புதன், 4 அக்டோபர், 2023

நக்கீரனுக்கு வந்த போன்; போர்வைக்குள் ஜெபம்.. ஆதாரத்துடன் சிக்கிய பாதிரியார்!

Madurai fake Pastor case
nakkheeran.in  : Madurai fake Pastor case நம் நக்கீரனைப் பதட்டத்தோடு தொடர்புகொண்ட அந்தப் பெண் குரல்...“என் பெயர் ஸ்டெல்லா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
கடவுளின் பெயரால் டேனி என்ற பாதிரியார் என்னை ஏமாற்றிவிட்டான்.
அவனது மன்மத லீலைகள் இப்போதுதான் எனக்குத் தெரியவந்தது.
அந்தப் படுபாதகனை நீங்கதான் அம்பலப்படுத்தணும்” என்றது. அவரை ஆசுவாசப்படுத்தி, அவர் இருக்கும் இடத்தை அறிந்து சந்தித்தோம்.
அப்போது அவர், “என்னை திருமணம் பண்ணிக்கொள்கிறேன் என்று சொல்லி, நிச்சயதார்த்தம் வரை சென்று, என் நகை மற்றும் பணத்தை முதலில் சுருட்டிக்கொண்டான் டேனி.
திருமணத்துக்கு நாள் குறிக்கும் சமயத்தில், தன் அம்மாவுக்கு ஆபரேஷன் நடக்க இருப்பதால் கொஞ்சம் தள்ளிப் போடுவோம் என்று சொன்னான்.
அதோடு தொடர்ந்து 2 வருடங்கள், திருமண நம்பிக்கையூட்டி என்னைப் பயன்படுத்திக்கொண்டான்.
Madurai fake Pastor case
ஒரு நாள் அவனது செல்போனை எடுத்துப் பார்க்கும்போது அதிர்ச்சியில் உறைந்தேன். அதில் 20-க்கும் மேற்பட்ட பெண்களோடு அவன் ஆபாசக்கோலத்தில் இருந்த புகைப்படங்கள் என்னை நிலைகுலைய வைத்தது. இதைப் பற்றி அவனிடம் கேட்டபோது என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டினான். தப்பித்தால் போதும் என்று ஊரை காலி செய்துவிட்டு வந்துவிட்டேன். எங்களது நிச்சயத்தை நடத்திவைத்த மதுரை தத்தனேரியைச் சேர்ந்த பாதிரியாரை எதேச்சையாக சந்தித்தபோது, அவர் என்னிடம் “நீ நிச்சயம் செய்தபின்பு வேண்டாம் என்று சொன்ன பையன் டேனி ஒரு பக்கா பிராடு. இப்போது வேறு ஒரு தென்காசிப் பெண்ணுடன் அவனுக்கு நிச்சயம் ஆகியிருப்பதாகத் தெரிகிறது” என்றார். இது மேலும் திகைக்க வைத்தது.

இதுவரை அவன் 22 பெண்களை ஏமாற்றியிருக்கிறான். அவனுக்கு முழுநேர வேலையே, பணக்காரப் பெண்களை வளைப்பதுதான். அவன் அம்மா நடத்தும் ‘ஒளி வெளிச்சம்’ என்னும் ஜெபக்கூடத்திற்கு வருகிறார்கள் என்று பார்த்து, முகநூல் மூலம் அவர்களை வளைத்துவருகிறான். இதற்கு அவன் அம்மாவும் உடந்தை. மனக்கவலையோடு வருகிற பெண்களிடம், “கவலைப்படாதீர்கள். என் மகன் ஒரு பாதிரியார். அவன் மிகச்சிறப்பாக ஜெபம் செய்வான். உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் மருந்து கொடுப்பான்” என்று, இவனை அவர் அறிமுகப்படுத்துவார். அதன்பின் அவர்களிடம் தன் சித்துவேலையை இந்த போலி பாதிரியார் காட்ட ஆரம்பித்துவிடுவான்” என்ற ஸ்டெல்லா, டேனி செல்போனில் இருந்த படங்கள் இவை என்று சிலவற்றைக் காட்டினார். படத்தில் விதவித பெண்களுடன் டேனி இருந்தார். அதில் அவரது மன்மத முகம் அப்பட்டமாகத் தெரிந்தது.

Madurai fake Pastor case

இதுகுறித்த விசாரணையில் இறங்கினோம்... அந்த டேனி பிரைட்டின் உறவுக்காரர் ஒருவரிடம் விசாரித்தபோது, “டேனி செய்யும் அக்கிரமங்களுக்கு துணை போகக்கூடாது என்றுதான் உங்களிடம் மனம் திறக்கிறேன். ஸ்டெல்லாவையும் நான் தான் எச்சரிக்கை செய்தேன். இறைவனின் பெயரால் பெண்களுக்கு அவன் செய்துவருகிற துரோகங்கள் மன்னிக்க முடியாதவை. மதுரை பசுமலையில்தான் அவன் அம்மா நடத்தும் ‘ஒளி வெளிச்சம்’ ஜெபக்கூடம் இருக்கிறது. அங்கு வைத்துதான் எல்லா அசிங்கங்களுக்கும் தொடக்க விழா நடத்துகிறான் டேனி. அவனைப் பற்றித் தெரிந்துகொள்ள அவனது தாத்தா ஆல்பர்ட் சுந்தர் ராஜை சர்ச்சில் சந்தியுங்கள். டேனியால் ஏமாற்றப்பட்ட மூன்று பெண்களை எனக்குத் தெரியும். ஒரு வசதியான இளம் விதவைப் பெண்ணும் அவனிடம் ஏமாந்திருக்கிறார். டேனி என்கிற காமப்பசி கொண்ட மிருகத்திடமிருந்து எப்படியாவது இளம்பெண்களைக் காப்பாற்றவேண்டும். இவனது குற்றங்களுக்கு இவனது சித்தப்பா ஆல்பர்ட் பிரேம்குமாரும் உறுதுணையாக இருக்கிறார். டேனியைப் பற்றி விசாரித்தாலே, அவன் அடியாட்களை வைத்து மிரட்டுவான், எச்சரிக்கையாக இருங்கள்” என்றும் நம்மை அவர் உஷார்படுத்தினார்.
Madurai fake Pastor case
மதுரை பசுமலையில் உள்ள ‘ஒளி வெளிச்சம்’ ஜெபக்கூடத்திற்குச் சென்றோம். அங்கு ஆல்பர்ட் சுந்தர்ராஜ் பற்றி விசாரித்தபோது அங்கிருந்தவர்கள், அவர் சர்ச்சுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். உடனே அந்தப் பகுதியில் இருக்கும் சர்ச்சுக்குச் சென்றோம். அங்கே ஆல்பர்ட் சுந்தர்ராஜ் தென்பட அவரை சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதுமே பதட்டமான அவர், “டேனி பற்றி யார் கேட்டாலும் எதுவும் சொல்லக்கூடாது என்று என் மகன் பிரேம் சொல்லியிருக்கிறான். மீறிப் பேசினால், என்னை அடிப்பான்... நீங்கள் போய்விடுங்கள்” என்றார் பரிதாபமாக.

அப்போது நம் வாட்ஸ்-ஆப் காலில் வந்த ஆல்பர்ட் பிரேம்குமார், “நீங்கள் அப்பாவை தொந்தரவு செய்யாதீர்கள். மீறி செய்தால் போலீஸுக்குப் போய்விடுவேன். அவருக்கு 75 வயது. அதிர்ச்சியில் அவரது உயிருக்கு ஏதாவது நடந்தால், கொலை கேஸில் உள்ளே போய்விடுவீர்கள்” என்று நம்மை மிரட்டினார்.

Madurai fake Pastor case

அப்போது அந்த ஆல்பர்ட் சுந்தர்ராஜ், “டேனி பற்றி புகாரா? சின்னவயசு பையன். அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். அந்த சென்னைக்காரப் பொண்ணு ஸ்டெல்லா, அவனைப் பற்றி சொன்னுச்சா? இல்லை தென்காசிப் பொண்ணு புகார் சொன்னுச்சா? நான் எவ்வளவோ சொன்னேன், இவன் கேட்கலை” என்றார் புலம்பலாக.

அப்போது அவர் செல்லுக்கு வந்த ஒரு பெண்மணி, “விசாரிக்க வந்தவர் போய்ட்டாரா?” என்று கேட்டுவிட்டு, “உடனே அந்த ஆளைப் போகச்சொல்லு. இல்லைன்னா, நான் அங்க வந்து, அந்த ஆள் என்கையைப் பிடிச்சி இழுத்ததா புகார் கொடுப்பேன்” என்று சொல்ல... அங்கிருந்து நகர்ந்தோம்.

டேனிக்கு தென்காசிப் பெண் ஒருவரோடு நிச்சயதார்த்தம் நடத்திவைத்த பாதர் ஒருவரை சந்தித்தோம். அவர் நம்மிடம், “நான் வாட்ஸ்-ஆப் காலில் வந்து பேசுகிறேன்” என்றபடி நகர்ந்தவர், வாட்ஸ்-ஆப்பில் வந்தார். வந்தவர், “அந்த டேனி பிரைட் என்ற டேனி தேவ அனுகிரகம் என்பவனுக்கும் ஜான்ஸி (பெயர் மாற்றப்பட் டுள்ளது) என்ற பெண்ணுக்கும் நான்தான் நிச்சயதார்த்தம் செய்துவைத்தேன். ஆனால் அவன் அதற்கு முன்பே பல பெண்களை ஏமாற்றி சல்லாபத்தில் இருந்துவிட்டு ஏமாற்றியிருக்கிறான் என்று, இவனால் ஏமாற்றப்பட்ட வேறொரு பெண் வந்து ஆதாரங்களோடு சொன்ன பிறகு, அந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினேன். அவன் ஜகஜாலபிரதாபனா இருக்கான். பல பெண்களின் வாழ்க்கையைக் கெடுத்திருக்கிறான்” என்று முடித்துக்கொண்டார்.

டேனியால் ஏமாற்றப்பட்டவர்களில் ஒருவரான நாகர்கோயில் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் சந்தித்தோம். தயக்கத்தோடு பேசிய அவர், “நான் கல்யாணமாகி விவாகரத்தானவள். முகநூலில் ஒளி வெளிச்சம் ஐ.டி.யில் டேனியின் அம்மா ஜெபத்தில் எப்போதும் கலந்துகொள்வேன். நான் வசதியானவள் என்பதைத் தெரிந்துகொண்ட டேனியின் அம்மா, ஒரு நாள் எனக்கு போன்செய்து, ஏன் விவாகரத்தானது என்று விசாரித்தார். பிறகு “என் மகனிடம் பேசு. அவன் உன் எல்லா கஷ்டத்தையும் கர்த்தரின் கவனத்துக்குக் கொண்டுபோவான். உனக்கும் நல்ல தீர்வு கொடுப்பான்” என்றார். இதன்பின் அவன் பேசினான். அன்று எனக்குப் பிடித்த சனிதான் பல கொடுமைகளை அனுபவிக்கச் செய்துவிட்டது. இப்போது எல்லாம் போய் தனி மரமாக நிற்கிறேன். என் அப்பாவும் இறந்துவிட்டார். இவனால் நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன்” என்று விவரிக்க ஆரம்பித்தவர், “அவன் முதலில் என் வீட்டிற்கு வந்தபோது, என் தலையில் கையை வைத்து மனம் உருகி வேண்டுவது போல் ஜெபம் செய்தான்.

பின் வாராவாரம் வந்து செய்தான். அப்படிதான் ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத நேரம், மனசை ஒருநிலைப்படுத்துகிறேன் என்று சொன்னவன், “கெட்ட ஆவிகளிடமிருந்து விடுபட்டு கர்த்தரின் தனி உலகிற்குள் வா… வா..” என்று கத்திக்கொண்டே, ஒரு பட்டுப் போர்வையை என் மேல் போர்த்தி, அதற்குள் அவனும் வந்து ஜெபிக்க ஆரம்பித்தான். அப்போது ஜெபித்துக்கொண்டே என் வாயில் ஒரு அப்பத்தை திணித்தான். அவ்வளவுதான்... அடுத்து என்ன நடக்கிறது என்று தெரியாதபடி அவன் வசப்பட்டேன். அந்த அப்பம் ஒருவித போதையைத் தரக்கூடியதாக இருந்தது. மயங்கிய நிலைக்குப் போன நான், சுய நினைவு வந்தபோதுதான்... என் உடலில் ஆடைகள் இல்லாததை அறிந்து திடுக்கிட்டேன். அவன் என்னோடு பின்னிக்கொண்டு இருந்தான். நான் அவனை உதறித் தள்ளிவிட்டு, ‘என்ன பாதர் இப்படிப் பண்ணிட்டீங்களே?’ன்னு அழுதேன்.

அவனோ, “அப்படிச் சொல்லாதே, நான் உன் உடம்பில் உள்ள துஷ்ட சக்தியை வெளியேற்றவே அப்படிச் செய்தேன். இதில் எந்தத் தப்புமில்லை” என்றான். “என்னைப் பிடித்திருந்தால் கர்த்தர் ஆசிர்வதித்தால், நானே உனக்கு மணவாளனாக வர வாய்ப்பு உண்டு” என்று பேசினான். வசப்படுத்தினான். அடுத்தடுத்து என்னோடு இரண்டு ஆண்டுகள் இருந்து, என் நகை, பணம் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு வெளிநாடு செல்கிறேன் என்று போனவன், தன் போன் நம்பரையே மாற்றிவிட்டான். பிறகுதான் நான் மோசம் போனதையே உணர்ந்தேன். அடுத்தடுத்து அவனால் பலர் பாதிக்கப்பட்டதை அறிந்து அரண்டு போயிருக்கிறேன்” என்றார் விழியில் கசிந்த ஈரத்தோடு.

அந்த டேனியின் விளக்கத்தை அறிய, அவரைத் தொடர்புகொள்ள பல வகையிலும் முயன்றோம். இறுதியாக லைனுக்கு வந்த டேனி, “ஸ்டெல்லாவை எனக்குத் தெரியவே தெரியாது” என்றவர், “ஸ்டெல்லா சொல்வதெல்லாம் பொய். எனக்கும் அவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. எதுவானாலும் என்னிடம் நேரில் பேசுங்கள்” என கூறிவிட்டு கட் பண்ணிவிட்டார்.

பெண்களை வேட்டையாடும் போலிப் பாதிரியாரின் மன்மத லீலைகளுக்கு காவல்துறை உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: