சனி, 6 நவம்பர், 2010

கைவிரித்துவிட்டுத்தான் வருகிறார் ஒபாமா

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் இந்திய வருகை ஊடகங்களால் பெருமளவு பிரமாதப்படுத்தப்படுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசும் அவரது வருகைக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்தியாவுக்கு அவர் ஏராளமான சலுகைகளை வாரி வழங்கப்போவதாக ஒரு மாயத்தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் வெள்ளைமாளிகையிலிருந்து புறப்படுவதற்கு முன்பே ஒபாமா இந்த எதிர்பார்ப்புகளை பொய்யாக்கிவிட்டுத்தான் புறப்படுகிறார். ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும் என்ற கோரிக் கை நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் ஒப்புக்காவது இந்தக் கோரிக்கையை ஆதரிப்ப தாக கூறிவிட்டு செல்வது வழக்கம். ஆனால் ஒபாமா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந் தியாவை இணைப்பது குறித்து அமெரிக்கா எந்த உத்தரவாதத்தையும் அளிக்க முடியாது என்று தெளிவாக கூறிவிட்டார். அமெரிக்கா தான் இந்தியாவின் உண்மையான நண்பன் என்று கூறுபவர்கள் மனதில்கொள்ள வேண்டிய விஷயம் இது.

இடதுசாரி கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அணுசக்தி உடன்பாட்டில் மன்மோகன் சிங் அரசு கையெழுத்திட்டது. இந்த உடன்பாடு என்பது இந்திய அரிசியையும், அமெரிக்க உமியையும் கலப்பது போன்றது. இதனால் அமெரிக்காவுக்குத்தான் லாபம் என்று இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து கூறிவந்துள்ளன. அணுக் கழிவு மறு உபயோக தொழில்நுட்பத்தை இந் தியாவுக்கு அமெரிக்கா வழங்கும் என்று கூறப் பட்டது. ஆனால் இதுகுறித்தும் எந்த உத்தரவாதத்தையும் வழங்க முடியாது என்று ஒபாமா கைவிரித்துவிட்டார். ஆனால் தமது வருகை இந்தியா - அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் என்று ஒபாமா கூறியுள்ளார். இந்தியாவின் எதிர்பார்ப்பு எதையும் நிறைவேற்றாமல் ஒத்துழைப்பு எப்படி அதிகரிக்கும்?

வெளிப்பணி (out sourcing) ஒப்படைப்பு விஷயத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்குத் தான் முன்னுரிமை அளிக்க முடியும், இந்திய நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து தாம் கவலைகொள்ள முடியாது என்றும் ஒபாமா கூறியுள்ளார். இவ்வாறாக முக்கியமான மூன்று விஷயங்களில் இந்தியாவுக்கு சாதகமான எந்த பதிலையும் ஒபாமா அளிக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் ஒபாமாவுடன் 250க்கும் மேற்பட்ட அமெரிக்க தொழிலதிபர்கள் படை பட்டாளத் தோடு திரண்டு வருகிறார்கள். சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கவேண்டும், காப்பீடு, வங்கி உள்ளிட்ட நிதித்துறைகளில் அந்நிய மூலதனத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விஷயங்களில் மன்மோகன் சிங் அரசுக்கு ஒபாமா நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தப்போவது உறுதி. இதனால் இந்திய நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.

அமெரிக்க நிறுவனங்களைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. இந்திய நிறுவனங்களின் பாதுகாப்பே முக்கியம் என்று சொல்லும் திராணி, தெம்பு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இருக்கிறதா என்பதே இப்போதைய கேள்வி. ஒபாமாவின்
வருகையை இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பது எந்த அளவுக்கு நியாயம் என்பதற்கு அவரது இந்திய விரோத கருத்துக்களே சாட்சி.

கருத்துகள் இல்லை: