nakkheeran.in : மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.
ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, ஆராய்ச்சியாளர்கள் கேட்டலின் கரிக்கோ, ட்ரூ வெய்ஸ்மன் ஆகிய 2 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பியரி அகோஸ்தினி, ஃபெரங்க் க்ரவுஸ் மற்றும் ஆனி ஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
வேதியியலுக்கான நோபல் பரிசு மௌங்கி ஜி. பாவெண்டி, லூயிஸ் இ.புரூஸ் மற்றும் அலெக்ஸி ஐ.எகிமோவ் ஆகிய மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, நார்வே நாட்டைச் சேர்ந்த ஜோன் ஃபொஸ்ஸே என்பவருக்கு நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஈரானில் மகளிர் உரிமைக்காக மட்டுமின்றி மனித உரிமைகளுக்காகவும் போராடிவரும் நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம், மனிதம் என பல்வேறு தலைப்பில் மாபெரும் போராட்டம் வெடித்த ஈரானில் முக்கிய பங்கு வகித்த நர்கீஸ் முகமதியை 13 முறை ஈரான் அரசு கைது செய்து ஐந்து முறை சிறை தண்டனை கொடுத்துள்ளது. 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையிலும் நர்கீஸ் முகமது சிறையில்தான் உள்ளார். இதுவரை நர்கீஸ் முகமதிக்கு பெண்கள் உரிமைக்காக போராடியதற்காக 154 முறை சவுக்கடி கொடுத்துள்ளது ஈரான் நாட்டு அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக