Shyamsundar - Oneindia Tamil : பெங்களூர்: கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவிப்பு அங்கு இருக்கும் பியு கல்லூரிகளில் இந்து மாணவ, மாணவியர் பலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகாவில் 10ம் வகுப்பிற்கு பின் பியுசி படிக்கும் நடைமுறை இப்போது உள்ளது. அதாவது +1, +2 கர்நாடகாவில் ஜூனியர் காலேஜ் அல்லது பியு காலேஜ் என்று அழைப்பார்கள்.
இந்த பியு கல்லூரிகளில்தான் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இத்தனை காலமாக அங்கு இருக்கும் மாணவிகள் ஹிஜாப் அணிந்துதான் பியு கல்லூரிக்கு வந்துள்ளனர். இதுவரை அங்கு எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை.
ஆனால் சமீப காலமாக இஸ்லாமிய மாணவிகள் இப்படி ஹிஜாப் அணிவதை இந்து மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கல்லூரியில்தான் முதலில் இந்த சம்பவம் நடைபெற்றது. அதை தொடர்ந்து உடுப்பியில் மேலும் சில பியு கல்லூரிகள், சிக்மங்களூர், ஷிவமொக்கா என்று பல பகுதிகளில் பியு கல்லூரிகளில் வரிசையாக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பியு கல்லூரி விதிப்படி கல்லூரிகளில் மாணவ, மாணவியர் எல்லோரும் கண்டிப்பாக யூனிபார்ம் அணிய வேண்டும்.
ஆனால் இஸ்லாமிய முறைப்படி மாணவியர் சிலர் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். பல வருடமாக இவர்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் பியு கல்லூரியில் படிக்கும் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பை சேர்ந்த ஏபிவிபி பிரிவு மாணவர்கள் மற்றும் சில இந்து பிரிவை சேர்ந்த மாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்தே அங்கு போராட்டம் வெடித்துள்ளது. அதன்படி இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கூடாது. இது விதிக்கு எதிரானது.
அவர்கள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம் என்று இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக இந்த இந்து மாணவர்களும், சில மாணவிகளும் குரல் கொடுத்துள்ளனர். அதோடு கல்லூரிக்கு இவர்கள் காவி உடை அணிந்து வந்துள்ளனர். இது பியு கல்லூரியில் மத ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உடுப்பி, மங்களூர், சிக்மங்களூர், ஷிவமொக்காவில் உள்ள பல பியு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் தொடங்கி இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள பல பியு கல்லூரிகளில் இந்த மோதல் தீவிரமாக நடந்து வருகிறது. பல கல்லூரிகளில் இதனால் இஸ்லாமிய மாணவிகள் பியு கல்லூரிக்குள் செல்லாமல் வெளியே நிற்க வைக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. உடுப்பியில் உள்ள பியு அரசு கல்லூரி ஒன்றில் 6 மாணவிகள் ஒன்றரை மாதமாக வகுப்பிற்குள் அனுமதிக்கப்படவில்லை. இன்றும் கூட உடுப்பியில் இன்னொரு அரசு பியு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கர்நாடகா உடுப்பி பெல்ட் முழுக்க மத ரீதியான மோதல் அதிகம் நடக்க கூடிய இடம் என்பதால் இந்த பிரச்சனை அங்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்த பியு கல்லூரிகள் அதற்கான காரணங்களையும் சொல்லி இருக்கின்றன. அதன்படி, கல்லூரி விதியை அவர்கள் மதிக்க வேண்டும். இதுதான் கல்லூரி உடை ரூல்ஸ். எங்கள் கல்லூரியில் ஏற்கனவே பல சிறுபான்மையினர் படிக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இப்படி புகார் கொடுக்கவில்லை. சிலர் மட்டும் வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறார்கள்.
அந்த மாணவிகள் சிஎப்ஐ என்று இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்கள்தான் வேண்டும் என்றே பிரச்சனை செய்கிறார்கள். இப்போது அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் வரும் நாட்களில் கல்லூரிக்குள் தொழுகை நடத்தவும் அனுமதி கேட்பார்கள். அவர்களின் சிஎப்ஐ அமைப்பு சர்ச்சைக்குரியது என்று கல்லூரி நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக இஸ்லாமிய மாணவிகளின் பெற்றோர்களிடம் கல்லூரி நிர்வாகம் ஆலோசனைகளை செய்து வருகிறது.
அதாவது உங்கள் பெண் குழந்தைகளை ஹிஜாப் அணிந்து கல்லூரி அனுப்பாதீர்கள். அப்படி அனுப்பினாலும் வகுப்பிற்கு வரும் முன் ரெஸ்ட் ரூமில் உடையை மாற்றிவிட்டு வர சொல்லுங்கள். இதுதான் உடை ரூல்ஸ் என்று உத்தரவிட்டுள்ளனர். ஆனால் இஸ்லாமிய மாணவிகளின் பெற்றோர்கள், கிறிஸ்துவ பெண்கள் ஜீசஸ் மாலை அணிந்து வருகிறார்கள். சிலர் பூணூல் அணிந்து வருகிறார்கள். அது தவறு இல்லையா?
அது மத அடையாளம் இல்லையா? சீக்கியர்கள் தர்பன் அணிந்து வந்தால் சிக்கல் இல்லையா? இது உடை சுதந்திரம். இந்து பெண்கள் பொட்டு வைத்து வருகிறார்கள். அப்படி இருக்கும் போது இஸ்லாமிய பெண்கள் அவர்களின் உடைகளை அணிவதில் என்ன தவறு இருக்க முடியும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டு இருக்கும் மத உரிமை இது. இதை வேண்டும் என்றே சிலர் பிரச்சனையாக்கி வருகின்றனர். கல்லூரி நிர்வாகமும் இதற்கு ஒத்துழைப்பு தருவது அதிர்ச்சி அளிக்கிறது என்று மாணவியரின் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். கர்நாடக கல்லூரிகளில் இந்து மாணவர்கள் இப்படி திடீரென துவங்கி இருக்கும் போராட்டம் காட்டுத் தீ போல மற்ற கர்நாடக யுஜி, பிஜி கல்லூரிகளிலும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக