திங்கள், 13 பிப்ரவரி, 2017

லய ஞான குபேரபூபதி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி ...இசையும் நிலமும் - 6 :



minnambalam.com :எம்.டி.முத்துக்குமாரசாமி
ரவிகிரணின் கச்சேரியில் ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேலின் தவிலிசையை கேட்டதிலிருந்து தவிலின் மேல் எனக்கு ஏற்கனவே இருந்த ஆர்வம் அதிகமாகிவிட்டது; அதைத் தொடர்ந்து அம்ஷன்குமார் இயக்கிய லய ‘ஞான குபேரபூபதி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி’ ஆவணப் படத்தையும் அதனுடன் கிடைக்கும் தெட்சணாமூர்த்தியின் இசைத்தொகுப்பையும் கேட்டேன்.
42 வயதே வாழ்ந்து நாற்பது வருடங்களுக்கு முன் மறைந்துவிட்ட தவில் மேதை தெட்சணாமூர்த்தியை பற்றிய பல முக்கிய தகவல்களை அம்ஷன்குமார் பதிவு செய்துள்ளார். தாளக்கருவியை வாசிப்பதில் உள்ள மேதமைதான் என்ன அது தமிழ்க் கலாச்சாரத்தின் உள் முக வெளிபற்றி என்ன சொல்கிறது என்று அறிந்துகொள்ள தெட்சிணாமூர்த்தியின் இசையை நாம் நுட்பமாக அவதானிக்கவேண்டும். தாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். பாட்டின் கால அளவை சேர்த்து கையினாலாவது, வேறு கருவிகளினாலாவது தட்டுவது தாளமெனப்படும். இத்தாளத்தின் உற்பத்தியானது காலம், செய்கை, அளவு என்ற மூன்று முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. இம்மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும்போதுதான் தாளத்தின் உற்பத்தி உண்டாகின்றது.
காலம் என்பது கணம், இலம் முதலியன. செய்கை என்பது அடிக்கப்படும் இரண்டு பொருள்களின் சேர்க்கை. அளவென்பது செய்கைக்கு நடுவிலிருக்கும் இடைவெளியாகும். சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவனம்வெளியிட்டுள்ள “Art of Drumming “ என்ற நூல் பழஞ்சுவடிகளிலிருந்து எடுக்கப்பட்ட பல தாள வகைகள் தமிழர்களின் பாரம்பரியத்தில் முக்கிய பங்கு வகிப்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டியிருக்கிறது.
இந்த பாரம்பரியத்தின் முக்கியச் செய்தி என்னவென்றால் லயம் மனோ தர்மத்தின் மூலமாகவே அடையப்படுகிறது என்பதே. தெட்சிணாமூர்த்தியின் வாழ்க்கையும் கலையும் லய வேலைப்பாடுகளின் சூட்சுமத்தை நமக்கு சொல்வதாக அமைகின்றன.
----
தெட்சிணாமூர்த்தி யாழ்ப்பாணத்து இணுவில் என்னும் ஊரில் புகழ்பெற்ற தவில் மேதை ச. விசுவலிங்கம், இரத்தினம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாக 1933 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது ஆறாவது வயதில் தந்தையாரிடம் தவில் பயிற்சியை ஆரம்பித்து, தவில்மேதை இணுவில் சின்னத்தம்பி, யாழ்ப்பாணம் வண்ணை காமாட்சி சுந்தரம் ஆகியோரிடம் விரிவாகவும் நுணுக்கமாகவும் பயின்று குறுகிய காலத்தில் அரங்குகளில் வாசித்து வந்தார். பெருங் கலைஞரான நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளையிடம் மேலும் லய சம்பந்தமான நுணுக்கங்களை பயின்று அவருடன் தவில் வாசிக்கும் பேற்றைப் பெற்றார். தொடர்ந்து இந்திய நாதசுவர மேதைகளாகிய காருக்குறிச்சி அருணாசலம், ஷேக் சின்ன மௌலானா, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், டி. என். ராசரத்தினம் பிள்ளை, போன்றவர்களுக்கு பெரும்பாலான இசை விழாக்களில் வாசித்து, பாராட்டுக்களையும் தங்கப்பதக்கங்களையும் பெற்றார். தெட்சணாமூர்த்தி தவில் வாத்தியத்தில் முதன் முறையாக பதினொரு எண்ணிக்கை கொண்ட கதி ஒன்றை அமைத்து அதற்கு உத்தரகதி எனப் பெயர் வைத்தார்.
கிருஷ்ண கான சபையில் இவர் வாசிப்பைக் கேட்ட பாலக்காடு மணி ஐயர், இவரை உலகின் 'எட்டாவது அதிசயம்' என்று சொன்னார். ஒரு அட்சரத்தில் மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது மாத்திரைகள் வரும் நடைகளே நடைமுறையில் இருக்க, ஒரு அட்சரத்தில் 11, 13 மாத்திரைகள் வரும் வகையில் நடை அமர்த்தி, முதன்முதலில் வாசித்தவர் தெட்சிணாமூர்த்தி தான். எவ்வளவு நேரம், எவ்வளவு வேகமாக வாசித்தபோதும் ஒவ்வொரு சொல்லும் அதற்கு உரிய கனமுடன், தெள்ளத் தெளிவாய் வாசிக்கும் திறன், அவர் தனிச் சிறப்பாகக் கருதப்படுகிறது.
--
அம்ஷன்குமாரின் ஆவணப்படத்திலும், பி.எம் சுந்தரமும் தவிலிசைக்கலைஞர் தஞ்சாவூர் கோவிந்தரா ஜனும் உரையாடும் யூடூப் விடியோவிலும் சுந்தரம் தெட்சிணாமூர்த்தியை சதா மனதிற்குள் தாளத்தின் நடைகளை தன் மனதிற்குள் உருவாக்கிகொண்டிருந்தவராக சித்தரிக்கிறார். தெட்சிணாமூர்த்தி படைத்த உத்திரகதியின் படுவேகத்தினால் ஆன லயம் நோக்கி அவருடைய மனம் சதா சஞ்சரித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். தன் வீட்டு மாடியில் தங்கியிருந்த தெட்சணாமூர்த்தி அமைதியற்று புகைபிடித்துக்கொண்டே இருப்பவராகவும் தன் மனதில் தோன்றும் தவில் நடைகளை உடனுக்குடன் சுந்தரத்திடம் எழுதி பதிவு செய்ய நிர்ப்பந்திக்கக்கூடியவராகவும் இருந்திருக்கிறார். தனி ஆவர்த்தனங்களை மூன்று மணி நேரம் கூட வாசிக்கும் வல்லமை அவருக்கு இருந்தபோதிலும் அவர் தவிலை தனி கச்சேரியாக செய்ய ஒத்துக்கொண்டதில்லை. நாதஸ்வரத்துக்கான தாளக் கருவியாக மட்டுமே தவிலை தெட்சணாமூர்த்தி கருதியிருக்க வேண்டும்.

இலங்கத் தமிழர் வாழ்வும் வகிபாகமும் நூல் வரிசையில் கலாநிதி வ.மகேஸ்வரன் எழுதி கொழும்புத் தமிழ் சங்க வெளியீடாக 2007 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் ‘தவில் மேதை தட்சணாமூர்த்தி’ என்ற நூலில் தவில் வாழ்வோடு இணைந்த இசைக்கருவியாக மாறியதற்கான செய்திகள் இருக்கின்றன. தமிழ் மரபில் நீண்டகாலம் இசைக்கருவிகளாக ப் பேசப்பட்ட பறை, முரசு, முழவம், பேரிக, ஆகிய வாத்தியங்களின் பின்னைய வடிவமாக தவிலைக் கொள்ளலாம். திருமண காலங்களில் வாசிக்கப்பட்டவை ‘மணமுரசு’ என்றும் மரணச்ச்டங்குகளில் வாசிக்கப்பட்டவை ‘பிணப்பறை’ என்றும் போர்க்காலங்களில் வாசிக்கப்பட்டவை ‘போர்ப்பறை’ என்றும் பெயர் பெற்றன. வாழ்நிலைச் சூழல்களில் நிலைபெற்ற முழவமே தவிலாக உருமாறியதாகக் கருத இடமுண்டு. கோவில் விழாக்களில் நின்றுகொண்டே சாமி புறப்பாடின் போது நின்றுகொண்டே வாசிப்பதற்கு ஏதுவான நாதவரத்தின் பக்கவாத்தியமாக தவில் நிலைபெற்றது. நாதஸ்வரத்துக்கு மட்டுமே வாசிக்கக்கூடிய கருவியாக தவிலை தெட்சணாமூர்த்தி கருதியது மற்றமை ஒன்றோடு இணைந்தே லயம் அழகு பெறுகிறது என்ற அழகியலை அடிப்படையாகக்கொண்டதாக இருக்கலாம்.
ஆவணப்படத்தில் ஏ.கே.பழனிவேல் தெட்சிணாமூர்த்தியின் கைவிரல்களின் அமைப்பும் அவருடைய அபாரமான தவில் வாசிப்புக்கு உதவி செய்தன என்ற் குறிப்பிடுகிறார். அதாவது தெட்சிணாமூர்த்தியின் விரல்கள் நானகும் சமமான நீளத்தில் இரு கைகளிலும் இருக்குமாம். இதனால மிருதங்கம் போல மென்மையான சப்தங்களை எழுப்பக்கூடிய வல்லமையும் அதி வேகமாக வாசிக்கக்கூடிய திறனும் அவர் பெற்றவராக இருந்தார் என்கிறார்.

ஒரு கலைஞனுக்குரிய சுதந்திரத்துடனும் அலட்சியத்துடனும் தெட்சிணாமூர்த்தி வாழ்ந்திருக்கிறார். மாற்று வேட்டி கூட இல்லாமல் வெவ்வெறு ஊர்களுக்கு கச்சேரிக்காக செல்வது அங்கே கிடைக்கும் துணிகளை அணிந்து கொள்வது தனக்கென்று பிரத்தியாகமான தவிலை வைத்துக்கொள்ளாதது என தெட்சிணாமூர்த்தியைப் பற்றி பல வழக்காறுகள் இன்றும் உலவுகின்றன. ஓவ்வொரு ஊரிலும் கிடைக்கும் தவிலை வாங்கி வாசிப்பது அவருடைய நினைவுகளை மேலும் நிலை நிறுத்திக்கொள்ள உதவியிருக்கிறது.
தெட்சணா மூர்த்தியின் தவில் வாசிப்புக்கு மிகப் பெரிய விசிறி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன். இவருடைய மகளின் திருமணத்துக்கு தவில் வாசித்து சிறப்பித்திருக்கிறார் தெட்சணா மூர்த்தி.
தெட்சணாமூர்த்தியின் இசை உலகப் பங் களிப்பு பலவும் ஆவணப்படுத்தப்படாமலே இருந்தன. இந்தக் குறையை போக்குவிதமாக அமைந்திருக்கிறது தவில் மேதையைப் பற்றி அம்ஷன் குமார் எடுத்திருக்கும் ஆவணப்படம்.

தமிழகம் வந்திருந்த இ.பத்மநாப ஐயர், கே.கே.ராஜா ஆகியோர் கலை விமர்சகர் தேனுகாவை சந்தித்தபோது யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியின் இசையைப் பற்றி மேலதிக மான தகவல்களைக் கூறியிருக்கிறார்.
பத்மநாப ஐயர் தெட்சணாமூர்த்தி யின் இசை ஆற்றலை வருங் கால தலைமுறையினர் போற் றும் வகையில் ஓர் ஆவணப் படம் எடுக்கவேண்டும் என்று அங்கேயே அவர் முடிவு செய்து, அப்பொறுப்பை அம்ஷன் குமாரிடம் கொடுத்திருக்கிறார்.
தெட்சணாமூர்த்திக்கு சென்னையின் "தங்கக் கோபுரம்" விருது கிடைத்தது. திருவாவடுதுறை ராசரத்தினம்பிள்ளை அவர்களின் நினைவு விழாவில் தங்கத்தாலான தவிற்கேடயம் 1968 இல் வழங்கப்பட்டது. வாழ்நாளின் பிற்பகுதியை இந்தியாவிலே செலவிட்டார். 1970களில் இலங்கை வந்து 13. மே 1978 இல் காலமானார்.
ஏ.கே.பழனிவேல். பி.எம்.சுந்தரம் தஞ்சாவூர் கோவிந்தராஜன் ஆகியோர் தெட்சணாமூர்த்தியின் தவிலிசை பாரம்பரியமாக இன்னும் தொடர்வதை குறிப்பிடுகின்றனர். தெட்சிணாமூர்த்தின் இசையை அறிவது என்பது லயமும் மனோதர்மமும் எப்படி இயங்குகின்றன என்பதை அறிவது மட்டுமல்ல தமிழ்பாரம்பரியத்தின் musical citizen ஆக மாறுவதுமாகும்.
தவில் மேதை தெட்சிணாமூர்த்தி பற்றிய புத்தகம்

இசையும் நிலமும்: பகுதி 1 - அருணா சாய்ராம்!
இசையும் நிலமும்: பகுதி 2 - ரவிகிரண்
இசையும் நிலமும்: பகுதி 3 - காயத்ரி வெங்கட்ராகவன்
இசையும் நிலமும் - பகுதி 4 : சஞ்சய் சுப்பிரமணியன்
இசையும் நிலமும்: பகுதி 5 - சபா பண்பாடும் கர்நாடக இசையும் - சில குறிப்புகள்
கட்டுரையாளர் குறிப்பு:

எம்.டி.முத்துக்குமாரசாமி
எழுத்தாளர், இயக்குநர், தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையம், சென்னை. பாரம்பரிய இசை, நடனம், ஓவியம், நாடகம் மற்றும் நிகழ்த்துகலைகள் ஆராய்ச்சியில், கடந்த முப்பது வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.

கருத்துகள் இல்லை: