மாலைமலர் : தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை:: அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜனதா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இடப்பங்கீடு தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் அ.தி.மு.க.வினருடன் பேச்சு நடத்தினார்கள். அப்போது 20 சதவீத இடங்கள் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அ.தி.மு.க. தரப்பில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே வார்டுகள் ஒதுக்கீடு செய்ய முடியும் என்று கூறிவிட்டனர்.
இதனால் பா.ஜனதா அதிர்ச்சி அடைந்தது. நாகர்கோவில், கோவை மேயர் பதவிகளை ஒதுக்க வேண்டும். மேலும் வார்டுகளை பொறுத்தவரை தொகுதிக்கு ஒன்று வீதம் 21 வார்டுகள் தரவேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது.
இது பா.ஜனதாவினரிடம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பா.ஜனதா தரப்பிலும் தனித்து போட்டியிட பட்டியல் தயார் செய்யப்பட்டது.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கட்சியின் மூத்த தலைவர்களுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுதாகர் ரெட்டி, பொன்.ராதா கிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்றனர்.
அப்போது ‘அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், பா.ஜனதா-வுக்கு மிகக்குறைந்த எண்ணிக்கையில் இடம் கொடுத்தால் ஏற்க வேண்டியதில்லை என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.
சிலர் காரசாரமாக பேசினார்கள். அப்போது அவர்கள் தேவைக்கு நம்மை பயன்படுத்திக் கொண்டார்கள். இப்போது நமது சிறு எதிர்பார்ப்பை கூட நிறைவேற்ற தயாரில்லை. எனவே நாம் அவர்கள் தருவதை வாங்கிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆவேசமாக கூறினார்கள்.
அ.தி.மு.க. தரப்பில் இருந்து அழைப்பு வரும் என்ற நம்பிக்கையுடன் காத்து இருந்தனர். ஆனால் அழைப்பு எதுவும் வரவில்லை. எடப்பாடி பழனிசாமியும் சேலம் சென்று விட்டார். இதையடுத்து தனித்து போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கினர்.
இந்த நிலையில் மதியம் 1.30 மணிக்கு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து சந்திப்பது தொடர்பாக அ.தி.மு.க. தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.
அப்போது குறிப்பிட்ட எண்ணிக்கையில் இடங்களை கேட்டோம். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது.
நம்முடைய கூட்டணி என்பது தேசிய ஜனநாயக கூட்டணியாக தொடர்ந்து இருக்கும். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரை கூட்டணியில் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கும்.
முக்கிய விஷயத்தில் எங்களின் நிலைப்பாடு ஒன்றாக இருக்கும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தனித்து போட்டியிடும். எங்களின் முதல் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுகிறோம்.
கட்சி வளர்ச்சிக்கு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு, நம்முடைய இலக்கை அடைவதற்கு பிரதமர் மோடியின் கனவை ஒவ்வொரு இடத்துக்கும் எடுத்து செல்வதற்கு வீடு வீடாக தாமரையை கொண்டு செல்வதற்கும் இது ஒரு வாய்ப்பு. எல்லா இடத்திலும் ஜெயிக்க உழைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக