வெள்ளி, 5 நவம்பர், 2010

MGM திவால்? பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான எம் ஜி எம் நிறுவனம் திவால் நோட்டீஸ்

ஜேம்ஸ்பாண்ட் பட நிறுவனம் திவால்
- பி.பி.சி
சிங்கம் மீண்டும் கர்ஜிக்குமா?
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களை தயாரித்த பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான எம் ஜி எம் நிறுவனம் திவால் நோட்டீஸ் அளித்திருக்கிறது.
லியோ என்கிற சிங்கத்தின் கர்சனையுடன் துவங்கும் எம் ஜி எம் நிறுவனத் தின் முத்திரை, உலக அளவில் பிரபலமானது. ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் இதுவரை காலமும் அறியப்பட்ட திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களிலேயே, எம்ஜிஎம் தான் மிகப்பிரபலமானது.
திரைப்படத்துறையின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படும் காலகட்டத்தில் 1924 ஆம் ஆண்டு உருவான எம் ஜி எம்மின் தயாரிப்பில் உருவான பென்ஹர் போன்ற திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகளை பெற்றன.
அதேபோல உலக அளவில் பிரபலாமாக அறியப்படும் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களுக்கான முதன்மை காப்புரிமையும் எம் ஜி எம்முடையது தான்.
இப்படியான திரைப்படங்களை தயாரித்திருந்தாலும், எம் ஜி எம் நிறுவனத்தின் கடன்சுமை என்னவோ தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்து வந்தது. அது தயாரித்த திரைப்படங்கள் பலவும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தன. அந்நிறுவன திரைப்படங்களின் டி வி டி விற்பனையில் ஏற்பட்ட சரிவும் அதன் பொருளாதார பிரச்சினைகளை அதிகப்படுத்தியது.
எம் ஜி எம் நிறுவனம் வர்த்தகரீதியில் வெற்றிபெறாத திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தது தான் அதன் இன்றைய பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் என்கிறார் பிரிட்டிஷ் திரைப்படத்தயாரிப்பாளர் மைக்கேல் வின்னர்.
தற்போது திவால் நோட்டீஸ் கொடுத்திருப்பதன் மூலம் தனது கடனை அடைக்கும் பொறுப்பிலிருந்து எம் ஜி எம் நிறுவனம் தன்னை விலக்கிக் கொள்கிறது. அதே சமயம் நிறுவனத்தின் கடன் அடைக்கும் முழு பொறுப்பும் கடன் கொடுத்தவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அடுத்த கட்டமாக, எம் ஜி எம் நிறுவனம் மறு சீரமைப்பு செய்யப்பட்டு, ஸ்பைகிளாஸ் எண்டர்டைன்மெண்ட் என்கிற திரைப்படத்தயாரிப்பு நிறுவன நிர்வாகிகளால் நடத்தப்படும். இந்த ஸ்பைகிளாஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தான் சிக்ஸ்த் சென்ஸ் மற்றும் சீ பிஸ்கட்ஸ் போன்ற பிரபல திரைப்படங்களை தயாரித்தது.
தற்போதைய திவால் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பிறகு, அரை பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை திரட்டப்போவதாகவும், அதை வைத்துக்கொண்டு, மட்டுப்படுத்தப்பட்ட நிறுவனமாக திரைப்படதயாரிப்பு மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாகவும் எம் ஜி எம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் மீள் கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு அடுத்த 30 நாட்களுக்குள் நீதிபதி ஒப்புதல் அளித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த ஒப்பந்த நடைமுறைகள், எம் ஜி எம் நிறுவனத்தின் ஜேம்ஸ் பாண்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான லார்ட் ஆப் தி ரிங்க்ஸின் தொடர்ச்சியான தி ஹாப்பிட் திரைப்படத்தின் எதிர்காலமும் உறுதிசெய்யும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

கருத்துகள் இல்லை: