வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

ஒவைசியின் கார் மீது துப்பாக்கி சூடு .. உத்தர பிரதேசத்தில்

 மின்னம்பலம் : உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கே ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசிக்கு ஒன்றிய உள்துறை இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க முன்வந்ததை ஓவைசி ஏற்க மறுத்திருக்கிறார்.
பிப்ரவரி 3 ஆம் தேதி மேற்கு உத்தரப் பிரதேச பகுதியில் உள்ள மீரட் நகரில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, ஓவைசி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார்.
ஹபூர் மாவட்டம் பில் குவா பகுதியில் சாஜர்ஷி டோல்கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது ஓவைசியின் காரின் முன் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.


குண்டு பாய்ந்த தனது காரை படம் பிடித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஓவைசி, இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார். "ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் எப்படி அவர்களால் சுட முடிந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மத்தியில் ஆளும் பாஜகவும் மாநிலத்தில் ஆளும் பாஜகவும் தான் இதற்கு பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களாக சந்தேகத்திற்குரிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஓவைசிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கலாம் என உள்துறை அமைச்சக அதிகாரிகளை மேற்கோள்காட்டி இன்று காலை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் இன்று மக்களவையில் பேசிய ஓவைசி, " இப்போது இந்தியா இரண்டு பிரிவுகளாக உள்ளது. ஒன்று அன்பாலான இந்தியா. இன்னொன்று வெறுப்பால் ஆன இந்தியா. இளைஞர்களை வெறுப்பு மயமாக்குவது யார்? என் மேல் தாக்குதல் நடத்தியவர்களை யூ ஏ பி ஏ சட்டத்தின் கீழ் ஏன் தண்டிக்க கூடாது? என்னை இந்தியாவின் ஏ கிளாஸ் குடிமகனாக நடத்துங்கள் போதும். எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு எல்லாம் வேண்டாம் "என்று கூறினார்.

வேந்தன்

கருத்துகள் இல்லை: