சனி, 6 நவம்பர், 2010

விடுவிக்கடியாத அதியுயர் பாதுகாப்பு வலயபகுதி மக்களுக்கு மாற்றிடம் அல்லது நஷ்டஈடு – மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் விடயத்தில் விடுவிக்க  முடியுமான பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.   ஆனால் கட்டாயமாக இருக்கவேண்டிய சில அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளன.   இதனால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு மாற்றுக்காணிகளையும் நஷ்டஈட்டையும் வழங்குவோம்.    சில இடங்களில் தற்போதைக்கு   அதியுயர்   பாதுகாப்பு    வலயங்களை   நீக்குவது   சாத்தியமில்லை  என்று   மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில்   தம்மை குடியேற்றக் கோரி  யாழ். ரயில் நிலையத்தில்   தங்கியுள்ள சிங்கள மக்களின் நிலைமை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் அறிக்கை ஒன்றை கோரியுள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.     யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களின் நிலைமை மற்றும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் விவகாரம் ஆகியவை குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை கூறினார்.
அமைச்சர் இவ்விடயங்கள் குறித்து மேலும் கூறியதாவது, அதியுயர் பாதுகாப்பு வலயம் தொடர்பில் விடுவிக்க முடியுமான காணிகளை விடுவித்துவருகின்றோம்.   அதாவது  பாதுகாப்பு  தரப்பினர்  வேறு இடங்களுக்கு செல்ல முடியுமான   நிலைமை காணப்படின் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற  முடியும்.
குறிப்பிட்டக் காணிகளை உரிய மக்களுக்கு வழங்க முடியும். ஆனால் உடனடியாக அனைத்தையும் செய்துவிட  முடியாது.  காரணம் சில இடங்களில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இருக்கவேண்டியது அவசியம் என்று கருதப்படுகின்றது.     முக்கியமாக     பலாலியில்  அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தை நீக்குவது சாத்தியமற்றது.   காரணம் நாட்டின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விடயமாகும்.
எனினும் இதன் காரணமாக பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். நட்டஈடும் வழங்கப்படும்.
மேலும்   திருகோணமலையில் ,   சம்பூர் பிரதேசம்  அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ளது. அதனையும் நீக்குவது சாத்தியமற்ற விடயம். ஆனால் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள   மக்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.     இதேவேளை,   யாழ்ப்பாணத்தில்    தம்மை        குடியேற்றக்கோரி யாழ். ரயில் நிலையத்தில்     தங்கியுள்ள    சிங்கள மக்களின் நிலைமை தொடர்பில்    மீள்குடியேற்ற அமைச்சு என்ற வகையில் தீர்வு ஒன்றை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.
முதலில் இந்த மக்கள் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் என்ன அடிப்படையில் வசித்தனர் என்பது குறித்தும் ஆராயவேண்டியுள்ளது. எனவே குறிப்பிட்ட மக்கள் யாழ்ப் பாணத்தில் அக்காலகட்டத்தில்   எவ்வாறு வசித்தனர்   என்பது தொடர்பான முழுமையான அறிக்கை   ஒன்றை மாவட்ட   அரசாங்க அதிபரிடம் கோரியுள்ளோம்.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் அறிக்கை கிடைத்ததும் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆராய முடியும். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஒன்றை வழங்குவது குறித்தே கவனம் செலுத்துகின்றோம்.   இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன்    ஜனாதிபதியுடனும் கலந்துரையாடவுள்ளோம்.    இவ்வாறு  முயற்சிகளை மேற்கொண்டு விவகாரத்துக்கு தீர்வு காண முயற்சிப்போம்.

கருத்துகள் இல்லை: