BBC தமிழ் : மகாராஷ்ட்ரா மாநிலம் நான்டெட் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 32 மரணங்கள் பதிவாகி அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.
அக்டோபர் 1ஆம் தேதியன்று 12 பச்சிளங்குழந்தைகள் உட்பட 24 பேர் வரை இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்துள்ளனர்.
அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்புகளையடுத்து, ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எதிர்கட்சிகள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
என்ன நடந்தது?
மகாராஷ்ட்ரா மாநிலம், நான்டெட் மாவட்ட தலைநகரில் இயங்கும் டாக்டர். ஷங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையில் தான் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
நான்டெட் நகரைச் சுற்றி 70-80 கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் முக்கியமான சிகிச்சைகளுக்கு இந்த மருத்துவமனையை சார்ந்துதான் இருக்கின்றனர்.
அக்டோபர் 1ஆம் தேதி இறந்த 12 பச்சிளங்குழந்தைகளை தவிர மீதமுள்ள நபர்கள், பாம்புக்கடி மற்றும் விஷம் குடித்ததற்கான சிகிச்சைகளை பெறுவதற்காக இந்த மருத்துவமனைக்கு வந்ததாக இதன் இயக்குநர் எஸ்.ஆர்.வகோடே தெரிவித்தார்.
பாம்புக்கடி உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் மருந்துகள் வழங்காததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இந்த மருத்துவமனையின் இயக்குநர் வகோடே முற்றிலும் மறுக்கிறார்.
“மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். ஆனால் அவசர சிகிச்சைக்காக சேர்ந்த நோயாளுக்கு தேவையான மருத்துகள் அனைத்தும் போதுமான அளவில் உள்ளன”, என்று வகோடே கூறினார்.
நான்டெட் அரசு மருத்துவமனை
அக்டோபர் 1ஆம் தேதி அன்று, முதல் 24 மணி நேரத்தில் உயிரிழந்த அனைத்து நோயாளிகளும் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது.
ஹஃப்கின் இன்ஸ்டிடியூட் மூலமாக மருந்து கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டதால், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர, இந்த மருத்துவமனையில் பணியாற்றிய அரசு மருத்துவர்கள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், போதிய மருத்துவர்கள் இன்றி சில சிரமங்களை எதிர்கொள்வதாகவும், நான்டெட் அரசு மருத்துவமனையில் இயக்குநர் வகோடே கூறினார்.
இங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடும் குறைந்துள்ளது. இந்நிலையில் ஹாஃப்கின் நிறுவனத்திடமிருந்து மருந்து எதுவும் வாங்கப்படவில்லை. அதனால், மருந்து தட்டுப்பாடு பிரச்னை உள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரச்னையை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள்
நான்டெட் மருத்துவமனையில் நடந்த பிரச்னை குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளன.
“நான்டெட் மருத்துவமனையில் நிகழ்ந்த ஒவ்வொரு மரணம் குறித்தும் முழுமையான விசாரணை தேவை. ஒரே நாளில் இவ்வளவு இறப்புகள் நடந்துள்ளது.
இதன் தீவிரத்தை உணர்ந்து முதலமைச்சர் உடனடியாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
“தானே சம்பவத்தின் போது காட்டிய அலட்சியம் இம்முறையும் தெரிகிறது. செய்த தவறுகளை மறைப்பதற்காக ஒருவரையொருவர் குற்றம்சாட்டி மூடி மறைக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா மக்களின் உயிர் மிகவும் மலிவாகிவிட்டதா?,” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்ததோடு, சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனாவின் தலைவரான ராஜ் தாக்கரேவும் இந்த சம்பவத்திற்கு தனது கண்டத்தை பதிவு செய்துள்ளார்.
“நான்டேட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதேபோன்ற சம்பவம் தானேயிலும் நடந்தது. மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளது.
மும்பையில், காச நோய்க்கு மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. மருந்து தட்டுப்பாடு பிரச்னை, நான்டெட், தானே, மும்பை மட்டுமின்றி, எல்லா இடங்களிலும் இருக்கிறது.”
ராஜ் தாக்கரே மேலும் கூறுகையில், “மாநிலத்தின் ஆரோக்கியம் வென்டிலேட்டரில் உள்ளது, ஆனால் மாநில அரசில் மூன்று இன்ஜின்கள் இருந்தும் அதன் பயன்பாடு என்ன? அரசாங்கத்தின் மூன்று கட்சிகளும் தங்களை காத்துக்கொள்ளவே கவனம் செலுத்துகின்றனர். ஆனால் மகாராஷ்டிராவைப் பற்றி அவர்கள் கவலை கொள்ளவில்லை.” என்று சாடியுள்ளார்.
அரசு மருத்துவமனை விளக்கம்
அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அடுத்தடுத்த மரணங்கள் தொடர்பாக நான்டேட் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை 24 நோயாளிகள் இறந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் தனியார் மருத்துவமனையிலிருந்து மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்டு இங்கு சேர்க்கப்பட்டனர்.
“மருத்துவமனையில் அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் உள்ளது. மாவட்ட திட்டக் கமிஷன் மூலமாக இந்த ஆண்டுக்கான நிதியாக 12 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதலாக 4 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நாள்பட்ட நோயுடன் வெளியூரிலிருந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது,“ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனைக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் சவான் நேரில் சென்று பார்வையிட்டார். நோயாளிகளுக்கு உடனடி உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவமனையை பார்வையிட்ட பிறகு பேசிய அசோக் சவான், மருத்துவமனையின் தற்போதைய நிலை குறித்து ஊடகங்களிடம் விளக்கினார்.
• மேலும் 70 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு பதிலாக புதிய
•பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
• மருத்துவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது
• உயிர் காக்கும் மருத்துவ இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன
• மருத்துவமனைக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை
• சிகிச்சையளிக்கும் திறனைவிட இரண்டு மடங்கு நோயாளிகளை இந்த மருத்துவமனை • தற்போது கொண்டுள்ளது. (மருத்துவமனையின் கொள்ளளவு – 500; சிகிச்சை பெறும் நோயாளிகள் – 1200)
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் சவான் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதன் முக்கிய சாராம்சம் இது.
‘விசாரணை நடத்தப்படும்’
இதனிடையே, நான்டெட் மருத்துவமனையில் நிகழ்ந்த மரணங்கள் எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
“இந்த மருத்துவமனைக்கு தெலுங்கானா மாநில எல்லையிலுள்ள கிராமங்களிலிருந்து நோயாளிகள் வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாததால் அவர்கள் இங்கு வருகின்றனர். மாநிலத்தில் மருந்து தட்டுப்பாடு, மருத்துவர்கள் பற்றாக்குறை போன்ற பிரச்னை ஏதுமில்லை.”
இதேபோலவே ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, மகாராஷ்ட்ரா மாநிலத்தின் தானேவில் உள்ள மருத்துவமனையில் ஒரே இரவில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பேசுபொருளானது.
தற்போது மீண்டும் நான்டேட்டில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மரணக்கள் நிகழ்ந்துள்ளன.
-பிபி தமிழ் செய்தி-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக