செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

கதிர் ஆனந்துக்கு எதிராக முஸ்லீம்கள்? வாணியம்பாடி அரசியல் கேங் வார்?

கதிர் ஆனந்துக்கு எதிராக முஸ்லீம்கள்?

மின்னம்பலம் : திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்தன் செயல்பாட்டால் வாணியம்பாடி நகரத்தில் முஸ்லிம்களின் ஆதரவை திமுக இழந்து விடுமோ என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து கொஞ்சம் விசாரித்து எழுதுங்கள் என்று மின்னம்பலத்துக்கு வாணியம்பாடியில் இருந்து சில தகவல்கள் வர அதுகுறித்து விசாரித்தோம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன.


கடந்த ஜனவரி 29ஆம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டப் பொறுப்பாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் முன்னிலையில், இம்மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான எ.வ. வேலு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

அப்போது வேலூர் மக்களவை உறுப்பினரான கதிர்ஆனந்த் அங்கே வந்தார். திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட வாணியம்பாடி, ஆம்பூர் நகராட்சிகள் தனது எம்பி தொகுதிக்குள் வருவதால் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அவரைப் போலவே திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் அண்ணாதுரை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

வாணியம்பாடி நகராட்சி தொடர்பான ஆலோசனையின் போது கதிர் ஆனந்த் 18 ஆவது வார்டுக்கு வாணியம்பாடி நகர அவைத்தலைவர் சையது அபீப் தங்கலின் மனைவியை மாவட்ட பொறுப்பாளர் முடிவு செய்து வைத்திருந்ததை பார்த்தார். அப்போது அவர் 18வது வார்டை முஸ்லிம் லீக் கட்சிக்கு கொடுத்துவிடலாம் என்றார்.

உடனே குறுக்கிட்ட மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ், "இல்லீங்க. 18வது வார்டு நம்ம அவைத் தலைவர் செய்யது அபீப் தங்கலோட மனைவிக்கு முடிவு செஞ்சிருக்கோம். இந்த வார்டை முஸ்லிம் லீக் கேட்கவே இல்லை' என்று சொல்லி இருக்கிறார்.

அப்போது கதிர் ஆனந்த், 'இந்த வார்டு நமக்கு வேணாம். நான் வேணும்னா அப்பாக்கு போன் பண்ணி தரட்டுமா? தலைவருக்கு போன் பண்ணி தரட்டுமா?' என்று கேட்க மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ், அருகே அமர்ந்திருந்த அமைச்சர் வேலு ஆகியோர் அதிர்ந்து விட்டனர்.

"இதுக்காக எதுக்கு இங்க அவங்களுக்கு போன் பண்ணிக்கிட்டு... 18வது வார்டை முஸ்லிம் லீக் கேட்கவே இல்லை. தவிர அங்க போட்டியிடுவதாக இருக்கிற அவைத் தலைவரோட மனைவியை சேர்மன் ஆக்கலாம்னு பேசியிருக்கோம்" என்று மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் மீண்டும் கூற... அந்த வார்டு நமக்கு வேண்டாங்க என மீண்டும் கதிர் ஆனந்த் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

இதைப்பார்த்த அமைச்சர் வேலு, 'அந்த வார்டில் என்ன பிரச்சனை என்ற பார்த்து நீங்களே பேசி முடிச்சுக்கங்க' என்று கூறிவிட்டார்.

இந்தப் பின்னணியில் வாணியம்பாடி நகராட்சி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில் மாவட்ட பொறுப்பாளரால் சேர்மன் வேட்பாளராக முடிவு செய்யப்பட்டிருந்த அவைத்தலைவர் சையது அபீப் தங்கலின் பெயர் இல்லை. அதாவது கதிர் ஆனந்த் கூறிய படி அந்த வார்டு திமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை.

வாணியம்பாடி நகராட்சி திமுக பட்டியல் வெளி வந்ததும் நகர இஸ்லாமியர்கள் மத்தியில் திமுகவினர் மத்தியில் பரபரப்பானது.

என்ன நடந்தது, என்ன நடந்து, கொண்டிருக்கிறது என்று வாணியம்பாடி திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

"வாணியம்பாடி திமுக நகர பொறுப்பாளரான சாரதி குமார் எம்.பி. கதிர் ஆனந்தின் ஆதரவாளர். எனவே வரும் தேர்தலில் தனது தாயாரான உமா பாயை நகராட்சி சேர்மன் ஆக்குவதற்காக அவர் ஆனந்த் மூலம் முயற்சிக்கிறார். சாரதி குமார் வரும் தேர்தலில் 10 வது வார்டில் போட்டியிடுகிறார். அவரது தாயார் உமா பாய் 1-வது வார்டில் போட்டியிடுகிறார்.

வாணியம்பாடியில் இஸ்லாமியர்கள் பரவலாக வசிக்கும் நிலையில் அங்கே ஒரு இஸ்லாமியரை நகராட்சி தலைவர் ஆகலாம் என மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜ் முடிவு செய்தார். அதன்படி நகர அவைத்தலைவர் ஆன சையது ஹபீப் தங்கலின் மனைவி நசிமுனிஷாவை 18வது வார்டில் நிறுத்த முடிவு செய்தார்.

நகர அவைத்தலைவரான சையது ஹபீப் வசதி மிக்கவர், நீண்டகால கட்சிக்காரர் என்ற அடிப்படையில் இந்த முடிவை எடுத்தார் தேவராஜ்.

ஆனால் கதிர் ஆனந்த் எம்பி ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ்க்கு எதிராக காய்களை நகர்த்தி திமுகவினரின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானார். ஆலங்காயம் ஒன்றியத்தில் கதிர் ஆனந்தை எதிர்த்து திமுகவினர் போராட்டம் நடத்திய சம்பவங்களும் நடந்தன.

நகராட்சி தேர்தலிலும் வாணியம்பாடி நகரத்தில் தனது ஆதரவாளர் மூலம் தனது ஆதிக்கம் நிலவ வேண்டும் என்பதற்காக கதிர் ஆனந்த் மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜால் சேர்மன் வேட்பாளராக முடிவு செய்யப்பட்ட அவைத் தலைவரின் மனைவி போட்டியிடக் கூடாது என்பதற்காக அந்த வார்டையே திமுக போட்டியிடாதவாறு செய்துவிட்டார்.

இந்தத் தகவல் அறிந்து வாணியம்பாடி ஜமாத் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். வாணியம்பாடி நகரத்துக்கு நகராட்சித் தலைவராக ஓர் இஸ்லாமியப் பெண் வருவதை கதிர் ஆனந்த் தடுக்க பார்க்கிறார் என்று முஸ்லிம்களிடையே தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து கதிர் ஆனந்த் தரப்பினரிடம் விசாரித்தபோது..."வாணியம்பாடி நகராட்சியில் நிறைய இஸ்லாமிய பெண்கள் திமுக சார்பில் போட்டியிடுகிறார்கள். சேர்மன் பதவி யாருக்கு என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. அதற்குள் எம்பி மீது சிலர் தேவையற்ற வகையில் தகவல்களை பரப்புகிறார்கள். நடப்பது கவுன்சிலர்கள் மூலமான தேர்தல் என்பதால் நகராட்சித் தலைவர் யார் என்பது கவுன்சிலர்கள் தேர்வான பின்பே தெரிய வரும். வாணியம்பாடியில் நகராட்சித் தலைவராக இஸ்லாமியப் பெண் வருவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை"என்கிறார்கள்.

வேந்தன்

கருத்துகள் இல்லை: