வியாழன், 3 பிப்ரவரி, 2022

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முஸ்லிமோபோபியா!.. ரிஷ்வின் இஸ்மத்

Rishvin Ismath  :  சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முஸ்லிமோபோபியா!
ஹபாயா, ஹிஜாப் ஆகியவை பெண்கள் மீது இஸ்லாம் மதம் திணித்த பெண் அடிமைத்தனத்தின் சின்னங்களாக இருந்தாலும் கூட அவை இலங்கையில் தடை செயப்பட்ட ஆடைகள் அல்ல.
அத்துடன் ஹபாயா, ஹிஜாப் ஆகியவற்றை அரசாங்கப் பாடசாலை ஆசிரியர்கள் அணியக் கூடாது என்று சொல்கின்ற விதமாக கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்கள், சுற்றுநிரூபங்கள் எதுவும் கிடையாது.
இந்த நிலையில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் கல்லூரிச் சமூகத்தினர் ஹபாயா, ஹிஜாப் அணியும் முஸ்லிம் ஆசிரியைகள் தமது பாடசாலையில் கற்பிக்கக் கூடாது என்று வன்மத்துடன் செயலாற்றுவது அவர்களிடமுள்ள முஸ்லிமோபோபியாவின் வெளிப்பாடே என்பதில் சந்தேகமில்லை.
ஹபாயா என்கின்ற ஆடையும், ஹிஜாப் என்கின்ற துணியும் பெண்கள் மீது இஸ்லாம் மதம் திணித்த பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடுகள் என்பதில் சந்தேமில்லை,
 என்றாலும் அவற்றினாலே அடுத்த மனிதர்களுக்கு எவ்வித இடையூறுகளுமே இல்லை,


 எனும் பொழுது சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் செயற்பாடு கேவலமானதாக உள்ளது.

யாராவது ஒருவர் தமது அடையாளத்தை மறைக்கும் விதமான நிகாப், புர்கா போன்ற முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளையோ, திருடர்கள், கொலைகாரர்கள் அணியும் முகமூடிகளையோ அணிந்து வந்தால் அவற்றை பாதுகாப்புக் காரணங்களுக்காக எதிர்ப்பது நியாயமான செயலாக இருக்கும், எனினும் ஆள் அடையாளத்தை எவ்விதத்திலும் மறைக்காத, தடை செய்யப்படாத ஆடையை அணிந்து வருகின்றவர்களை கல்வி கற்பிக்க அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வது கேவலமானது. இஸ்லாம் உட்பட எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இருக்கும் நிலையில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா, ஹிஜாப் போன்றவற்றைக் காரணமாக வைத்து முஸ்லிம்களைக் குறிவைப்பதற்கும், முஸ்லிமோபோபியா வளர்வதற்கும் மனிதநேயமுள்ளவர்கள் இடமளிக்கக் கூடாது.
.
.
திருகோணமலை சண்முகா இந்து மகளீர் கல்லூரியின் மோசமான செயற்பாடு குறித்து அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுப்பதுடன், இந்த முஸ்லிமோபோபியா செயற்பாட்டில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் தொடர்பு பட்டிருந்தால் அவர்கள் தூரப் பிரதேசங்களுக்கு தண்டனை இடமாற்றம் செய்யப்பதுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி நேரத்தில் மாணவிகளை ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் சீருடைகளுடன் வீதியில் இறக்கியவர்கள் குறித்து முறையான, விரைவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், அதிலே ஆசிரியர்கள் சம்மந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேற்படி பிரச்சினையில் தொடர்புபட்ட அனைவரும் மனிதநேய அடிப்படையிலான நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் அல்லது புணர்வாழ்வுச் செயற்பாடுகளுக்கு உள்ளாக்கப்படல் வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் இதற்கு மேலும் கைகட்டி முஸ்லிமோபோபியா வளர்ச்சியடைவதை வேடிக்கை பார்க்கக் கூடாது. சாதாரண முஸ்லிம் பொதுமக்களை இலக்கு வைக்கும் முஸ்லிமோபோபியா செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

.
மூவினத்தவரும் சம அளவில் வாழும் திருகோணமலை போன்ற அமைதியான ஒரு மாவட்டத்தில் இவ்வாறான ஒரு மோசமான நிகழ்வு இடம்பெறுவது குறித்து அம்மாவட்ட மக்கள் விழிப்படைவதுடன், இன, மத விரிசல்கள் வளர்ச்சியடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிச் சமூகத்தினர்கள், மாணவிகள் ஆகியோர் சுயநலமிகளால் பிழையாக வழிநடாத்தப் படாமல் சுயமாக சிந்தித்து நியாயமாக செயற்பட முன்வர வேண்டும். அனைவரையும் சமமாக மதிக்க மாணவர்களுக்கு பயிற்றப்பட வேண்டும். மேலும் நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் ஏனைய சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மீது மேற்கொள்ளப்படும் ஆடைத் திணிப்புக் குறித்து முஸ்லிம் சமூகத்தினரும் இப்பொழுது சிந்திக்க வேண்டும், அந்த ஆடைத் திணிப்பை முற்றாகக் கைவிடல் வேண்டும். முஸ்லிம் பாடசாலையில் கல்வி கற்ற காலத்தில் இஸ்லாமிய ஆடையை அணியும்படி தானும், சக தமிழ் மாணவிகளும் நிர்ப்பந்திக்கப் பட்டதாக புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சிச் செயற்பாட்டாளர் மோகனா தர்ஷினி முன்பொருதடவை வருத்தத்துடன் குறிப்பிட்டு இருந்தார். இலங்கையில் உள்ள பாடசாலைகள் இன, மத ரீதியாக பாகுபடுத்தப் படுவது அல்லது அடையாளப்படுத்தப் படுவது கைவிடப் பட்டு, ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்காக அனைத்துப் பாடசாலைகளும் அனைத்து இன, மத மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய விதமான அரசாங்கப் பாடசாலைகளாக மாற்றியமைக்கப்படுவது காலத்தின் அவசியம் ஆகும்.
.
இஸ்லாம் மதம் பெண்ணடிமைத்தனம், பாலியல் பாகுபாடு, வன்முறை, தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றைக் கொண்ட மதமாக இருந்தாலும் கூட, அந்த மதத்தைப் பார்க்கும் அதே கண்ணோட்டத்தில் சாதாரண முஸ்லிம்களைப் பார்ப்பது மிகவும் தவறானது. முஸ்லிம்கள், இஸ்லாமியவாதிகள், ஜிஹாதிகள் இடையேயான வேறுபாட்டை புரிந்துகொள்ள அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். ( http://www.allahvin.com/2021/11/Islamist.html ) முஸ்லிம்கள், குறிப்பாக முஸ்லிம் பெண்கள் இஸ்லாத்தில் இருந்து மீட்கப்பட வேண்டும், ஆனால் முஸ்லிமோபோபியா ஒருபோதும் அதற்கான சரியான வழிமுறை அல்ல. ஆரோக்கியமான மத விமர்சனம், கல்வி மற்றும் சுய சிந்தனையை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலமே முஸ்லிம்கள் இஸ்லாத்தில் இருந்து மீட்கப்பட வேண்டும்.
-றிஷ்வின் இஸ்மத்
 02.02.2022

கருத்துகள் இல்லை: