திங்கள், 13 பிப்ரவரி, 2017

கொஞ்சம் பணமும் இன்னோவா காரும்! ‘எம்.பி.,க்களை பன்னீர் பக்கம் அனுப்பிவைக்கிறதே மத்திய அரசுதான்... சசிகலா .

“கூவத்தூர் தமிழக அரசியலில் இன்று தவிர்க்கமுடியாத ஊராக மாறிவிட்டது. அதிமுக எம்.எல்.ஏ.,க்களை அங்குள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கவைத்திருக்கிறார்கள். எத்தனையோ ரிசார்ட்கள் இருக்க, இந்த கோல்டன் பே ரிசார்ட்டை தைரியமாக தேர்வு செய்ய என்ன காரணம் என விசாரித்தோம். கோல்டன் பே ரிசார்ட், பக்தவத்சலம் என்பவருக்குச் சொந்தமானது. இவருக்கு சொந்த ஊர் நாகை மாவட்டம் வேதாரண்யம். இவருடைய மகன் மருத்துவராக இருக்கிறார். இந்த மருத்துவரும், சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கரும் கல்லூரி நண்பர்கள். எம்.எல்.ஏ.,க்களை எங்கே தங்கவைக்கலாம் என ஆலோசனை நடந்தபோது, இந்த ரிசார்ட்டை தேர்வு செய்தது விஜயபாஸ்கர்தான். எம்.எல்.ஏ.,க்களை அங்கே தங்கவைக்க திட்டமிட்டதும், ரிசார்ட்டில் சில ரூம்களில் கெஸ்ட் இருந்தார்களாம். அவர்களை விஜயபாஸ்கரே நேரில் சந்தித்துப் பேசி, வேறு ஒரு ரிசார்ட்டில் அவர்களை தங்கவைக்க ஏற்பாடும் செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார். அவர்களும் அதற்கு சம்மதித்த பிறகுதான், ஒட்டுமொத்த ரிசார்ட்டும் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. ட்ரனிக்யூ ரூம், பே வியூ ரூம், பேரடைஸ் ஷூட் ரூம் என மூன்று வகையான ரூம்கள் இந்த ரிசார்ட்டில் இருக்கிறதாம். மொத்தம் 56 ரூம்கள் இந்த ரிசார்ட்டில் இருக்கிறதாம். இதற்கு ட்ரானிக்யூ ரூம்களுக்கு 5500 ரூபாயும், பே வியூ ரூம்களுக்கு 6600 ரூபாயும், பேரடைஸ் ஷூட் ரூம்களுக்கு 9900 ரூபாயும் நாள் ஒன்றுக்கு வாடகையாக வசூலிக்கப்படுகிறது.


நீச்சல்குளம், ஜிம், நவீன பார் என சகல வசதிகளும் இந்த ரிசார்ட்டில் இருக்கிறது. இதுதவிர, இரண்டு மிகப்பெரிய கான்ஃபரன்ஸ் ஹாலும் உள்ளே இருக்கிறது. அந்த ஹாலில்தான் நேற்று எம்.எல்.ஏ.,க்களை சந்தித்தார் சசிகலா.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாலை 5 மணியளவில்தான் கூவத்தூர் சென்று சேர்ந்தார் சசிகலா. மாலை 4.30 மணியில் இருந்து 6 மணி வரை நேற்று ராகு காலம். அந்த நேரத்தில் செய்யும் காரியங்கள் சரியாக வராது என சசிகலா நினைத்ததால், ராகு காலம் முடியும் வரை யாரிடமும் அவர் பேசவில்லை.

சசிகலாவுக்காக ஒரு பேரடைஸ் ஷூட் ஒதுக்கப்பட்டிருந்தது. சுமார் ஒரு மணி நேரம் அந்த அறையில் அவர் மட்டுமே இருந்திருக்கிறார். மாலை 6 மணிக்கு ராகு காலம் முடிந்தபிறகுதான் வெளியே வந்து எம்.எல்.ஏ.,க்களுடன் பேசினார் சசிகலா. அதிருப்தியில் இருந்த 12 எம்.எல்.ஏ.,க்களை தனித்தனியாக அழைத்து, ‘இப்போ எல்லோருக்கும் என்ன செய்யிறேனோ அதை உங்களுக்கும் செய்வேன். அது இல்லாமல் உங்களுக்கு என்ன வேணுமோ அதையும் செய்யத் தயாரா இருக்கேன்’ என்று சொல்லியிருக்கிறார். பிறகு, அங்கிருந்த எம்.எல்.ஏ.,க்களுடன் பேசியவர்கள், ‘உங்க ஒவ்வொருத்தருக்கும் செலவுக்காக கொஞ்சம் பணமும், நீங்க குடும்பத்துடன் வெளியில் போய் வர ஒரு புது இன்னோவா காரும் கொடுக்கச்சொல்லி சின்னம்மா சொல்லியிருக்காங்க. நீங்க சொல்ற இடத்தில் டெலிவரி பண்ணிடுவோம். வந்துடுச்சா என்பதை நீங்க செக் பண்ணிக்க போன் கொடுக்கச் சொல்லியிருக்காங்க.’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதன்பிறகு பேசிய சசிகலா, ‘உங்க யாருகிட்டயும் எதுக்காக நான் போன் இருக்க வேண்டாம்னு சொன்னேன் தெரியுமா? போன் இருந்தா உங்களுக்குத் தேவையில்லாத தொல்லைகள் வரும்... தப்பாக நினைச்சுக்க வேண்டாம். சீக்கிரமே எல்லாம் மாறும்.’ என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார். எல்லாம் முடிந்து அங்கிருந்து கிளம்பும்போதுதான் பத்திரிகையாளர்கள் தங்களை உள்ளே அனுமதிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தவே பிரஸ் மீட் நடந்தது.” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.
அதற்கு லைக் போட்டதுடன் அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த வாட்ஸ் அப்,

 ‘‘இன்று எதற்காக மூன்றாவது நாளாக மீண்டும் கூவத்தூர் சென்றிருக்கிறார் சசிகலா?” என்ற கேள்வியை கமெண்ட்டில் போட்டது வாட்ஸ் அப். பதிலை ரிப்ளைசில் போட்டது ஃபேஸ்புக். “சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். எப்படி வந்தாலும் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் கையைவிட்டுப் போய்விடக் கூடாது என்பதில் சசிகலா தெளிவாக இருக்கிறார். அதனால்தான் தினமும் கூவத்தூர் போகிறார். எம்.எல்.ஏ.,க்களைப் பார்க்கிறார். பேசுகிறார். கலங்குகிறார். அவர்களோடு சாப்பிடுகிறார். ஒரே குடும்பம் என உருகுகிறார். ஆதரவு எம்.எல்.ஏ.,க்களில் சிலரது மனதை மாற்ற நிறைய சிரமப்பட வேண்டியிருக்கிறதாம். அதற்காகத்தான் தினமும் சசிகலாவே நேரில் செல்வதும், அவர்களிடம் பேசுவதுமாக இருக்கிறார்.

இதற்கிடையில் எம்.பி.,க்கள் அதிகளவு பன்னீர் பக்கம் போய்க் கொண்டு இருப்பதை சசிகலா கவனிக்காமல் இல்லை. ‘எம்.பி.,க்களை எல்லாம் பன்னீர் பக்கம் அனுப்பிவைக்கிறதே மத்திய அரசுதான். இது அவருக்குத் தெரியல. பன்னீர் ஜெயிக்கிறதா நினைச்சுட்டு இருக்காரு. ஆனா ஜெயிச்சுட்டு இருக்கிறது மத்திய அரசுதான். அவங்க சொல்றதை கேட்கிற எம்.பி.,க்கள் வேணும் என்பதற்காக நம்ம ஆட்களை பகடைக்காயாக பயன்படுத்திக்கிட்டாங்க... போனவங்க சீக்கிரம் திரும்பியும் வருவாங்க.’ என்று சசிகலாவே போயஸ் கார்டனில் சொன்னதாகச் சொல்கிறார்கள்.” என்பதுதான் அந்த பதில்
தொடர்ந்து ஆஃப்லைனில் போவதற்கு முன்பு, மெசெஜ் ஒன்றை தட்டிவிட்டுப் போனது வாட்ஸ் அப். அது இதுதான். ‘‘இன்று போயஸ் கார்டனுக்கு உள்ளேயும் வெளியேயும் எம்.ஜி.ஆர். காலத்து அரசியல் தொடங்கி ஜெயலலிதாவின் பல ஃப்ளாஷ்பேக் தகவல்களை கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார். எம்.ஜி.ஆர். மறைவின்போது, ஜெயலலிதாவை கீழே பிடித்துத் தள்ளிய ஜேப்பியாரின் கையைப் பிடித்து டி.டி.வி. தினகரன்தான் கடித்தார்’ என்றுகூட சசிகலா சொன்னார். இப்படி ஃப்ளாஷ்பேக் விஷயங்களை இந்த நேரத்தில் பேசச் சொல்லி ஐடியா கொடுத்தது நடராஜன்தான். ‘செண்டிமென்ட்தான் மக்களுக்குப் பிடிக்கும். நான் சொல்றதை நீ பேசு!’ என்று நடராஜன் சொன்னதாகவும் தகவல்.” என்று முடிந்தது மெசேஜ்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: