வெள்ளி, 6 அக்டோபர், 2023

அமைச்சர் ஜீவன் தொண்டமான் : மலையக மக்களுக்கு காணி உரிமை; நவம்பர் 2 ஆம் திகதிக்கு முதல்

No photo description available.

மலையோரம் செய்திகள் :    மலையக மக்களுக்கு காணி உரிமை; நவம்பர் 2 ஆம் திகதிக்கு முதல் சாதகமான பதில்
மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதிக்கு முன்னதாக சாதகமான பதில் கிடைக்கும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அம்மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டியும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் 'நாம் - 200' நிகழ்வின் அறிமுகவிழாவும்,  சின்னம் வெளியீடும் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'நாம் 200' நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.


இந்நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துக்கொள்ளவுள்ளனர். இந்நிகழ்வு ஆட்டம், பாட்டம், கொண்டாட்ட நிகழ்வாக அல்லாமல், மலையக மக்களுக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கான ஒரு நிகழ்வாகவே நடத்த திட்டமிட்டுள்ளோம்.
நவம்பர் 02 ஆம் திகதிக்கு முன்னதாக காணி உரிமை தொடர்பிலும் சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகின்றேன். மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தற்போது பெருந்தோட்ட அமைச்சின் கண்காணிப்புக்கு சென்றுள்ளது.
அதன்பின்னர் காணி அமைச்சுக்கு செல்லும், கடைசியாக எனது அமைச்சுக்கு வந்த பின்னர், அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 மலையக பெருந்தோட்ட பகுதிகளில் 2 இலட்சத்து 31 ஆயிரம் குடும்பங்களுக்கு வீட்டு பிரச்சினை உள்ளன. இதில் 66 ஆயிரம் குடும்பங்கள் அரச வீடு, இந்திய அரசின் வீடு அல்லது சுயமாக வீடுகளை அமைத்துக்கொண்டுள்ளன.
எனவே, மீதமுள்ள சுமார் ஒரு இலட்சத்து 76 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் அவசியமாகின்றன. அக்குடும்பங்களுக்கு காணியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.  
'செளமியபூமி' எனும் திட்டத்தின் கீழ் காணி சீர்திருத்த ஆணைக்குழு ஊடாக பத்திரம் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
 அதேவேளை, இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டு திட்டத்துககான ஒப்பந்தம் இவ்வாரத்துக்குள் கைச்சாத்திடப்படும். முழுமையான தொரு வீட்டு திட்டமாக இதனை நிர்மாணிக்க எதிர்பார்க்கின்றோம்.
நான் வாக்கு வேட்டை அரசியல் நடத்துபவன் கிடையாது. எமக்கு ஒரு லட்சத்து 76 வீடுகள் தேவை. தற்போது 10 ஆயிரம் தான் உள்ளன.
இது விடயத்தில் அரசியல் நடத்தப்படமாட்டாது. முறையான பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளது. முக்கியத்துவத்தின் அடிப்படையாக முறையாக வீடுகள் கையளிக்கப்படும். பயனாளிகள் பட்டியல் பொது இடத்தில் ஒட்டப்படும். எவருக்காவது ஆட்சேபனை இருந்தால், அரசியல் நடந்திருந்தால் ஆட்சேபனை முன்வைக்கலாம். மேன்முறையீட்டு குழு ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: