சனி, 6 நவம்பர், 2010

குடிசைகளை அகற்றுவதற்கு எதிராக UNP போலி பிரச்சாரமொன்றை முன்னெடுக்கின்றது.


(By Vilani Peiris) இலங்கை அரசாங்கம் கொழும்பு நகரில் இருந்து 66,000 குடும்பங்களை வெளியேற்ற தயாராகின்ற நிலையில், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) இந்த வறிய மக்களுக்காகப் போராடுவதாக காட்டிக்கொள்கின்றது. எவ்வாறெனினும், வலதுசாரி கட்சியான யூ.என்.பி. யின் பிரச்சாரமானது அதனது தேர்தல் வெற்றிகளை முன்னேற்றுவதையே இலக்காகக் கொண்டுள்ளது. நகர்ப்புற வறியவர்களை பாதுகாப்பது அதன் குறிக்கோள் அல்ல.

கொழும்பை தெற்காசியாவின் வர்த்தக மையமாக மாற்றுவதற்கும் தீவின் உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்துவதற்கும் தீட்டியுள்ள திட்டங்களின் பாகமாகவே இந்த வெகுஜன வெளியேற்றத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கெதிரான உறுதியான போராட்டங்களை எதிர்பார்த்துள்ளதால், மக்களை வெளியேற்றும் வேலை, பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. மே மாதம் கொம்பனித்தெருவில் இருந்து 45 குடும்பங்களை வெளியேற்றுவதற்கும், அவர்களது வீடுகளை புல்டோசர்கள் கொண்டு உடைக்கும் போது அவர்களது போராட்டத்தை அடக்குவதற்கும் நூற்றுக்கணக்கான பொலிசாரும் இராணுவத்தினரும் நிறுத்தப்பட்டனர்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, வீதி அபிவிருத்தி அதிகார சபையையும் (யூ.டி.ஏ.) காணி சீர்திருத்த அபிவிருத்தி சபையையும் (எல்.ஆர்.டி.பி.), தனது சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தார். கொழும்பு மாநகர சபைக்கு பதிலாக பாதுகாப்பு அமைச்சின் மூலம் ஒரு சபையை நியமிக்க எண்ணியுள்ளதையும் அரசாங்கம் சமிக்ஞை செய்துள்ளது.

கொழும்பு குடிசைவாசிகள் மத்தியில் வளர்ச்சியடைந்துவரும் சீற்றத்துக்கு மத்தியில், அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்த்துப் “போராடுவதாக” யூ.என்.பி. கூறிக்கொள்கின்றது. அது கொழும்பில் குடியிருப்புப் பகுதிகளில் கூட்டங்களை நடத்தியுள்ளதோடு கொழும்பு மாநகர சபையை தூக்கியெறிவதை எதிர்த்து மனுவில் கையொப்பம் பெறும் பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளது. அக்டோபர் 14 நடந்த கூட்டமொன்றில் பேசிய யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, “அரசாங்கம் மக்களை வெளியேற்றுவதை நிறுத்தாவிட்டால் அனைவரும் ஐக்கியப்பட வேண்டும், நாம் வீதிக்கு இறங்க வேண்டும்” என வாய்ச்சவாடலாக பிரகடனம் செய்தார்.

மனுவில் கையெழுத்துப் பெறும் பிரச்சாரமானது மாநகரசபையின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்ற யூ.என்.பி. எடுக்கும் வெளிப்படையான முயற்சியாகும். மனுவில் கையொப்பமிடுமாறு மக்களுக்கு அழைப்புவிடுத்த விக்கிரமசிங்க, “நாம் இந்த மனுவை தேர்தல் ஆணையாளருக்கு கொடுப்போம். நாம் எப்படியாவது கொழும்பு மாநாகர சபை தேர்தலை நடத்தி அதில் வெற்றிபெறுவோம். பின்னர் உங்களது வீடுகளையும் நிலங்களையும் நாம் பாதுகாப்போம்,” என வாக்குறுதியளித்தார். இவை அனைத்தும் உண்மையானாலும் கூட, கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை மீறி குடிசைகளை அகற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இராஜபக்ஷ அரசாங்கத்தால் முடியும்.

கொழும்பு நகர குடிசைகள் சம்பந்தமாக யூ.என்.பி. யின் சொந்த சாதனைகளைப் பற்றியும் விக்கிரமசிங்க ஒரு பொய் சித்திரத்தை வரைந்தார். “யூ.என்.பி. அரசாங்கம் 1977ல் பதவிக்கு வந்த போது, அங்கு குடிசைகளும் கூடாரங்களும் இருந்தன. அவற்றுக்கு மின்சாரம், குழாய் நீர் அல்லது மலசலகூட வசதிகள் இருக்கவில்லை. நாம் மக்களுக்கு நில உரித்துக்களையும் அனுமதிப்பத்திரங்களையும் நிலத்துக்கான பரம்பரை உரிமைகளையும் கொடுத்தோம். நாம் அவர்களுக்கு அடுக்குமாடிகளை கட்டினோம்,” என அவர் கூறினார்.

முன்னைய பதிவுகள் இந்தப் பொய்களை அம்பலப்படுத்துகின்றன. இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) போலவே, யூ.என்.பி. யும் எப்பொழுதும் பெரும் வர்த்தகர்களதும் மற்றும் கொழும்பில் சொத்துக்களை நிர்மானிப்பவர்களதும் நலன்களுக்காகவே செயற்பட்டுள்ளது. 1977ல் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், தனியார்மயமாக்கும் சந்தை-சார்பு நிகழ்ச்சித் திட்டத்தை உலகில் முதலில் அமுல்படுத்தத் தொடங்கிய அரசாங்கங்களில் ஒன்றாக உருவெடுத்த யூ.என்.பி., பொதுச் செலவுகளை வெட்டிக் குறைத்து, பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக திறந்துவிட்டது.

இந்த வேலைத் திட்டத்தின் ஒரு பாகமாக, கொழும்பு பிராந்தியத்தை ஒரு பொருளாதார மையமாக மாற்றுவதற்கு யூ.என்.பி. முயற்சித்தது. யூ.என்.பி. தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன, மத்திய கொழும்பை நிதி மற்றும் வர்த்தகத்துக்காக விட்டுக்கொடுக்கும் வகையில், புதிய நிர்வாக தலைநகரை –ஜயவர்தனபுர- கட்டியெழுப்பும் திட்டத்தை அறிவித்தார். 1977ல் இருந்து 1994 வரையான ஆட்சிக் காலத்தின் போது, யூ.என்.பி. அரசாங்கம் குடியிருப்பவர்களின் நிலையை அலட்சியம் செய்து, அடுத்தடுத்து குடிசைகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டது.

* 1983ல், நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு அரங்கமான சுகததாச விளையாட்டரங்கை கட்டுவதற்காக யூ.என்.பி. அரசாங்கம் கொழும்பில் பெரும் பிரதேசத்தை துப்புரவு செய்தது. 243 க்கும் அதிகமான குடும்பங்கள் அகற்றப்பட்டதோடு அவர்களது குடிசை வீடுகளும் அழிக்கப்பட்டன. முன்னர் அங்கு குடியிருந்தவர்கள் இப்போது ஸ்டேடியம் கிராமம் என்றழைக்கப்படும் பிரதேசத்துக்கு மாற்றப்பட்டார்கள். கால்நூற்றாண்டின் பின்னரும், இந்தப் பிரேதேசங்களுக்கு இன்னமும் பொருத்தமான ஒழுங்கைகள் மற்றும் வீதிகள் இல்லாததோடு அடிப்படை வசதிகளும் பற்றாக்குறையாக உள்ளன. எந்தவொரு குடியிருப்பாளருக்கும் சட்டப்பூர்வமான நில உரித்து கிடையாது.

* 1985ல் மட்டக்குளிய பிரதேசத்தில் ரெட்பான தோட்டத்தில் வாழ்ந்துவந்த சுமார் 100 குடும்பங்களை, பிரதேசத்தின் ஊடாக செல்லும் கல்வாய்க்கு மறுபக்கத்தில் உள்ள நிலங்களுக்கு மாறுமாறு அதிகாரிகள் கட்டளையிட்டனர். “நாங்கள் அங்கு பல தசாப்தங்களாக வாழ்ந்து வந்தோம். அங்கிருந்து வெளியேற்றப்பட்ட உடன், எங்களுக்கு 22 க்கு 22 அடி (சுமார் 40 சதுர மீட்டர்கள்) சிறிய நிலத்துண்டு வழங்கப்பட்டது. அவர்கள் அத்திவாரத்தை போட்டுவிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 15,000 ரூபா கொடுத்தார்கள். நாங்கள் இருந்த நிலங்களில் தொடர்மாடி வீடுகளை கட்டித்தரும் வரை இங்கே வாழ்க்கை நடத்துமாறு அவர்கள் எங்களிடம் சொன்னார்கள். ஆனால், அது வெறும் வாக்குறுதி மட்டுமே. எனவே எங்களது வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக இப்போது கூறப்படும் வாக்குறுதிகளை நாம் நம்பப் போவதில்லை,” என ஒரு பெண் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் தெரிவித்தார்.

* 1992க்கும் 1994க்கும் இடைப்பட்ட காலத்தில், வெள்ளவத்தையில் இருந்து கிருலப்பனை வரை உள்ள கால்வாய்களின் இரு பக்கமும் வாழ்ந்த சுமார் 15,000 குடும்பங்களை யூ.என்.பி. அரசாங்கம் வெளியேற்றியது. அவர்கள் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அத்திடிய பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டதோடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 50 சதுர மீட்டர் நிலம் வழங்கப்பட்டது. முதலில் இடம்மாறத் தள்ளப்பட்ட குடும்பங்கள் பலகை வீடுகளில் வாழத் தள்ளப்பட்டன. சுமார் 150 குடும்பங்கள் இரு மலசல கூடங்களையும் ஒரு தண்ணீர் குழாயையும் பயன்படுத்தத் தள்ளப்பட்டன. அதன் பின்னரே, வீடுகளுக்கான அத்திவாரத்தை போட்ட அரசாங்கம், வீடுகளைக் கட்டுவதற்காக 15,000 முதல் 20,000 ரூபா வரை ஒவ்வொரு குடும்பத்துக்கும் கடனாகக் கொடுத்தது. தங்களால் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் பல குடும்பங்கள் அந்தக் கடனை வாங்கவில்லை.

பொருத்தமான சட்ட உரித்துக்களை வழங்கியுள்ளதாக யூ.என்.பி. கூறிக்கொள்வது முழுப் பொய். இப்பாகேவத்தயைச் சேர்ந்த ஒரு பெண் எமது நிருபர்களிடம் கூறியதாவது: “1982ல் யூ.என்.பி. தலைவரான [ரணசிங்க] பிரேமதாச, எங்களது வீடுகளுக்கான சட்ட உரித்து ஆவணம் என்று கூறி, எங்களுக்கு ஒரு அட்டையை விநியோகித்தார். ஆனால் அந்த அட்டைக்கு சட்டப் பெறுமதி கிடையாது. இப்போது புகையிரத திணைக்களம் இந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமானது என உரிமைகோருகின்றது. கடந்த ஆகஸ்டிலேயே நாம் வெளியேற வேண்டும் என அவர்கள் எமது கதவுகளில் அறிவித்தல்களை ஒட்டியுள்ளார்கள்.

“நாங்கள் அந்த அறிவித்தல்களை நிராகரித்துவிட்டோம். பின்னர் எங்களை வெளியேற்றக்கோரி திணைக்களம் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தது. ஒரு சட்டத்தரணியை வைத்து, அவர் வழக்குக்கு வரும் ஒவ்வொரு தவனையின் போதும், அவருக்கு ஒவ்வொரு குடும்பமும் 1,500 ரூபா கொடுக்க நேர்ந்தது,” என அவர் தெரிவித்தார். இந்த வழக்கு நீதிமன்றில் நான்கு தடவைகள் விசாரிக்கப்பட்டன. ஆனால் இன்னமும் முடிவு வராததோடு, 14 குடும்பங்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது.

வாழ்க்கைத் தரத்தின் மீதான யூ.என்.பி. யின் தாக்குதல்கள், அதன் ஜனநாயக-விரோத வழிமுறைகள் மற்றும் 1983ல் தொடங்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தின் மத்தியில் 1994ல் யூ.என்.பி. ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்டது. யூ.என்.பி. யின் கொள்கைகளை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு பதவிக்கு வந்த ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான ஆளும் கூட்டணி, யுத்தத்தை முன்னெடுத்ததோடு முன்னைய அரசாங்கத்தின் சந்தை-சார்பு நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்தது. கொழும்பில் குடிசைகளை அகற்றும் தற்போதைய திட்டம், 1999ம் ஆண்டிலேயே பகிரங்கப்படுத்தப்பட்டது. ஆனால், மக்களின் எதிர்ப்புக்குப் பயந்து அலுமாரியில் அத்திட்டம் வைக்கப்பட்டிருந்தது.

2001 கடைப்பகுதியில் பொதுத் தேர்தலில் வென்ற யூ.என்.பி., 2004 பெப்பிரவரியில் ஸ்ரீ.ல.சு.க. தலைவர் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் பதவி விலக்கப்படும் வரை ஆட்சியில் இருந்தது. தெற்காசியாவில் சிங்கப்பூரைப் போல் இலங்கையை மாற்றும் அதன் “இலங்கையை மீட்டெடுத்தல்” வேலைத் திட்டத்தின் ஒரு பாகமாக, விக்கிரமசிங்க அரசாங்கம் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுக்கொண்டு சமாதானப் பேச்சுக்களையும் தொடங்கியது. உலக வங்கியின் அங்கீகாரத்தைப் பெற்ற “இலங்கையை மீட்டல்” வேலைத்திட்டத்தின் கீழ், பொதுத் துறைக்கான மானியங்கள், நலன்புரி சேவைகள் மற்றும் தொழில்களும் வெட்டிக் குறைக்கப்பட்டதோடு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தாராளமாக ஊக்குவிப்பு வழங்கப்பட்டது.

இராஜபக்ஷவின் வெளியேற்றும் திட்டத்தை எதிர்ப்பவராக இப்போது விக்கிரமசிங்க காட்டிக்கொண்டாலும், அதன் பிரதான மூலங்கள் அனைத்தையும் அவரது அரசாங்கத்தின் “இலங்கையை மீட்டெடுத்தல்” வேலைத்திட்டத்திலேயே காண வேண்டும். அந்த வேலைத் திட்டத்தின் நிறைவேற்று சாராம்சம், கொழும்பைச் சூழ தீவின் மேற்குப் பிராந்தியத்தில் ஒரு தலைநகர மையமொன்றை அபிவிருத்தி செய்யும் திட்டமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. “[இந்த மெகாபொலிஸின்] கொழும்பு பகுதியானது நிதி, வர்த்தகம், போக்குவரத்து மற்றும் நிர்வாக மையமாக இருக்கும்,” என அது தெரிவித்துள்ளது.

குடிசைவாசிகளைப் பொறுத்தளவில், “கொழும்பு நகரில் சொந்த செலவில் சுயாதீனமாக மீள் வீடமைக்கும் திட்டத்தையே” யூ.என்.பி. யின் ஆவணம் வாக்குறுதியளித்துள்ளது. “உயர்ந்த அடுக்கு மாடி வீடுகளில் மீண்டும் வீடுகளைப் பெறுவதற்கு தமது சொத்துக்களையும் நிலத்துண்டுகளையும் சுயாதீனமாக கைமாற்றிக்கொள்ளுமாறு” குடியிருப்பாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்படும். உண்மையில், குடியிருப்பாளர்கள் வெளியேற மறுத்தால் என்ன நடக்கும் என்பதை இந்த வேலைத் திட்டம் விளக்கவில்லை. மாற்று தங்குமிடங்கள் வழங்குவது பற்றிய அந்த வாக்குறுதிகள், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் வாக்குறுதிகளைப் போலவே இதுவும் போலியானவையாகும்.

புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் “தேசிய பாதுகாப்புக்கு” அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி குமாரதுங்க 2004ல் யூ.என்.பி. அரசாங்கத்தை பதவிவிலக்கினார். 2005 நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை தோற்கடித்து குறுகிய வெற்றி பெற்ற இராஜபக்ஷ, 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை பகிரங்கமாக மீறி நாட்டை மீண்டும் யுத்தத்துக்குள் தள்ளினார். ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களைப் பலியெடுத்த ஒரு குற்றவியல் முற்றுகை யுத்தத்தின் ஊடாக 2009 மே மாதம் புலிகளைத் தோற்கடித்த இராஜபக்ஷ, அதே வழிமுறைகளைப் பயன்படுத்தி “தேசத்தைக் கட்டியெழுப்பும்” “பொருளாதார யுத்தத்தை முன்னெடுக்கின்றார்.

அரசாங்கத்தின் வேலைத் திட்டத்துடன் அடிப்படை முரண்பாடுகள் எதையும் கொண்டிராத யூ.என்.பி., தனது சொந்த அரசியல் தேவைகளுக்காக, குடிசைகளை அகற்றுவதற்கான எதிர்ப்பை சுரண்டிக்கொள்ள பார்க்கின்றது. பெரும் வர்த்தகர்களின் இன்னுமொரு கட்சி மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் குடிசைவாசிகளால் இராஜபக்ஷவின் திட்டங்களை தோற்கடிக்க முடியாது. ஆனால், அவர்கள் தமது சொந்த சுயாதீன பலத்தில் நம்பிக்கை வைப்பதோடு தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும். அரசாங்கத்தின் குடிசைகளை வெளியேற்றும் திட்டமானது, நீண்ட விளைவுகளை கொண்ட சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தக் கோரும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள திட்டங்களின் பாகமாகும்.

சோசிலச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அரசியல் உதவியுடன், கொழும்பு குடிசை வீடுகளில் வாழ்பவர்கள், வீட்டுரிமையை காப்பதற்கான நடவடிக்கை குழுவொன்றை ஸ்தாபித்துள்ளனர். அவர்களைப் பின்பற்றி தமது சொந்த இருப்பிடங்களில் நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறும் வீட்டுரிமையை காப்பதற்கான நடவடிக்கை குழுவுக்கு பிரதிநிதிகளை அனுப்பிவைக்குமாறும் சோ.ச.க. ஏனைய குடியிருப்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றது.

சகல வசதிகளுடன் கூடிய வீடுகளை அமைக்கும் உரிமைக்கான போராட்டம், இந்த இலாப முறைமைக்கே எதிரான போராட்டமாகும். அதற்கு ஒரு சோசலிச வேலைத் திட்டம் தேவை. சகலருக்கும் பொருத்தமான தங்குமிடங்களை வழங்குவதற்கு பல பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்திற்காக இல்லாமல், பெரும்பான்மையான மக்களின் தேவைகளை இட்டு நிரப்பக் கூடியவாறு சமுதாயத்தை மறு ஒழுங்கு செய்வதற்காக, தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை அமைப்பதன் பேரில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறியவர்களுடன் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்ட வேண்டும். இந்த வேலைத் திட்டத்துக்காகவே சோசலிச சமத்துவக் கட்சி போராடுகின்றது.

கருத்துகள் இல்லை: