புதன், 15 பிப்ரவரி, 2017

டி.டி.வி.தினகரன் துணை பொது செயலாளர் .. சசிகலா நியமித்தார் .. அதிமுக ...

தங்களின் செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதத்திலும் மன்னிப்பு கோரியதால் அதிமுகவில் மீண்டும் டி.டி.வி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் சேர்த்துக்கொள்ளப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரனை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா அறிவித்துள்ளார். அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்திக்கும்போது டி.டி.வி. தினகரன் உடனிருந்தார். கடந்த 2011ல் ஜெயலலிதாவால் டி.டி.வி. தினகரன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் கட்சியி இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

flashback :அன்னிய செலாவணி மோசடி வழக்கு டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதித்தது சரியே : ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை : அன்னிய செலாவணி மோசடி வழக்கில், டி.டி.வி. தினகரனுக்கு அமலாக்கப்பிரிவு ரூ.28 கோடி அபராதம் விதித்தது சரிதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜனின் அக்கா மகன் டி.டி.வி.தினகரன். இவரது  பெயரில்  இங்கிலாந்தில் உள்ள பார்க்லே  வங்கி கணக்குகளில் 1995-96ம் ஆண்டுகளில் வெளிநாட்டில்  ரூ.72 கோடி  டெபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து, 1996ம் ஆண்டு தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு  செய்யப்பட்டன.
அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். முடிவில் தினகரனுக்கு ரூ.31 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இதை எதிர்த்து, டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத்துறையிடம் தினகரன் மேல்முறையீடு செய்தார். ஆனால் மத்திய அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் தினகரனுக்கு ரூ.31 கோடியை, 28  கோடி ரூபாயாக குறைத்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார். இதை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் கடந்த மாதம் விசாரித்தனர். அப்போது டி.டி.வி.தினகரன் சார்பாக மூத்த வக்கீல் பி.குமார், ஆஜராகி டி.டி.வி. தினகரனுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அமலாக்க பிரிவு சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால் ஆஜராகி, டி.டி.வி. தினகரனுக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்யக்கூடாது என்றார். இதை கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். அதன்படி, இந்த வழக்கில் தலைமை நீதிபதி கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் நேற்று தீர்ப்பு கூறினர். நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

மனுதாரர் டி.டி.தினகரன், தான் இந்திய குடிமகன் இல்லை. வெளிநாட்டில் வாழும் இந்தியர் என்று கூறியுள்ளார். இதை ஏற்க முடியாது. இவர் மீது அமலாக்க பிரிவு  அதிகாரிகள்  காப்பிபோசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் அவரை கைதும் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையின் போதும், தான் வெளிநாட்டில் வசிக்கிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் அவர் பெரியகுளம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் அவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் தான் இந்திய குடிமகன் என்று கூறியுள்ளார். அமலாக்க பிரிவு அதிகாரிகள் முன்பு மனுதாரர் ஆஜராகி, தான் வெளிநாட்டில் வசிப்பதாக கூறியுள்ளார். இந்த தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. எனவே, மனுதாரர் தான் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் என்று இந்த வழக்கில் கூறிய காரணத்தை ஏற்க முடியாது. இவர், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். எனவே, அமலாக்கப்பிரிவு  விசாரணையில் குறுக்கிட விரும்பவில்லை.

மனுதாரர் தனக்கு அமலாக்கப்பிரிவு விசாரணையின் போது சந்தர்ப்பம் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். இது தவறானது. ஆவணங்களை பார்க்கும் போது அவருக்கு பல சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர காலான் என்ற அதிகாரி உள்நோக்கத்துடன் செயல்பட்டார் என்று மனுதாரர் ஒரு புகார் கூறியுள்ளார். இந்த காலான் என்ற அதிகாரி புலன் விசாரணை அதிகாரி. எனவே, இவருக்கும் அமலாக்கப்பிரிவின் மேல்முறையீட்டு ஆணைய விசாரணைக்கும் தொடர்பு இல்லை. டிப்பர் கம்பெனிதான் வெளிநாட்டு வங்கியில் பணம் முதலீடு செய்தது என்று மனுதாரர் கூறியதை ஏற்க முடியாது. இந்த கம்பெனியை மனுதாரர்தான் நிர்வகித்துள்ளார்.  எனவே மனுதாரர் கூறும்  காரணங்களை ஏற்க முடியாது. அன்னிய செலாவணியில் மோசடி செய்ததாக டிடி.வி. தினகரன் மீதுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதற்கு ரூ.28 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று மத்திய அமலாக்க துறை மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு சரியானதுதான். இந்த வழக்கில் அமலாக்க பிரிவு தாக்கல் செய்த ஆவணங்கள், சாட்சியங்கள், வாக்குமூலங்கள் ஆகியவற்றை  பார்க்கும்போது மனுதாரர் மீதான குற்றச்சாட்டு  தெளிவாக தெரிகிறது. எனவே டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்த அப்பீல் மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். டி.டி.வி. தினகரன் அமலாக்க பிரிவு விதித்த அபராத தொகையை செலுத்தாததால் அவரை திவாலானவர் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி அமலாக்க பிரிவு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனு தாக்கல் செய்தது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, இதை எதிர்த்து அமலாக்கப்பிரிவு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி கவுல், மகாதேவன் ஆகியோர் நேற்று விசாரித்து இதன் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  தினகரன்

கருத்துகள் இல்லை: