கலைஞர் செய்திகள் : ராமநாதபுரத்தில் சாமி சிலைகளை கடத்தி விற்பனையில் ஈடுபட முயன்ற பா.ஜ.க மாவட்ட நிர்வாகி, 2 காவலர்கள் உள்ளிட்ட 4 பேரை போலிஸார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பா.ஜ.க சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளரான முதுகுளத்துாரை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் என்பவர், சட்ட விரோதமாக தொன்மையான சுவாமி சிலைகளை விற்க முயற்சி செய்வதாக, மதுரை சிலை தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் இயக்குநர் ஜெயந்த் முரளி உத்தரவுப்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் தினகரன் மேற்பார்வையில், மதுரை சிலை தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனையடுத்து அலெக்சாண்டர் அளித்த தகவலின் அடிப்படையில், காவலர் இளங்குமரன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை தனிப்படையினர் கைது கைது செய்து விசாரணை நடத்தியதில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காவலர் இளங்குமரன் திண்டுக்கல் ஆயுதப்படை காவலரான நாகநரேந்திரன், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லை சேர்ந்த கணேசன் மற்றும் விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி ஆகிய 4 பேரும் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஒரு மலை அடிவாரத்தின் அருகில் உள்ள கிராமத்தில் சிலைகள் விற்பனைக்கு இருப்பதாக தகவல் கிடைத்து. அங்கு சென்று தாங்கள் சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர் என்று கூறி மிரட்டி அவர்களிடமிருந்து 7 உலோக சிலைகளை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கடத்திவந்த சிலைகளை பா.ஜ.க நிர்வாகி அலெக்ஸ்சாண்டர் மூலமாக சுமார் 5 கோடி ரூபாய்க்கு விற்க முயற்சி செய்துள்ளதும், மேலும் 7 சிலைகளை ராமநாதபுரம் மாவட்டம் கூரிசேத்தனார் அய்யனார் கோவிலின் பின்புறம் உள்ள ஒரு கால்வாயில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து சிலைகளை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து அலெக்சாண்டர் பதுக்கிவைத்திருந்த 2 நடராஜர் சிலைகள், நாக கன்னி, காளி, முருகன், விநாயகர், நாக தேவதை ஆகிய 7 சிலைகளை கைப்பற்றிய சிலைதடுப்பு பிரிவு காவல்துறையினர் சிலைகடத்தலில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சிறுபான்மை பிரிவு செயலாளரான அலெக்சாண்டர், காவலர்களான அருப்புக்கோட்டையை சேர்ந்த இளங்குமரன், திண்டுக்கல்லை சேர்ந்த ஆயுதப்படைகாவலரான நாகநரேந்திரன், விருதுநகர் கூரைக்குண்டு பகுதியை சேர்ந்த கருப்பசாமி ஆகிய 4 பேரை கைது செய்த நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜேஷ், விருதுநகரை சேர்ந்த கணேசன் ஆகிய இருவரும் தலைமறைவான நிலையில் தனிப்படை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
இதனிடையே கைப்பற்றபட்ட சிலைகள் எந்த கோவிலை சேர்ந்தது என்பது குறித்தும் அவற்றின் தொன்மைத்தன்மை குறித்தும் மதுரை மாவட்ட சிலை திருட்டு தடுப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
மேலும் கைப்பற்றப்பட்ட சிலைகளை கும்பகோணம் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கபடவுள்ளது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு சம்மந்தப்பட்ட சிலைகளை மீட்டு, வழக்கின் முக்கிய எதிரிகளையும் கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக