில் வைத்திருந்தால் அடுத்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வுவது நிச்சயமாகிவிட்டது. இதற்கு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளே சாட்சி.

இதனால் திமுகவை கழற்றிவிட சோனியாவும்-ராகுலும் முடிவு செய்துவி்ட்டதாகத் தெரிகிறது. இதற்கு முன்னோட்டமாக அதிமுகவுடனான பழைய உறவை புதுப்பிக்கும் முயற்சிகளை காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது.

அடுத்த மாதம் டீ பார்ட்டி-பங்கேற்க ஜெ சம்மதம்:

முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதாவுக்கு டீ பார்ட்டி தர உள்ளார் சோனியா. இதற்காக டெல்லி வருமாறு ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். சோனியாவின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாகவும், அடுத்த மாதம் இந்த டீ பார்ட்டியில் கலந்து கொள்ள உள்ளதாகவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதில் ராகுல் காந்தியும் பங்கேற்று ஜெயலலிதாவை மீண்டும் கூட்டணிக்குக் கொண்டு வரும் வேலையை தீவிரப்படுத்துவார் என்று தெரிகிறது.

(1999ம் ஆண்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியுடன் இணைந்து சோனியாவுக்கு ஜெயலலிதா டீ பார்ட்டி தந்ததும், இருவரும் இணைந்து வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, ஆட்சியைக் கவிழ்த்ததும் குறிப்பிடத்தக்கது.)

இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொல்ல மத்திய அரசு ஆயுதம் தந்ததை திமுக தலைவர் கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. காரணம், அது சோனியா-ராகுல் காந்தி மன வருத்தம் தரும் என்பதால்..

அதே போல ஆயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட 20,000 தமிழர்கள் ஒரு மாதத்தில் கொன்று குவிக்கப்பட்டபோதும் கருணாநிதி அமைதி காத்தார். காரணம், இதைக் கண்டித்தால் சோனியா-ராகுல் காந்திக்கு கோபம் வரும் என்பதால்.

இப்படி காங்கிரஸ் எவ்வளவு அடித்தாலும் பதவிக்காக அமைதி காத்தார் கருணாநிதி. நாம் சண்டை போட்டால் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி போட்டுவிடும் என்பதால் 2011 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தமிழர் விரோத செயல்களுக்கு முழு அளவில் துணை போனார்.

ஆனால், எவ்வளவு விரட்டினாலும் வெளியேற மறுத்த திமுகவை ஸ்பெக்ட்ரத்தை வைத்தாவது விரட்ட ராகுல் முயன்றும் முடியவில்லை. இப்போது தமிழகத்தில் மாபெரும் தோல்வியைத் தழுவிட்ட திமுகவால் இனி தனக்கு பயனில்லை என்பதால் அதை காங்கிரஸ் தூக்கி வீச உள்ளது.

பதவிக்காக காங்கிரஸ் போன்ற ஒரு கட்சி செய்த எல்லா துரோகங்களையும் எல்லாம் மறைக்க முயன்ற திமுகவுக்கு, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாபெரும் தவறு செய்த திமுகவுக்கு இந்த தண்டனை நிச்சயம் தேவையே.

திமுகவுடன் கூட்டணி தொடர்கிறதாம்-ஜெயந்தி சொல்கிறார்:

இந் நிலையில் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறுவதற்கே இந்த டீ பார்ட்டிக்கு சோனியா ஏற்பாடு செய்துள்ளதாகவும், திமுகவுடன் கூட்டணி தொடர்வதாகவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.

விருந்துக்கு அழைப்பது அரசியல் நாகரிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

டீ பார்ட்டி நடக்கும் வரை ஜெயந்தி நடராஜன் இப்படித்தான் பேசிக் கொண்டே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: