இந்திய குழந்தைகளை தத்தெடுப்பதில், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் லாப நோக்கத்துடன் செயல்படுகின்றனர்' என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மூளை வளர்ச்சி குறைந்த சிறுவன் ஒருவனை தத்தெடுக்க அனுமதி கோரி, அமெரிக்காவைச் சேர்ந்த கிரேயக் ஆலன் கோட்ஸ், அவரது மனைவி சைந்தியா ஆன் கோட்ஸ் டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய டில்லி ஐகோர்ட்,"மனுதாரர்களுக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கின்றனர். எனவே குழந்தைகளை தத்தெடுக்கும் அவசியம் இல்லை. மேலும், தத்தெடுக்கும் சிறுவனை வீட்டு வேலை செய்ய பயன்படுத்த இருப்பதாகத் தெரிகிறது' என்று கூறி, 2009ம் ஆண்டு மனுவை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் சொலிசிட் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் டி.எஸ்.தாகூர் அடங்கிய பெஞ்ச் முன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: "பெரும்பான்மையான வெளிநாட்டினர் இந்திய குழந்தைகளை லாப நோக்குடன் தத்தெடுத்து செல்கின்றனர்.தத்தெடுத்து செல்லப்படும் குழந்தைகள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். பெண் குழந்தைகள் விபசாரத்திலும், வீட்டு வேலைகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர்.கடைசியில் அந்த குழந்தைகளை தத்தெடுத்தவர்கள், கைவிட்டு விடுகின்றனர்.அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க யாரும் இல்லை' என்று கூறினார்.
இதை பரிசீலனை செய்த செய்த சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் கூறியதாவது: "இந்திய குழந்தைகள் வெளிநாட்டினரால், உள்நோக்கத்துடன் தத்தெடுக்கப்படுகின்றனர் என்பதை கோர்ட் ஒப்புக்கொள்கிறது.இதை தடுக்க தற்போது சட்டங்கள் இல்லை. எனவே தத்தெடுப்பதில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க நாடுகளுக்கு இடையில் புதிய சட்டத்தை நடைமுறைபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், மனுதாரர்கள் குழந்தையை நல்லெண்ண அடிப்படையில் தத்தெடுப்பதாக கோர்ட் கருதுகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம்' என்று கூறிவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக