ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

வருமான வரியை ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

வருமான வரியை ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமிமின்னம்பலம் : வருமான வரியை ஒழிக்க வேண்டுமென சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவி வருவதால் டிவிஎஸ் உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது வேலைநாட்களை குறைத்துள்ளது. மேலும் பார்லே-ஜி உள்ளிட்ட நிறுவனங்களில் பல ஆயிரம் ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அனைத்து வகைக் கடன்கள் மீதான வட்டியும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு ஏற்ப உடனுக்குடன் குறைக்கப்படும் என்பது உள்பட பொருளாதார மந்தநிலையை சமாளிக்க பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த நிலையில் சண்டிகரில் நேற்று (ஆகஸ்ட் 24) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம், நிர்மலா சீதாராமன் எடுக்கும் நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சிக்கு புத்துயிரூட்டுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்தவர், “ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இங்கு வருமான வரி ஒழிக்கப்பட வேண்டும். அடுத்து நிரந்த வைப்புத் தொகையின் வட்டிவிகிதத்தை 9 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். வங்கிக் கடன்கள் மீதான வட்டிவிகிதத்தையும் 9 சதவிகிதமாக குறைக்க வேண்டும். இந்த மூன்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டால் பொருளாதாரம் மேம்பட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “பொருளாதாரத்தில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும். இதுதொடர்பாக நான் எழுதியுள்ள புத்தகம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நான் விளக்கியுள்ளேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: