Shyamsundar - Oneindia Tamil : சென்னை: திமுக கூட்டணியில் உள்ள தனது தோழமைக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவதில் ஏக கெடுபிடிகளை திமுக மாவட்ட செயலாளர்கள் காட்டி வருவதாக கூட்டணி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது.
அதிமுக, பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில் இந்த முறை 9 முனை போட்டி நிலவ உள்ளது.
ஏற்கனவே பல மாவட்டங்களுக்கு திமுக, அதிமுக, விசிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது.
திமுக வலிமையான கூட்டணியோடு இந்த முறை தேர்தலை சந்திக்க உள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் திமுக தனது தோழமை கட்சிகளுக்கு போதிய இடங்களை வழங்கவில்லை என்றாலும், கூட்டணி கட்சிகளை ஒரு வழியாக சமாளித்து திமுக தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.
திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு போதிய இடங்களை வழங்கவில்லை என்று ஆங்காங்கே புகார்கள் கொஞ்சம் கொஞ்சமாக எழ தொடங்கி உள்ளன. நேற்று முதல்நாள் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கரூரில் போதிய இடம் கிடைக்கவில்லை என்று போர்க்கொடி தூக்கினார். திமுக மாவட்ட செயலாளர் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்ட கூட்டத்தில் ஜோதிமணி அதிக இடங்களை கேட்க அது பெரிய பிரச்சனையில் முடிந்தது.
கடைசியில்.. இதெல்லாம் நியாயமே இல்லை. இங்கே என்ன விருந்தா கொடுக்குறாங்க என்று கோபமாக கத்திவிட்டு கூட்டத்தில் இருந்து ஜோதிமணி வெளியானார். இன்னொரு பக்கம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள் போதிய இடங்களை வழங்கவில்லை என்று மதிமுக புகார் வைத்துள்ளது. மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ இதற்காக நேரடியாக முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தார்.
துரை வைகோ - திமுக மாவட்ட செயலாளர்கள் கண்டிப்பாக இருக்கிறார்கள், நாங்கள் கேட்கும் இடங்களை கொடுக்கவில்லை. எங்களுக்கு கடும் நெருக்கடியாக இருக்கிறது. திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை கூடுதல் இடங்களை ஒதுக்க ஆவண செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் நேரடியாக கேட்டு இருக்கிறார். இந்த நிலையில்தான் பல மாவட்டங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள் மீது கூட்டணியில் உள்ள கட்சிகள் கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ், மதிமுகவை சேர்ந்த சில மாவட்ட செயலாளர்களிடம் விசாரித்ததில் ''திமுக எங்களிடம் பெரியண்ணன் பாணியில் நடந்து கொள்கிறது. அவர்கள் கொடுப்பதை எங்களிடம் திணிக்கிறார்கள். அதைத்தான் பெற வேண்டியுள்ளது. நாங்கள் கேட்கும் இடங்களை கொடுப்பது இல்லை. பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள், ஆனால் எங்களிடம் பேசாமலே முடிவை எடுக்கிறார்கள் " என்கிற புலம்பல்களே காணப்பட்டது.
இன்றைக்குள் கூட்டணிக்கட்சிகளுக்கான இடங்களை இறுதி செய்துவிட்டு தங்களின் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது திமுக. இதற்கிடையே, 'கூட்டணி கட்சியில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் க்ளீன் இமேஜ் கொண்டவர்களாக இருக்க வேண்டும். குற்றப்பின்னணி இல்லாதவர்களாவும், படித்த இளைஞர்களாகவும் பார்த்து வேட்பாளர்களை நிறுத்துங்கள் என்று எங்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர். எங்களுக்கு அவர்கள் கொடுத்துள்ள இடங்களே சொற்பம்தான்.
ஆனால் அதிலும் நிறைய கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் குறித்து தோழமை கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் புகார்கள் வைக்கிறார்கள். இருப்பினும் அதிமுக - பாஜக இடையே நேர்ந்தது போல பெறிய மோதல் இல்லை. கருத்து வேறுபாடு இருக்கிறது.. அவ்வளவுதான்.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பதால் பெரிய அளவில் சண்டையாக இது உருவெடுக்கவில்லை என்று திமுக கூட்டணி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இப்போது நடந்தது போல இல்லாமல்.. திமுக வரும் தேர்தல்களில் தங்களுக்கு அதிக இடங்களை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டணி கட்சிகள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக