நேற்றைய தினம் குஜ்ராத் இல் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் முதல் போட்டி ஆரம்பமானது, அப்பொழுது மைதானத்தின் பெரும் பகுதி பார்வையாளர்கள் யாருமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. கிரிக்கட் உலகக் கிண்ண வரலாற்றில் முதல் போட்டியிலேயே மைதானம் வெறிச்சோடிப் போயிருந்த முதலாவது சந்தர்ப்பத்தை நரேந்திர மோடி விளையாட்டரங்கு பெற்றுக் கொண்டது.
இந்துத்துவா பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய புள்ளியும், இந்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வின் பையன் ஜெய் ஷா செயலாளராக உள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் காவி மயமாக்கலை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இந்திய அணியின் பயிற்சி ஆடையின் நிறம் மற்றும் நரேந்திர மோடி அரங்கின் இருக்கைகளின் நிறம் ஆகியன காவி வர்ணத்தை ஒத்தே உள்ளன.
மைதானத்தில் காலியாக இருந்த இருக்கைகளையும், இந்திய அணியின் பயிற்சி ஆடையின் வர்ணத்தையும் இணைத்து "இந்திய அணியின் பயிற்சி ஆடை அணிந்த இந்திய அணி ஆதரவாளர்களால் மைதானம் நிரம்பிக் காணப்பட்டது" என்று கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளனர் நெட்டிசன்கள்.
மத்திய அமைச்சர் அமித் ஷா வின் மகன் என்பதைத் தவிர ஜெய் ஷா ஒரு போதும் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்ட ஒருவரே அல்ல என்றே இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெய் ஷா சிறிய வயதில் அயல் வீட்டுப் பையன்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடி இருப்பாரா என்பதும் கூடச் சந்தேகமே.
1975 ஆம் ஆண்டு வெறும் 8 நாட்டு அணிகளுடன் ஆரம்பித்த கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகள் படிப்படியாக வளர்ச்சி அடைந்து 2007 ஆம் ஆண்டு 16 அணிகள் 4 குழுக்களில் விளையாடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்தன. எனினும் 2007 ஆம் ஆண்டு இந்திய அணி எதிர்பாராத விதமாகத் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது. இந்திய அணி வெளியேறியதால் மைதானத்தில் காலியான இருக்கைகள் காணப்பட்டன, அதனால் வருமான இழப்பு ஏற்பட்டது என்று கருதிய சர்வதேச கிரிக்கெட் வாரியம், அடுத்த உலகக் கிண்ணத்தில் இருந்து இந்திய அணி இலகுவில் வெளியேற முடியாத விதமாக போட்டிகளின் அமைப்பை மாற்றி அணிகளின் எண்ணிக்கையைக் குறைத்தது. அந்த வகையில் 8 இல் ஆரம்பித்து 16 அணிகள் வரை வளர்ச்சியடைந்த கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளை, கழுதையைத் தேய்த்துக் கட்டெறும்பாக மாற்றி 10 அணிகளோடு நிறுத்திக் கொண்டது சர்வதேச கிரிக்கெட் வாரியம்.
16 அணிகள் விளையாடிய 2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் காலியான இருக்கைகள் காணப்பட்டதைச் சரி செய்ய 10 அணிகளாகக் குறைத்தும் பயணில்லாமல் மைதானமே காலியாகக் காணப்பட்டது.
எந்த விளையாட்டாக இருந்தாலும் உலகக் கிண்ணம் என்பது தகுதியான பல நாட்டு அணிகள் பங்குபற்றுவதாக இருக்க வேண்டுமே தவிர, குறிப்பிட்ட ஒரு நாட்டு அணியை மையப் படுத்தியதாக இருக்கக் கூடாது. சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தவறான நடவடிக்கைகளால் நமீபியா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சிம்பாப்வே, கென்யா, மேற்கிந்திய தீவுகள் போன்ற பல அணிகள் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளன.
மைதானம் நிறைந்த பார்வையாளர்களும், வருமானமும் மட்டுமே குறி என்றால் இந்திய - பாகிஸ்தான் அணிகள் மட்டும் விளையாடும் 10 அல்லது 20 போட்டிகளை உலகக் கிண்ணம் என்ற பெயரில் நடத்த வேண்டியதுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக