செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

தீர்ப்பு வந்ததும் கூவதூரில் நடந்தது ... கங்கை அமரன்.. பாலு ஜுவல்லர்ஸ்.. யார் யாரோவின் சாபம் எல்லாம் பலித்தது


தீர்ப்பு வரும்போது கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் பேரடைஸ் ஷூட் ரூமில் இருந்தார் சசிகலா. வழக்கத்தைவிட இன்று அதிகாலையிலேயே அவர் தூங்கி எழுந்துவிட்டாராம். காலை 5 மணிக்கே ரிசப்ஷனுக்கு போன் செய்து சசிகலா டீ கேட்டிருக்கிறார். அவருக்கு அந்த நேரத்துக்கே டீ போயிருக்கிறது. அதன்பிறகு காலை 8 மணிக்கு பஃபே ஹாலுக்கு வராமல், ரூமுக்கே டிபன் வரவழைத்து சாப்பிட்டிருக்கிறார். செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி இருவரையும் காலை 9 மணியளவில் தனது அறைக்கு வரவழைத்திருக்கிறார். ‘தீர்ப்பு எப்படி வரும்னு தெரியாது. எப்படி வந்தாலும் அதைச் சமாளிக்க நாம் தயாராக இருக்கணும். அப்படி ஒருவேளை எதுவும் நமக்கு எதிராக தீர்ப்பு வந்தால், எந்தக் காரணத்துக்காகவும் பன்னீர்செல்வம் வந்துடக் கூடாது. நீங்க இருவரில் ஒருவர்தான் முதல்வராக இருக்கணும்.’ என்று சொல்லியிருக்கிறார் சசிகலா. அதற்கு செங்கோட்டையன், ‘அப்படியெல்லாம் எதுவும் நடக்காதும்மா... நீங்கதான் முதல்வராக இருக்கணும்’ என்று சொல்லியிருக்கிறார். ‘எது நடந்தாலும் அதைச் சமாளிக்க நாம தயாராக இருக்கணும்..’ என்று சசிகலா சொன்னாராம். சரியாக 10.34 மணிக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்ற தீர்ப்பு வர... அதுவரை தைரியமாக பேசிக்கொண்டிருந்தவர், டி.வி.யில் வந்த ப்ளாஷ் நியூஸ் பார்த்ததும் கண்கலங்கிவிட்டாராம். எடப்பாடியும், செங்கோட்டையனும் அதன்பிறகு எதுவுமே பேசவில்லையாம்.
‘நீங்க ரெண்டுபேரும் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. நான் கூப்பிடுறேன்’ என்று சசிகலா சொல்ல... அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியே வந்துவிட்டார்களாம். அதன்பிறகு, திவாகரனுடன் போனில் பேசியிருக்கிறார் சசிகலா. அவர் சில ஐடியாக்களை சொல்லியிருக்கிறார். அதன்பிறகு நடராஜனும், சசிகலாவுடன் போனில் பேசியிருக்கிறார். நடராஜன், திவாகரன் இருவருமே எடப்பாடி பெயரைத்தான் சொல்லியிருக்கிறார்கள். செங்கோட்டையன் வேண்டாம் என இருவருமே சொன்னதற்குக் காரணம், ‘அவரு பழைய ஆளு. நாம சொல்றதை எவ்வளவு நாள் கேட்பாருன்னு சொல்ல முடியாது. எடப்பாடின்னா பிரச்னை இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு, குறிப்பிட்ட சில அமைச்சர்களையும் சில எம்.எல்.ஏ.,க்களையும் தனது அறைக்கு அழைத்து தனித்தனியாகப் பேசினார். செங்கோட்டையனுக்கு கடும் எதிர்ப்பு இருப்பது சசிகலாவுக்குத் தெரியவந்தது. பிறகுதான் அந்த கான்ஃபரன்ஸ் ஹாலில் அனைவரையும் கூடச் சொல்லியிருக்கிறார். எல்லோரும் வந்ததும், கலங்கிய கண்களுடன் பேசியிருக்கிறார் சசிகலா. ‘மறுபடியும் நாம ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கோம். எந்தக் காரணத்துக்காகவும் கட்சி நம் எதிரிகள் கையில் போய்விடக் கூடாது. ஒரு பக்கம் பன்னீர், இன்னொரு பக்கம் ஸ்டாலின் தயாராக இருக்காங்க. நாம எல்லோரும் ஒற்றுமையாக இருக்கணும். சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை நான் நியமிக்கிறேன். அவருக்கு நீங்க எல்லோரும் ஆதரவு தரணும். அவர் முதலமைச்சராக ஆட்சியமைக்க கவர்னரைப் பார்த்து கடிதம் கொடுக்கட்டும். நீங்க எல்லோரும் அவருக்குப் பின்னால் இருக்கணும். நான் இருந்தால் என்ன செய்வீர்களோ அதை எடப்பாடி பழனிச்சாமிக்கு செய்யுங்கள். இனி அவர்தான் நான்!’ என்று சொன்னதும், எடப்பாடி பழனிச்சாமி எழுந்து நின்று கும்பிடு போட்டிருக்கிறார். அத்துடன் அங்கேயே சசிகலா காலில் விழுந்து ஆசிர்வாதமும் வாங்கிக்கொண்டார். ’உங்க எல்லோருடைய ஒத்துழைப்பையும் நான் எதிர்பார்க்கிறேன்.’ என்று பேசி முடிக்கும்போது மீண்டும் சசிகலா கண்கள் கலங்கிவிட்டதாம். ‘நாங்க இருக்கோம் சின்னம்மா... நீங்க கவலைப்படாமல் போங்க...’ என்று, சில எம்.எல்.ஏ.,க்கள் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்கள்.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

“ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு உடனே சென்னை கிளம்பிவிட்டாரா சசிகலா?” என்ற கேள்வியை ஃபேஸ்புக் கேட்டது.
பதிலை உடனே டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப். ‘‘இல்லை. அதற்குள் நடராஜனுக்கு வேண்டப்பட்ட சில மூத்த வழக்கறிஞர்கள் கூவத்தூர் போயிருக்கிறார்கள். அவர்களுடனும் ஆலோசனை நடத்தியிருக்கிறார் சசிகலா. ‘இப்போதைக்கு இதில் மறுசீராய்வு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. நீங்கள் கட்டாயம் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகித்தான் ஆக வேண்டும்’ என அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கூவத்தூரில் இருந்து நேராக பெங்களூரு செல்லலாமா என சசிகலா யோசித்திருக்கிறார். ஆனால் நடராஜன் தரப்பிலோ, ‘அப்படியே போக வேண்டாம். போயஸ் கார்டனுக்கு வந்துட்டு அதன்பிறகு அங்கிருந்து கிளம்பிப் போ. அம்மா சமாதியில் அஞ்சலி செலுத்திட்டுப் போக முடிந்தாலும் போ..’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால், கூவத்தூரில் இருந்து சென்னைக்கு இன்று இரவுக்குள் வந்துவிடுவார் என்கிறார்கள். இதற்கிடையில், போயஸ் கார்டனில் இளவரசி இருந்திருக்கிறார். தீர்ப்பு வந்ததிலிருந்து அவரை சமாதானப்படுத்தவே முடியவில்லையாம். ‘இப்படி ஆகிடுச்சே..’ என்று சொல்லி அழுதுகொண்டே இருந்தாராம். தனது அம்மா இளவரசியை விவேக்தான் சமாதானப்படுத்தி வருவதாகச் சொல்கிறார்கள். போயஸ் கார்டன் வீட்டில்தான் திவாகரன் தற்போது இருக்கிறராம். சசிகலா சென்னை திரும்பியதும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி இன்று இரவு கார்டனில் ஆலோசனை நடக்கும். அதன்பிறகே சசிகலாவின் பெங்களூரை நோக்கிய சிறைப் பயணம் கிளம்பும்’’ என்று முடிந்த அந்த மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது.  மின்னம்பலம் 

கருத்துகள் இல்லை: