இதன் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த வகையில் மற்ற மாநகராட்சிகளில் திமுகவிடம் தண்ணி குடித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 8-வார்டு களைப் பெற்று சந்தோஷமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றி விசாரிக்க போனால் திமுகவுக்குள் நடந்துவரும் இன்னொரு கலாட்டா தெரிய வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் பதவியை முடிவு செய்வது அந்த தொகுதியின் எம்பியும் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழியா அல்லது இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதியா என்ற கேள்வி திமுக வட்டாரத்தில் சென்னை வரை எதிரொலித்தது.
இதுகுறித்து கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில் தூத்துக்குடி மேயர் பதவிக்கு கனிமொழி எம்பி தனது ஆதரவை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவனின் சகோதரர் ஜெகனுக்கு வழங்குவதாகவும்... அதேநேரம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் மேயர் ரேஸில் தீவிரமாக இருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாக அமைச்சர் கீதாஜீவன் கூட்டணிக் கட்சியினரை அழைத்துப் பேசி அவர்களுக்கான வார்டுகளை ஒதுக்கும் பணிகளை தீவிரமாக செய்தார்.
இந்த வகையில் ஜோயல் விருப்ப மனு கொடுத்த 34 வது வார்டு காங்கிரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜோயலை கவுன்சிலர் போட்டியிலிருந்து விலக்குவதற்கான ஏற்பாட்டை அமைச்சர் கீதா ஜீவன் திட்டமிட்டு செய்திருக்கிறார் என்று இளைஞர் அணியின் மத்தியில் புகைச்சல் கிளம்பியுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது..."34வது வார்டுக்கு விருப்ப மனு கொடுத்த இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் அந்த மனுவை நகலெடுத்து உதயநிதி ஸ்டாலினிடமும் கொடுத்திருந்தார். ஜோயல் சென்னையில் இருந்த போது தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக அவருக்கு ஒரு மணி நேரம் முன்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவர் அங்கு செல்லவில்லை. இந்த நிலையில் அவர் விருப்ப மனு கொடுத்திருந்த 34 வது வார்டு காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இறுதி வேட்பாளர் பட்டியல் தலைமைக்கு அனுப்பப்பட்ட நிலையில் உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளரான ஜோயலுக்கு அதில் இடம் இல்லை என்று தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோயல் தன்னை எந்த வார்டில் நிறுத்தினாலும் போட்டியிடுவதற்கு தயாராக இருக்கிறேன் என்று மாவட்ட செயலாளர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு தகவல் அனுப்பி இருப்பதாக சொல்கிறார்கள்.
அதேநேரம் மகளிர் அணி செயலாளர் கனிமொழியின் எம்பி தொகுதியான தூத்துக்குடியில் தலையிட உதயநிதி விரும்பவில்லையோ என்ற கேள்வியையும் இந்த சம்பவங்கள் எழுப்புகின்றன.
ஜோயல் கவுன்சிலர் ஆகிவிட்டால் தனது தலைமை லாபியை பயன்படுத்தி எப்படியும் மேயர் ஆகி விடுவார் என்ற எச்சரிக்கை உணர்வால் தான் அவர் விருப்ப மனு கொடுத்திருந்த வார்டு காங்கிரஸ் கட்சிக்கு திட்டமிட்டு தள்ளி விடப்பட்டது என்ற புகார்கள் இளைஞரணி சார்பில் உதயநிதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இறுதிப் பட்டியலை தலைமை வெளியிடும் போது தான் மற்ற விஷயங்கள் தெரியும்" என்கிறார்கள்.
எது எப்படியோ திமுகவுக்குள் நடக்கும் இந்த அதிகாரப் போட்டியால் தங்களுக்கு 8 வார்டுகள் கிடைத்த குஷியில் இருக்கிறது காங்கிரஸ்.
வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக