சனிக்கிழமை இரவு, ஆப்கானிஸ்தான் தூதரகம், அக்டோபர் 1, 2023 முதல் இந்தியத் தூதரகம் செயல்படுவதை நிறுத்துவதாக அறிக்கை வெளியிட்டது.
"இந்த முடிவு ஆப்கானிஸ்தானின் நலன் சார்ந்தது" என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
தூதரகம் தனது மூன்று பக்க அறிக்கையில், இந்த முடிவுக்கு மூன்று காரணங்களைக் கூறியுள்ளது.
முதலில், இந்திய அரசாங்கத்திடம் இருந்து ஆதரவைப் பெறாதது,
இரண்டாவதாக, ஆப்கானிஸ்தானின் நலன்களைப் பாதுகாப்பது தொடர்பான எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட முடியாமல் போனது மற்றும் மூன்றாவதாக, ஊழியர்கள் மற்றும் வளங்களின் எண்ணிக்கை குறைப்பு. ஆப்கானிஸ்தான் தூதரகம் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகின.
தூதரகத்தில் பணிபுரியும் இந்திய ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பல தூதர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் செய்திகளில் வந்தது.
தற்போது வரை, இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
ஆப்கானிஸ்தான் தூதரகம் சொல்வது என்ன?
ஆப்கானிஸ்தான் தூதரகம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை மூடும் முடிவை துரதிர்ஷ்டவசமான மற்றும் மிகவும் கடினமான முடிவு என்று விவரித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், "இந்த முடிவு ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் மற்றும் நீண்டகால உறவுகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது." என குறிப்பிட்டுள்ளனர்.
மூன்று முக்கிய காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"முதலாவதாக, ஹோஸ்ட் (இந்தியா) நாட்டிலிருந்து எங்களுக்கு எந்த சிறப்பு உதவியும் கிடைக்கவில்லை, இதன் காரணமாக எங்கள் வேலையை திறம்பட செய்ய முடியவில்லை."
"இரண்டாவதாக, இந்தியாவிடமிருந்து ஆதரவு இல்லாததாலும், ஆப்கானிஸ்தானில் முறையான அரசாங்கம் இல்லாததாலும், ஆப்கானிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் குடிமக்களின் தேவைகள் மற்றும் நலன்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்று நாங்கள் நம்புகிறோம்."
மூன்றாவதாக, ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் வளங்கள் குறைவதால், எங்கள் பணியைத் தொடர்வது பெரும் சவாலாக மாறியுள்ளது. தூதரக அதிகாரிகளின் விசா புதுப்பித்தல் முதல் மற்ற பணி வரை, எங்களுக்கு தேவையான உதவி சரியான நேரத்தில் கிடைக்கவில்லை. குழுவிற்குள் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. மேலும் இது வேலையை பாதிக்கிறது." என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும், "இந்த காரணங்களைக் கருத்தில் கொண்டு, தூதரகத்தின் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக் கொள்ளும் கடினமான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.
இருப்பினும், ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கான அவசர தூதரக சேவைகள் மற்றும் இதர பணிகளை அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை தங்களது பணி தொடரும். அதன்படி வியன்னா மாநாட்டின் கீழ், தூதரக சொத்துகள் மற்றும் வசதிகள் ஹோஸ்ட் (இந்தியா)நாட்டிடம் ஒப்படைக்கப்படும்." என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்
தூதரகத்திற்குள் ஊழியர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் ஆப்கானிஸ்தான் தூதரகம் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தூதரகம் இந்த குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று கூறியது.
"நட்பு நாட்டின் அதிகாரிகள் மற்றும் தூதரக ஊழியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அல்லது சண்டைகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும், எங்கள் தூதர்கள் மூன்றாவது நாட்டில் புகலிடம் கோர முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. இவை அபத்தமான வதந்திகள். நாங்கள் ஆப்கானிஸ்தானின் நலன்களுக்காக ஒரு குழுவாகச் செயல்படுகின்றோம்.
"தூதரகத்தை மூடுவதற்கான காரணங்களை கூறி இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்த கோரிக்கையை இந்திய அரசு தீவிரமாக பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தூதரகத்தின் சொத்தில் ஆப்கானிஸ்தான் கொடி பறக்க அனுமதிக்கப்பட வேண்டும், அதேபோல் காபூலில் உள்ள சட்டப்பூர்வமான அரசாங்கத்திற்கு சொத்தை முறையாக மாற்றவும் நாங்கள் விரும்புகிறோம்."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
இந்தியாவில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கும் ஆப்கானிஸ்தான் தூதரகம் தனது அறிக்கையில் சில செய்திகளை கூறியுள்ளது.
"இங்கு வசிக்கும் குடிமக்களின் பிரச்சினைகள் மற்றும் கவலைகள் குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம். சமீபத்திய நாட்களில் என்ன நடந்தாலும், அவர்களின் கவலைகள் அதிகரித்துள்ளன. அவர்களுக்கு தேவையான தகவல்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்." எனக் கூறியுள்ளனர்.
தூதரகங்கள் பற்றிய எச்சரிக்கை ஏன்?
டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் ஒரு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில், "தூதரகத்தால் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆப்கானிஸ்தானின் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சட்டபூர்வமான அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப இருக்காது. ஆனால் ஆப்கானிஸ்தானில் உள்ள சட்டவிரோத ஆட்சியின் நலன்களுக்காக இருக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்."
இந்தியாவில் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் ஆப்கானிஸ்தான் துணைத் தூதரகங்கள் உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த இரண்டு துணைத் தூதரகங்களும் இந்தியாவில் தங்கள் பணி தொடரும் என்று கூறியிருந்தன.
வெள்ளிக்கிழமை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்பட்டதாக வெளியான செய்தி வதந்தி என்றும், மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் துணை தூதரகங்கள் சுதந்திரமாக பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.
22 ஆண்டு உறவு முறிந்தது
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கம் 2001 இல் வீழ்ந்தது, அதன் பிறகு இந்தியா மார்ச் 2002 இல் காபூலில் தூதரகத்தைத் திறந்தது.
மசார்-இ-ஷரீப், ஹெராத், காந்தகார் மற்றும் ஜலாலாபாத் ஆகிய இடங்களில் இந்தியா துணைத் தூதரகங்களையும் திறந்தது.
ஆனால் ஆகஸ்ட் 2021 இல், தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அஷ்ரஃப் கனி அரசாங்கத்திடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றினர். இதற்குப் பிறகு, பெரும்பாலான நாடுகள் தங்கள் ஆப்கானிஸ்தான் தூதரகங்களில் தலிபான்களின் நியமனங்களை ஏற்க மறுத்தன.
இருப்பினும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற சில நாடுகளில் தலிபான் அரசு அமைத்த தூதரகங்கள் செயல்படுகின்றன. மேலும் ஜனநாயக 'இஸ்லாமிய குடியரசு ஆஃப்கானிஸ்தான்' அரசாங்கத்திற்கு பதிலாக 'இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான்' கொடி கூட பறக்கிறது.
அந்த நாடுகளில் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. அங்கு 2020 ஆம் ஆண்டில், ஃபரித் மாமுண்ட்சாய் கானி அரசாங்கத்தால் தூதராக நியமிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாக வெளியூர் சென்றாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் பணியாற்றி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு, தலிபான் அரசாங்கம், ஃபரித் மாமுண்ட்சாய்க்குப் பதிலாக தூதரக வர்த்தக ஆலோசகர் காதர் ஷாவுக்கு தூதரக பணியின் பொறுப்பை வழங்க முயன்றது.
டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் தொடர்பான விவகாரங்களை கவனிக்குமாறு தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், தூதரக ஊழியர்கள் இதை அனுமதிக்கவில்லை, இறுதியில் காதர் ஷா தூதரகத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வருகைக்குப் பிறகு, காபூலில் உள்ள தனது தூதரகத்தை இந்தியா தற்காலிகமாக மூடியது.
ஆனால் ஒரு வருடம் கழித்து, இந்தியா தனது தூதரகத்திற்கு மனிதாபிமான உதவிக்காக ஒரு தொழில்நுட்பக் குழுவை அனுப்பி ஆப்கானிஸ்தானில் தனது தூதர்கள் இருப்பை மீண்டும் நிறுவியது. ஆனால், இந்த தூதரகம் முன்பு போல் செயல்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக