அவர் பேசுகையில், “தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், பெண்களை அவமதிக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் .
உத்தரப் பிரதேசத்திலிருந்து புண்ணிய பூமியான தமிழகத்துக்கு வந்திருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். பாரத நாட்டில் சிறப்பு வாய்ந்த தமிழகத்தில் சாதுக்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் ஏராளமானோர் உள்ளனர். இந்தியாவில் அனைத்து பண்பாடுகள், கலாச்சாரம் நிறைந்த மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. இந்த கலாச்சாரம், பண்பாடுகளை உலக நாடுகளில் உரக்கப் பேசி வருகிறார் பிரதமர் மோடி.
தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக, பாமக, தமாகா வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். மத்தியில் கடந்த 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பல கிராமங்களில் மின்சாரம் கூட கிடைக்கவில்லை. தற்போதைய மத்திய பாஜக அரசு, அனைத்து கிராமங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கியுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்குதல், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ரூ. 5 லட்சம் காப்பீடு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு கேட்க வேண்டும்.
மத்திய பாஜக ஆட்சியில் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு அவசியம். அதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் ஊழல், பெண்களுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்திருந்தன. எனவே, பெண்களை அவதிக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய மக்கள் வாக்களிக்க வேண்டும்.
விருதுநகரில் சா்வதேச அளவில் பல்கலைக்கழகம், விளையாட்டு மைதானம், இளைஞர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கப்படும்” என்றாா்.
பிரச்சாரத்தை முடித்த அவர் தனி ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் வந்தார். அங்கு அவருக்கு மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். பின்னர் கார் மூலம் யோகி ஆதித்யநாத் ராமேஸ்வரம் சென்றார்.
நேற்று இரவு ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்த அவர் 22 புனித தீர்த்த நீரைத் தலையில் தெளித்துக் கொண்டார். பின்னர் கோவிலில் நடந்த ஸ்படிகலிங்க பூஜையில் கலந்து கொண்டு சாமி கும்பிட்டார்.
தொடர்ந்து காசிவிஸ்வநாதர்- பர்வதவர்த்தினி அம்பாளைத் தரிசனம் செய்தார். கோவிலில் நடந்த ருத்திராபிஷேக பூஜையில் கலந்துகொண்டார். முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனை முடித்துக் கொண்ட அவர் ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் இரவு தங்கினார்.
இன்று காலை யோகி ஆதித்யநாத் தனுஷ்கோடிக்குச் சென்றார். அங்குப் புயலால் சிதிலமடைந்த கட்டிடங்களைப் பார்வையிட்ட பின் கடல் அழகை ரசித்தார். பின்னர் குந்துகால் பகுதியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து கார் மூலம் அவர் மண்டபம் விமானப்படைத் தளத்துக்குச் சென்று ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்குப் புறப்பட்டார். மதுரையிலிருந்து விமானம் மூலம் கொச்சி புறப்பட்டுச் சென்றார்.
சக்தி பரமசிவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக