புதன், 31 மார்ச், 2021

காடுவெட்டி குருவின் மனைவி.. பாலுவின் வாக்குகளை பிரிப்பாரா..?

Kaduvetti Guru's wife .. Will  divide Balu's votes ..?
nakkheeran.in - எஸ்.பி. சேகர் : ஒருங்கிணைந்த அரியலூர் - பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஆண்டிமடம், ஜெயங்கொண்டம்,  அரியலூர்,  வரகூர்,  பெரம்பலூர்  என ஐந்து தொகுதிகள் இருந்தன. 2011இல் தொகுதி மறுசீரமைப்பின்போது, ஆண்டிமடம் தொகுதியில் இருந்த செந்துறை ஒன்றியத்தை வரகூர் தொகுதியில் இணைத்து குன்னம் என்று பெயர் வைக்கப்பட்டது. அதேபோன்று, ஆண்டிமடம் ஒன்றியத்தை ஜெயங்கொண்டம் தொகுதியில் இணைத்தனர். ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமகவிற்கு என்று பலமான வாக்கு வங்கி  உள்ளது. இதை ஒவ்வொரு சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களிலும் எதிரொலித்தன. அதன் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் பாமக ஜெயங்கொண்டம் தொகுதியை வலியுறுத்தி வாங்கியுள்ளது. 

 Kaduvetti Guru's wife .. Will  divide Balu's votes ..?

 இந்த தொகுதியில் அன்புமணி நிற்கப் போவதாக கூறப்பட்டுவந்த நிலையில், டாக்டர் ராமதாஸும் அன்புமணியும் பாமகவின் பிரபல வழக்கறிஞர் பாலுவை வேட்பாளராக களம் இறக்கியுள்ளனர். தொகுதியில் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்த வைத்திக்கு பெரும் ஏமாற்றம். அதோடு தொகுதி மாறியதால் அதிமுகவினர் மத்தியிலும் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக மாவட்டச் செயலாளரும், அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் நேரடியாக கட்சிப் பிரமுகர்களிடம் பேசி சரி செய்து, அதிமுகவினரை தேர்தல் களத்தில் இறக்கிவிட்டுள்ளார். தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. ராம செயலிங்கம் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்கள். 

 இந்த நிலையில், காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மாவீரன் ‘மஞ்சள் படை’ என்ற ஒரு அமைப்பை நடத்திவருகிறார். இவரை திமுக இளைஞர் அணி உதயநிதி ஸ்டாலின் சென்று சந்தித்து வந்தார். இதனால் கனலரசன் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவார் என்று பேசப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத திருப்பமாக, பாரிவேந்தர் பச்சமுத்துவின் கட்சியோடு கூட்டணி வைத்து, காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதாவை வேட்பாளராக அறிவித்து வேட்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளார் கனலரசன். இதனால் வன்னியர் வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பாமகவினர் மத்தியில் சிறிது வருத்தம் நிலவுகிறது.

 Kaduvetti Guru's wife .. Will  divide Balu's votes ..?


 காடுவெட்டி குருவின் பல்வேறு வழக்குகளை பாலு தனது வழக்கறிஞர் டீமுடன் முன்னின்று வாதாடி அவரை விடுதலை செய்ய வைத்தவர். அப்படிப்பட்டவருக்கு எதிராக குருவின் குடும்பமே திசை திரும்பியுள்ளது. இது பாமகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தும் பாலு வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள் பாமக, அதிமுக, பிஜேபி ஆகிய கூட்டணி கட்சியினர்.

 Kaduvetti Guru's wife .. Will  divide Balu's votes ..?


 திமுக வேட்பாளர் க.சொ.க. கண்ணன். இவரது தந்தை கணேசன், ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். மக்களிடம் மிகுந்த செல்வாக்கோடு வலம் வந்தவர். அவரது மகன் கண்ணனும் தந்தையைப் போன்றே மக்களோடு நெருக்கமாக, அவர்களது இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு சிறப்பாக பணிசெய்து வருபவர். அதனால் கட்சி கடந்து இவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று கூறுகின்றனர். அதோடு விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டுகள் ஆகிய கூட்டணி பலத்தினால் வெற்றி உறுதி என்கிறது திமுக தரப்பு. 

 இவர்களோடு, நாம் தமிழர் கட்சி சார்பில் நீல மகாலிங்கம், அமமுக சார்பில் சிவா என்கிற கொளஞ்சியப்பன் ஆகியோரும் போட்டியில் உள்ளனர். பாமக பாலு, திமுக கண்ணன் இருவரில் ஒருவரது வெற்றி உறுதி. இதில் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா எந்த அளவுக்கு வாக்குகளைப் பிரிப்பார், இதனால் யாருக்கு லாபம் நஷ்டம் என்பது விவாதமாக நடந்து வருகிறது. காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா, கணிசமான அளவில் வாக்குகளைப் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு. அவர் பிரிக்கும் வாக்குகள் பாமக பாலுவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

கருத்துகள் இல்லை: