வியாழன், 3 பிப்ரவரி, 2022

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி

 மலைமலர் : நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகுதான், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்ப முடியும்.


ஆனால், நீட் தேர்வு மசோதா ஆளுநர் மாளிகையிலேயே கிடப்பில் இருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தின் புதிய கவர்னராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவியை சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்திவிட்டு வந்தார். ஆனாலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருந்தது.

நீட் தேர்வு
 
மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்ப  வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. இது தொடர்பாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் உள்துறை மந்திரியை சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சரியான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார். நீட் தேர்வு அவசியம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையும் ஆளுநர் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: