தமிழ் இந்து :சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் காவல் குழுவினருடன் ஒருங்கிணைந்து நடத்திய வாகன சோதனையில் நேற்று ஒரே நாளில் 22 இடங்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.10.35 கோடி ரொக்கப் பணம், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''வருகிற 06.4.2021 அன்று தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் பறக்கும் படையினர் (FST), நிலையான கண்காணிப்புக் குழுவினர் (SST) சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸாருடன் ஒருங்கிணைந்து சென்னை பெருநகரின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கைகள் செய்து வருகின்றனர்.
இந்த வாகனத் தணிக்கையில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் விதிமுறைகள் மீறிச் செயல்படுவோர் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக நேற்று (31.3.2021) சென்னை பெருநகரில், தேர்தல் பறக்கும் படையினர் (FST), நிலையான கண்காணிப்புக் குழுவினர் (SST) சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸாருடன் ஒருங்கிணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்கள் நடத்திய வாகன சோதனையில் சென்னையில் 22 இடங்களில் உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்து வரப்பட்ட மொத்தம் பணம் ரூ.10,35,83,948/-, லேப்டாப், செல்போன்கள் அடங்கிய எலக்ட்ரானிக் பொருட்கள், 90 அரிசி மூட்டைகள் மற்றும் ரூ.50,000 மதிப்புள்ள விளையாட்டுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணைக்குப் பின்னர் கைப்பற்றப்பட்ட பணம், பொருட்கள், வாகனங்கள் மற்றும் வாகனத்தில் வந்த நபர்களுடன் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் அதிகபட்சமாக, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய எல்லையில் நடைபெற்ற சோதனையில் ஒரு வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட பணம் ரூ.3,கோடியே 59 லட்சம், திருவல்லிக்கேணி காவல் நிலைய எல்லையில் ஒரு வாகனத்தில் ரூ.2 கோடியே 53 லட்சம் ரொக்கப் பணம், ஓட்டேரி காவல் நிலைய எல்லையில் ஒரு வாகனத்தில் ரூ.1 கோடியே 31 லட்சம் ரொக்கப் பணம், மயிலாப்பூர் காவல் நிலைய எல்லையில் ஒரு வாகனத்தில் 1 கோடியே 14 லட்சத்து 93 ஆயிரத்து 900 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜாம் பஜார் காவல் நிலைய எல்லையில் ஒரு வாகனத்தில் 18 லேப்டாப்கள், 8 கேமராக்கள், 67 ஐபோன்கள், 20 ஆப்பிள் கைகடிகாரங்கள் உட்பட எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல் அனைத்துச் சரக காவல் அதிகாரிகளும், தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை திறம்படச் செயல்படுத்திட உரிய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக